”என்னை கொலை செய்ய திட்டம்”: அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு சந்திரிக்கா எதிர்ப்பு
அரசியல் காரணங்களுக்காக தனது கணவர் விஜய குமாரதுங்க கொலை செய்யப்பட்டது போன்று தன்னையும் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
தமக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்களை குறைப்பது தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
குறித்த கடிதத்தில் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளதாவது,
சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ஹேமசிறி, கடந்த ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி வழங்கிய கடிதத்தில், தனது பாதுகாப்புப் பிரிவினரின் எண்ணிக்கையை 50 இல் இருந்து 30 ஆக குறைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏனைய முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 243, 200 மற்றும் 109 பாதுகாவலர்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், எந்த அளவுகோலின் அடிப்படையில் தனக்கு மாத்திரம் 30 பாதுகாவலர்களை வழங்க தீர்மானிக்கப்பட்டது என்பது தொடர்பில் குழப்பமடைந்துள்ளேன்.
ஓய்வுபெற்ற ஐந்து ஜனாதிபதிகளில் நான் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளானவர். கொலை முயற்சியில் காயமடைந்த ஒரே ஜனாதிபதி நான் மாத்திரமே.
தான் ஓய்வு பெற்றாலும் என்னை கொலை செய்வோம் என விடுதலைப் புலிகள் அமைப்பு 2006 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் பகிரங்க அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. இந்த விடயம் பொலிஸ் புலனாய்வு அறிக்கைகள் மூலம் தனக்கு தெரியப்படுத்தப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக 63 இராணுவ அதிகாரிகளும், 180 பொலிஸ் உத்தியோகத்தர்களும் என 243 பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளனர்.
மைத்திரிபால சிறிசேனவுக்கு 109 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் உட்பட 200 பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளனர். கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் 175 இராணுவ அதிகாரிகளும், 25 பொலிஸ் உத்தியோகத்தர்களும் பாதுகாப்புக்காக உள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்களின் போது தாம் ஆட்சிக்கு வந்தால் விசேட அதிதிகளுக்கு உயர் பாதுகாப்பு கிடைக்காது என ஜே.வி.பியின் தலைவர்கள் கூறினார்கள். ஆனால், அவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னரும் நூற்றுக்கணக்கான பாதுகாவலர்கள் உள்ளனர்.
அவ்வாறெனில் எமது நாட்டின் விசேட அதிதிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை அரசாங்கமும் ஏற்றுக்கொள்கின்றதா? என குறித்த கடிதத்தினூடாக சந்திரிக்கா பண்டாரநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
Reviewed by Author
on
November 05, 2024
Rating:


No comments:
Post a Comment