அண்மைய செய்திகள்

recent
-

ஜே.வி.பியின் கருத்துக்கு எதிராக விக்கி போர்க்கொடி: அது மிகப் பெரிய ஆபத்து என்கிறார்

"அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் எங்களுக்கு எந்தக் காலத்திலும் ஒரு நிரந்தர தீர்வாக அமையாது. ஆனாலும், இப்போது இருக்கும் 13 ஐயும் நாங்கள் பறிகொடுத்துவிட்டு ஜே.வி.பியினர் கூறுவது போன்று எல்லோரும் சமம் என்று போனால் அது மிகப் பெரிய ஆபத்தாகும்."

- இவ்வாறு தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் யாழ்ப்பாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை வெளியிட்டு வைக்கப்பட்டது. இதன்போது நடத்திய ஊடக சந்திப்பின்போதே விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"13 ஆவது திருத்த சட்டத்துக்கு எதிராக அந்தக் காலத்திலே இருந்து ஜே.வி.பியினர் செயற்பட்டனர். ஆனால், ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அதற்கு மாற்றான கொள்கையுடன் அவர்கள் வாக்குக் கேட்டனர். இவ்வாறான நிலையில் இப்போது மீண்டும் தமது நிலைப்பாட்டையா ரில்வின் சில்வா ஊடாக வெளிப்படுத்த ஜே.வி.பியினர் முயல்கின்றனர்.?

ஆனாலும், அக்கட்சியின் பிமல் ரத்நாயக்க அப்படி அவர் கூறவில்லை என்றவாறாகக் கூறியிருக்கின்றார். இதனூடாக தமிழ் மக்களுக்கு எதிராக இவ்வாறான கருத்துக்களைக் கூறுவது அந்த மக்களின் மனங்களை நோகச் செய்யும் என்பது அவர்களுக்கே தெரிகின்றது போல் உள்ளது.

இந்த 13 ஆவது திருத்தச் சட்டம் எங்களுக்கு எந்தக் காலத்திலும் ஒரு நிரந்தர தீர்வாக அமையாது. ஆனாலும், இப்போது இருக்கும் 13 ஐயும் நாங்கள் பறிகொடுத்துவிட்டு ஜே.வி.பியினர் கூறுவது போன்று எல்லோரும் சமம் என்று போனால் அது மிகப் பெரிய ஆபத்தாகும்.

ஏனெனில் இந்த நாட்டில் பெரும்பான்மையாக இருப்பவர்கள் சிங்களவர்கள். அவர்களுடைய வாழ்க்கை முறையும் பாசையும் மதமும் எங்கள் எல்லோரையும் பீடிக்கக் கூடியதாகத்தான் அமையும்.

ஆகையினால் அவ்வாறான கருத்துக்களை நாங்கள் கண்டிக்கின்றோம். ரில்வின் சில்வா போன்றவர்கள் அவ்வாறு கூறுவது பிழை என்று தெளிவாகக் கூறுகின்றோம்.

இந்த 13 ஆவது திருத்தத்தை பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கால கட்டத்திலும் மாறி மாறி கூறி வருகின்றதைப் பார்க்கின்றோம். அவ்வாறு அவர்கள் எதனைக் கூறினாலும் 13 ஆவது திருத்தச் சட்டம் எந்தக் காலத்திலும் எங்களுக்கு ஒரு தீர்வாக அமையாது. அவ்வாறு அமையவும் போவதில்லை.

ஆனால், தமிழ் மக்களுக்கு எவ்வாறான தீர்வு தரப் போகின்றார்கள் என்று குறிப்பிடுகையில் பொருளாதாரப் பிரச்சினைதான் எங்களுக்கு இருக்கின்றது என்று ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிடுகின்றார்.

அதுவும் பொருளாதாரப் பிரச்சினை என்று கூறும் போது எங்களுடைய தமிழ்ப் பிரதேசங்களில் காணிகள் அபகரிக்கப்படுகின்றன. பௌத்த சின்னங்கள் கொண்டுவரப்பட்டு புதிய புதிய விகாரைகள் அமைக்கப்படுகின்றன.

வடக்கையும் கிழக்கையும் ஒருமித்து வைத்திருக்கும் இடத்திலே சிங்களப் பிரதேசத்தைக் கொண்டு வந்து எங்களுடைய தொடர்ச்சியை அற்றுப் போகச் செய்கின்றார்கள்.

குறிப்பாக வடக்கு, கிழக்கிலே அதிக இராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருக்கின்றார்கள். அதனால் எங்களுக்கு ஏற்படும் பலவிதமான சமூகப் பிரச்சினைகளை நாங்கள் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றோம்.

இவற்றையெல்லாம் பற்றிக் குறிப்பிடாது பொருளாதார அபிவிருத்தி என்று சில விடயங்களைச் செய்வதால் பிரச்சினை தீரும் என ரில்வின் சில்வா நினைத்தாரானால் அது அவருடைய அறியாமையை வெளிப்படுத்துகின்றது.

அவர் கூறுவது தெற்குக்குப் பொருந்தும். எனினும், வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குப் பொருந்தாது." - என்றார்.




ஜே.வி.பியின் கருத்துக்கு எதிராக விக்கி போர்க்கொடி: அது மிகப் பெரிய ஆபத்து என்கிறார் Reviewed by Author on October 19, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.