தமிழ் பொதுவேட்பாளர் நாளை அறிவிக்கப்படுவார் - கே.வி.தவராசா, பா.அரியநேந்திரன் ஆகியோருடன் பேச்சு
ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் களமிறக்கப்படவுள்ள பொதுவேட்பாளரின் பெயர் நாளை வியாழக்கிழமை (08) அறிவக்கப்படவுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் களமிறக்குவதற்குத் தகுதியான பொதுவேட்பாளர் யார் என்பது குறித்தும் , நிதி மற்றும் பரப்புரை நடவடிக்கைகளுக்கான உபகுழுக்களை நியமிப்பது குறித்தும் ஆராயும் நோக்கில் கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் கூடிய தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பு, தமிழ் பொதுவேட்பாளரின் பெயரை ஓரிரு தினங்களில் அறிவிப்பதற்குத் தீர்மானித்தது.
அன்றைய கூட்டத்தில் நிதி மற்றும் பரப்புரை நடவடிக்கைகளுக்கான உபகுழுக்களுக்கான உறுப்பினர்கள் தொடர்பில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அதற்கமைய எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலில் தமிழ்மக்கள் சார்பில் களமிறக்குவதற்கான பொதுவேட்பாளராக பல்வேறு நபர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டு ஆராயப்பட்ட நிலையில், அவர்களில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் மற்றும் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் கே.வி.தவராசா ஆகியோரின் பெயர்கள் இறுதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.
இவ்விடயம் தொடர்பில் அவர்கள் இருவருடனும் கலந்துரையாடி, யாரை ஜனாதிபதித்தேர்தலில் களமிறக்கப்போகிறோம் என புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை அறிவிப்பதாக தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சிறிகாந்தா தெரிவித்திருந்தார்.
அதன்படி நேற்று புதன்கிழமை இதுபற்றி அவரிடம் வினவியபோது, பொதுவேட்பாளரின் பெயர் இன்று வியாழக்கிழமை அறிவிக்கப்படும் என அவர் உறுதிப்படுத்தினார்.
Reviewed by Author
on
August 07, 2024
Rating:


No comments:
Post a Comment