அண்மைய செய்திகள்

recent
-

3000 குடும்பங்களை மன்னாரில் கடனாளிகளாக மாற்றியுள்ள தேசிய வீடமைப்பு அதிகாரசபை

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் கடந்த 2018, 2019 ஆம் ஆண்டு “செமட்ட செவன” மாதிரி செயற்திட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தின் ஊடாக மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 3022 குடும்பங்களில் சில குடும்பங்கள் பகுதியளவிலும் பல குடும்பங்கள் முழுமையாகவும் கடனாளியாகியுள்ளனர் மன்னார் மாவட்டத்தில் உள்ள மிகவும் பின் தங்கிய குடும்பங்களை முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்து நேரடி களவியத்தின் ஊடாக 2018,2019 ஆண்டு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினர் மற்றும் பிரதேச செயலகங்கள் இணைந்து வீட்டு திட்ட பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு ஐந்து லட்சம் மற்றும் ஏழு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான வீட்டுத்திட்டத்திற்கான செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர் அதன் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் தாங்கள் தற்காலிகமாக வசித்து வந்த குடிசை வீடுகளையும் உடைத்து கல் வீடும் கட்டும் கனவில் அவசர அவசரமாக அடிக்கள் நாட்டும் பணிகளை முன்னெடுத்திருந்தனர்

 தேசிய வீடமைப்பு அதிகார சபையின் நிபந்தனையின் அடிப்படையில் வீடுகளின் நிர்மாணத்திற்கு அமைய எட்டு விதமாக வரையறுத்து பகுதி பகுதியாக அவர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டிருந்தது குறிப்பாக வீட்டுக்கான அடித்தளம்,அடித்தளம் முடிவுறுத்தப்படல்,ஜன்னல் அளவு,லின்றர் அளவு,கூறை பூர்த்தி என எட்டு அளவிடையை கொண்டு கொடுப்பனவுகள் செலுத்துவதாக வீட்டுத்திட்ட பயணாலிகளுக்கு தெரிவிக்கப்பட்டு வீட்டு திட்டமும் ஆரம்பிக்கப்பட்டது ஆனாலும் வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 3 வருடங்கள் கடந்துள்ள நிலையில் பல குடும்பங்கள் அத்திவரம் அமைத்ததற்கு உரிய பணமே கிடைக்காத நிலையில் கடனாளிகளாக கடன் சுமையுடன் வாழ்ந்து வருகின்றனர் 

 கல் வீடு கட்ட வேண்டும் என்ற கனவிலும் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் ஆறுமாத காலத்திற்குள் வீட்டை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நிர்பந்ததாலும் காதிலும் கழுத்திலும் இருந்த நகைகளை அடகு வைத்தும் வட்டிக்கும் நுன்நிதி நிறுவனக்களிடமும் கடன் பெற்றும் அமைக்கப்பட்டு வீடுகளை பூர்த்தி செய்யமுடியாத நிலையில் பலரும் பூர்த்தி செய்யப்பட்டும் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் கொடுப்பனவு பெறாத நிலையிலும் பல குடும்பங்கள் மன்னாரில் செய்வதறியாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர் நாட்டில் எற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி பொருட்களின் விலையேற்றம் என நடுத்தர குடும்பங்கள் மற்றும் வறிய குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வீட்டு திட்டத்திற்காக பெற்ற கடன்களையும் செலுத்த முடியாத நிலையில் பல போராட்டங்களையும் சவால்களையும் வீட்டுத்திட்ட பயனாலிகள் அனுபவித்து வருகின்றனர் மன்னார் பிரதேச செயலக பிரிவில் மாத்திரம் சுமார் 1656 குடும்பங்கள் இந்த வீட்டுத்திட்டத்தினால் கடனாளிகளாக மாறியுள்ளனர்

 தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினரால் 1656 குடும்பங்களுக்கும் 1242 மில்லியன் ரூபாய்கள் கொடுப்பனவாக செலுத்த வேண்டியிருந்தும் இதுவரை 182.987 மில்லியன்கள் மாத்திரமே செலுத்தப்பட்டிருக்கின்றது அதிலும் 684 குடும்பங்கள் அத்திவாரத்தை மாத்திரமே அமைத்து விட்டு அரச கொடுப்பனவுக்காக காத்திருக்கின்றனர் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் தகவலின் பிரகாரம் இதுவரை 28 குடும்பங்கள் மாத்திரமே வீட்டை முழுமையாக கட்டி முடித்துள்ளனர் மிகுதி 1628 குடும்பங்களின் நிலமை மழைகாலங்களில் கவலைக்கிடமாகவே உள்ளதுடன் பகுதியளவில் மாத்திரமே முடிக்கப்பட்ட வீட்டில் கிடுகளை மேய்ந்து தற்காலிகமாக வசித்து வருகின்றனர் அதே போன்று நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு பிரதேச செயலகங்களை சேர்ந்த 535 குடும்பங்கள் இந்த வீட்டுத்திட்டத்தினால் கடனாளிகளாக்கப்பட்டுள்ளனர்

 தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் 401.25 மில்லியன் ரூபா 535 வீட்டு திட்ட பயனாலிகளுக்கும் ஒதுக்கப்பட்ட நிலையில் இதுவரை வெறுமனே 84.915 மில்லியன்களே பகுதி பகுதியாக மக்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளதுடன் என்னும் 316.335 மில்லியன் ரூபா வீட்டு திட்ட பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை உள்ளது இது ஒருபுறம் இருக்க இதே வீடமைப்பு அதிகார சபை 2018 ஆண்டு மன்னார் மாவட்டத்தில் முதல் கட்டமாக ஆரம்பித்த செமட்ட செவன வேலைய்திட்டத்தில் ஐந்து லட்சம் ரூபா வீட்டு திட்டம் ஒன்றை ஆரம்பித்து நடை முறைப்படுத்தியிருந்தது அவ் வீட்டுத்திட்டத்திற்கு கூட முழுமையான முறையின் கொடுப்பனவுகள் வழங்கவில்லை என்பது அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது 2018 ஆண்டு முன்னெடுக்கப்பட்ட குறித்த செயற்திட்டத்தில் 831 பயனாளிகள் உள்வாங்கப்பட்ட நிலையில் அவர்களுக்கான வீட்டு திட்டத்திற்காக 415.500 மில்லியன் ஒதுக்கப்பட்ட போதிலும் இதுவரை 310.114 மில்லியன்கள் மாத்திரமே செலுத்தப்பட்டுள்ளது 

மேலதிகமாக என்னமும் 105.386 மில்லியன் ரூபா செலுத்தப்பட வேண்டியுள்ளது இவ்வாறு 2018 ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத்திட்டமே பூரணப்படுத்தப்படாத நிலையிலும் முழுமையான தொகை விடுவிக்கப்படாத நிலையிலும் முன்னால் வீடமைப்பு காலாச்சார அபிவிருத்தி அமைச்சர் சஜித் பிரேமதாச தனது சுயநல அரசியல் லாபத்திற்காக பல ஆயிரக்கனக்கான குடும்பங்களையும் பல லட்சக்கனக்கான மக்களையும் கடனாளியாகவும் அதே நேரம் தேசிய வீடமைப்பு அதிகாரசபையையும் கடன் சுமைக்குள் தள்ளியுள்ளார் 2018,2019 பங்குனி மாதம் ஆரம்பிக்கப்பட்ட குறித்த வீட்டு திட்டத்தின் பயனாளிகள் மூன்று வருடங்கள் கடந்த நிலையில் பல போராட்டங்கள் நடாத்தி பல முறை தேசிய வீடமைப்பு அதிகார சபை அலுவலகத்திற்கு சென்றும் இதுவரை அவர்களுக்கு மூன்று வருடங்களாக ஒரு ரூபாய் கூட கொடுப்பனவு வழங்கப்படவில்லை

 இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கம் தேசிய வீடமைப்பு அதிகார சபையினர் மற்றும் குறித்த நிறுவனத்திக்கு பொறுப்பான இன்னால் மற்றும் முன்னால் அமைச்சர்கள் இம் மக்களின் பிரச்சினைகளுக்கு எவ்வாறான நிவாரணத்தை வழங்க போகின்றார்கள் என்பது வீட்டு திட்ட பயணாளிகளின் கேள்வியாகும் ஒட்டு மொத்தமாக மன்னார் மாவட்டத்தில் உள்ள 3022 குடும்பங்களுக்கு சுமார் 1480.735 மில்லியன் ரூபாய்கள் தேசிய வீடமைப்பு அதிகாரசபையினர் செலுத்த வேண்டியுள்ளது மன்னார் மாவட்டத்தில் மாத்திரம் இல்லாமல் இதே நிலைமை முல்லைதீவு, மற்றும் கிளிநொச்சி, வவுனியா,யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் நிலவிவருகின்றது 

 இந்த நிலையில் நாட்டில் நிலவி வருகின்ற பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் பிரச்சினைகள் டொலர் தட்டுப்பாடு காரணமாக கடன் சுமையுடனும் கட்டிமுடிக்கப்படாத வீடுகளில் வசித்து வரும் இம் மக்களின் கோரிக்கை அரசாங்கத்திற்கு கேட்காமலே பேய்விட்டது வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் பாராளுமன்றத்தில் குறித்த விடயம் தொடர்பாக கேள்விகள் எழுப்பிய போது வீடமைப்புக்கு பொறுப்பாக இருந்த முன்னைனால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ வீட்டுத்திட்ட பயணாளிகள் அனைவருக்குமான பணம் விடுவிக்கப்படும் என பகிரங்கமாக அறிவித்திருந்தார் ஆனாலும் அவர் ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கியெறியப்பட்ட நிலையில் இலங்கை அரசாங்கம் தற்போது சர்வதேச ரீதியான பிரச்சினைகளுக்கும் எரிபொருள் பிரச்சினைக்கும் மாத்திரமே முன்னுரிமை கொடுத்து வருவதுடன் இவ்வாறு கடனாளியாக்கப்பட்ட பல ஆயிரக்கனக்கான குடும்பங்களின் கோரிக்கைகளை கிடப்பில் போட்டுள்ளது

 ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த நல்லாட்சி அரசங்க காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இவ் வீட்டுத்திட்டமானது நீண்ட நாட்கள் கைவிடப்பட்டிருந்த நிலையில் வீட்டு திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க தற்போது இந்த நாட்டின் ஜனாதிபதியாகியுள்ள நிலையில் நிறுத்தப்பட்ட கொடுப்பனவுகள் ஒரு பகுதியாவது கிடைக்காதா என பல குடும்பங்கள் அன்றாடம் வீடமைப்பு அதிகாரசபை அலுவலகங்களுக்கு பயணித்து கொண்டே இருக்கின்றனர் இவ்வாறான நிலையில் இவர்கள் வீட்டு திட்டங்களை ஆரம்பிக்கும் போது இருந்த பொருட்களின் விலை அப்போதைய நிலையை விட பல மடங்கு அதிகரித்துள்ளது 

அதே நேரம் வீட்டு திட்டத்திற்கு என இவர்கள் வாங்கிய கடன்கள் மற்றும் இவர்கள் அடகு வைத்த நகைகளின் வட்டிகளும் கணிசமாக அதிகரித்திருக்கும் என்பது உண்மையே ஆனாலும் இவர்களுக்கான கொடுப்பனவு கிடைக்கும் போது அரசாங்கத்தினால் இவ் விடயங்கள் கரிசனையில் கொள்ளப்படுமா என்பது கேள்வியே எது எவ்வாறு இருப்பினும் கொடுப்பனவு அதிகரிக்கப்படாவிட்டாலும் ஒதுக்கிய தொகைகளையாவது விரைவில் விடுவிக்க மாட்டாரகளா என்ற கேள்விகளுடனேயே இம் மக்களின் ஒவ்வொரு நாள் காலையும் விடிகின்றது இம் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்குமா என்பதை காலம்தான் தீர்மானிக்க வேண்டும்




















3000 குடும்பங்களை மன்னாரில் கடனாளிகளாக மாற்றியுள்ள தேசிய வீடமைப்பு அதிகாரசபை Reviewed by Author on August 23, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.