அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாக சமய நல்லிணக்கத் திட்டத்தை அமுல்படுத்தி வரும் கறிற்றாஸ் வாழ்வுதயம்.

கறிற்றாஸ் வாழ்வுதயம் கடந்த பல ஆண்டுகளாக சமய நல்லிணக்கத்திட்டத்தை மன்னார் மாவட்டத்தில் அமுல் படுத்தி வருகின்றது. சமய முரண்பாடுகள் பல கோணங்களில் தூண்டப்பட்டாலும் இந்தச் சமய நல்லிணக்கத் திட்டமானது அந்த முரண்பாடுகளுக்கு தீர்வு காணவும், சமய ஒற்றுமையை வளர்க்கவும் பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அரசியல் நோக்கங்களை பின்புலமாகக் கொண்டு அசௌகரியங்கள் உருவாக்கப்பட்டாலும் சாதாரண மக்களை தெளிவூட்டி சமாதானப் படுத்துவதில் இத்திட்டம் பாரிய பங்களிப்புச் செய்கின்றது.

  சமய நல்லிணக்க குழுக்கள் உருவாக்கம் 

தெரிவு செய்யப்பட்ட இலக்கு கிராமங்களில் (அளவக்கை, செம்மண் தீவு, அடம்பன், ஆண்டான்குளம், வட்டக்கண்டல்) இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் சமயங்களைச் சேர்ந்த மக்களை ஒன்று திரட்டி அரச அதிகாரிகளின் உதவியுடன் கிராம மட்ட சமய நல்லிணக்க குழுக்கள், சிறுவர் குழுக்கள், இளையோர் குழுக்கள், மாவட்ட மட்ட ஆலோசனைக் குழு என பல பயனுள்ள செயற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. விசேடமாக, சமய நல்லிணக்க குழுக்களின் சிறப்பான செயல்பாடுகள் பல சமூகமட்ட அமைப்புகளுக்கு சவாலானதும், எடுத்துக் காட்டும் ஆகும். 

மாதாந்தக் கூட்டம் நடாத்துதல், அங்கத்தவர்களுக்கு பயனுள்ள கருத்தரங்குகளை ஒழுங்கு செய்தல், மாலை நேர வகுப்புகளை மேற்பார்வை செய்தல், சமய விழாக்களை முன்னின்று நடாத்துதல், பொது நிகழ்வுகளுக்கு தலைமை தாங்குதல், நோயாளர்களை பார்வையிடுதல், சமய ஸ்தலங்களைத் தரிசித்தல், சமயங்களுக்கு இடையில் பகிர்வு, உறுப்பினர்கள் அல்லது உறுப்பினர்களின் உறவுகள் இறந்தால் சமைத்த உணவு வழங்குதல், நோயாளர்களை பார்வையிடுதல் என்பனவாகும். இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் எனும் வேறுபாடுகள் இன்றி சிறுவர்களும், இளையோரும், பெரியோரும் ஒரே குடும்பமாக, உறவுகளாக, நண்பர்களாக இணைந்திருப்பது சமய நல்லிணக்கத்தின் ஆரோக்கியமான அறிகுறியாகும்.

  மாவட்ட மட்ட சமய நல்லிணக்க ஆலோசனைக்குழு. 

இஸ்லாமிய மௌலவிகள், பௌத்த பிக்கு, கிறிஸ்தவ அருட்தந்தையர்கள், இந்துக்குருக்கள் என நான்கு சமயத் தலைவர்கள் உட்பட இலக்கு கிராம அலுவலர்கள், ஊடகவியலாளர்கள், கிராம மட்ட சமய நல்லிணக்கக் குழுக்களின் பிரதிநிதிகள் இதில் அங்கம் வகிக்கிறார்கள். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூடும் இவர்களின் கூட்டத்தில் சமூகப்பிரச்சனைகள், சமய முரண்பாட்டை தோற்றுவிக்கும் கிராமிய செயற்பாடுகள், சமய நல்லிணக்கத்திற்கான ஆலோசனைகள் என்பன கலந்துரையாடப்படும். இரு சமய மக்களுக்கு இடையிலான காணிப் பிரச்சினைகள், அல்லது வேறு முரண்பாடுகள் என்றால் இந்த ஆலோசனைக்குழு அவர்களைச் சந்தித்து பிரச்சனைகளுக்கான தீர்வுகள், சுமூகமான முடிவுகளை வழங்கும். 

  அனர்த்த கால உதவிகள் 

கோவிட் தொற்று உச்சக்கட்டத்தை அடைந்து மக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்ட காலப்பகுதியில் அரச அதிகாரிகளின் ஒத்துழைப்புடனும், வழிகாட்டுதல் களிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன மத பேதமின்றி உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. அத்துடன் மக்களை பாதுகாக்கும் நோக்குடன் விழிப்புணர்வுகள் நடாத்தப்பட்டன, பொது இடங்களிலும், சமய ஸ்தலங்களிலும் கைகழுவும் தொட்டிகள் அமைக்கப்பட்டன. கோவிட் தடுப்பூசி போடுவதற்கு மக்களை அணி திரட்டுவதற்கும், ஊக்கப் படுத்துவதற்கும் சமய நல்லிணக்க அணியினரும், இலக்கு கிராம மக்களும் அரச அதிகாரிகளுடன் இணைந்து பாரிய நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்.

 தடுப்பூசி போடுவதற்கு மருத்துவ அதிகாரிகள் இலக்கு கிராமங்களை அடைந்தபோது சமய நல்லிணக்க குழு உறுப்பினர்கள் தம்மால் முடிந்த உதவிகளை புரிந்தார்கள். மக்களை ஒழுங்குபடுத்துதல், இடங்களைத் தயார்படுத்துதல், உணவு வழங்குதல், தகவல்களை சேகரித்தல் முதலான செயற்பாடுகளிலும் ஈடுபட்டார்கள். இவ்வாறு உருவாக்கப்பட்ட நெருக்கமான உறவின் காரணமாக சமய நல்லிணக்க குழுக்கள் பொதுச் சுகாதார அதிகாரிகளை தமது மாதாந்த கூட்டங்களுக்கு அழைத்து மக்களுக்கு விழிப்புணர்வுகளை நடாத்தினார்கள். முகக்கவசம் அணிதல், கை கழுவுதல், இடைவெளி பேணுதல் முதலான கருத்தூட்டல்கள் மக்களுக்கு வழங்கப்பட்டன.

 மிகவும் இறுக்கமான காலகட்டங்களில் பொதுக்கூட்டங்களை தவிர்த்து சிறு சிறு குழுக்களாக சில உறுப்பினர்களின் வீடுகளிலும் இந்த விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டன. மக்கள் சமய வேறுபாடுகள் இன்றி ஒரே சமூகமாக இவற்றில் பங்கெடுத்தமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை, அரசின் புதிய கொள்கையாக ரசாயன உரம் தடை செய்யப்பட்ட போது இந்நிறுவனம் சமய நல்லிணக்க திட்டத்தின் ஊடாக கூட்டுப்பசளை தயாரித்தல், வீட்டுத்தோட்டம் செய்தல், பாரம்பரிய விதை உற்பத்தி, சேமிப்பு, பண்டைமாற்று முறைமைகள் முதலான விடயங்களை முன் நிறுத்தி விழிப்புணர்வுகள் ஊட்டப்பட்டன. இப்படியான பல செயற்பாடுகள் காலத்தின் தேவைக்கும், மக்களின் மேம்பாட்டிற்குமாக முன்னெடுக்கப்பட்டன, இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

  சமய விழாக் கொண்டாட்டங்கள் 

ஒளிவிழா, றம்ழான், தீபாவளி, தமிழ்-சிங்களப் புத்தாண்டு முதலான சமயம் சார் பொது விழாக் கொண்டாட்டங்கள் முன் னெடுக்கப்படுவதன் சிறப்பு யாதெனில் தீபாவளி ஆயத்தங்களில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் ஈடுபடுவதும், றம்ழான் கொண்டாட்டத்தில் இந்துக்களும், கிறிஸ்தவர்களும் தலைமைதாங்குவதும், ஒளிவிழா நிகழ்வுகளை இந்துக்கள், இஸ்லாமியர்கள் முன் நின்று நடத்துவதும் ஒற்றுமை, சகோதரத்துவம், சமாதானம் என்பவற்றின் வெளிப்பாடாக கொள்ள முடியும். றம்ழான் கொண்டாட்டத்தின்போது கிறிஸ்தவர்களும், இந்துக்களும் பள்ளிவாசல் உள்ளே சென்று பண்டிகை உணவுகளைப் பரிமாறி, உறவுகளைப் புதுப்பித்து உருவான உணர்வுகளை மறக்க முடியாத ஒன்றாக பலரும் பகிர்ந்து கொண்டமை இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகும். 

 ஒளிவிழா நிகழ்விற்கு இந்துக்கள் இயேசு பிறப்பு கதை எழுதி நாடகமாக்கி அரங்கேற்றியமை பலராலும் பாராட்டப்பட்ட ஒன்றாகும். இந்தக் கொண்டாட்டங்களில் நிகழ்த்தப்படும் சமயத் தலைவர்களின் உரைகள் அனைவரும் அனைத்து சமயங்களின் விழுமியங்களையும், பொதுத்தன்மைகளையும், தனிச்சிறப்பு களையும் அறிந்து கொள்ள வாய்ப்பு உருவாகிறது. குறிப்பாக, சிறுவர்களும், இளையோரும் இந்தக் கொண்டாட்ட நிகழ்வுகளில் பங்கெடுப்பது மன்னார் மாவட்டத்தின் எதிர்கால சமய நல்லிணக்கதிற்கு இப்போது இடப்படும் உறுதியான அத்திவாரம் ஆகும். சிறுவர்கள் இந்தக் கொண்டாட்ட நாட்களில் தமது பிறசமய நண்பர்களின் வீடுகளுக்கு செல்லுதல், மகிழ்ச்சியில் பங்கெடுத்தல், நட்பை ஆழப்படுத்தல் பார்ப்பதற்கு அழகும், உறவுக்கு வழியுமாக அமைந்துவிடுகிறது இந்தக் கொண்டாட்டங்கள்.









மன்னார் மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாக சமய நல்லிணக்கத் திட்டத்தை அமுல்படுத்தி வரும் கறிற்றாஸ் வாழ்வுதயம். Reviewed by Author on December 09, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.