அரிசி விலையை அதிகரிக்க முடியாது - நுகர்வோர் அதிகார சபை
நாட்டில் தற்போது நிலவும் கீரி சம்பா மற்றும் சம்பா அரிசி தட்டுப்பாடு குறித்து நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரக்கோன் இன்று (15) கருத்து வெளியிட்டார்.
குறித்த அரிசி வகைகளின் தட்டுப்பாடு தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு தகவல் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், வர்த்தமானி அறிவிப்பின் மூலம் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நிர்ணய விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்கப்படுமாயின் தற்போதுள்ள சட்டத்தின் கீழ் அதிகார சபை தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கும்.
வர்த்தமானி அறிவிப்பிற்கு இணங்க நெல் கொள்முதல் மற்றும் அரிசி விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்வதாக அவர் வலியுறுத்தினார்.
அரிசி தொடர்பான சுற்றிவளைப்புகள் தொடரும் என்றும், இது தொடர்பாக நுகர்வோர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைவர் கூறினார்.
இதுவரை 3,000 க்கும் மேற்பட்ட அரிசி தொடர்பான சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவற்றில் சுமார் 1,000 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் சுமார் 95 மில்லியன் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும் தற்போதைய அரிசி பற்றாக்குறை குறித்து கருத்து தெரிவித்த தலைவர், வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை திருத்துவதற்கான எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லை என குறிப்பிட்டார்.
இதன் காரணமாக, வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விலையில் அரிசியை விற்கவும், நெல் கொள்வனவில் ஈடுபடவும் அனைத்து தரப்பினருக்கும் அறிவித்து வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரக்கோன் தெரிவித்தார்.
அரிசி விலையை அதிகரிக்க முடியாது - நுகர்வோர் அதிகார சபை
Reviewed by Vijithan
on
September 15, 2025
Rating:

No comments:
Post a Comment