இஸ்ரேல் - பாலஸ்தீன தீர்வு - ஐ.நாவுக்கு நன்றி தெரிவிக்கும் இலங்கை
பாலஸ்தீனப் பிரச்சினைக்கு, அமைதிக்கான தீர்வு மற்றும் இரு நாடுகள் தீர்வை செயற்படுத்துதல் குறித்த நியூயோர்க் பிரகடனத்தை ஆதரிக்கும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஏற்றுக்கொண்டதை இலங்கை வரவேற்றுள்ளது.
இந்த முக்கியமான முயற்சியில் தலைமை தாங்கியதற்காக சவுதி அரேபியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு நன்றிகளைத் தெரிவிப்பதாக இலங்கை வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளுக்கு இணங்க, பாலஸ்தீன மக்களின் அரச அந்தஸ்துக்கான மறுக்க முடியாத உரிமைக்கு, இலங்கை தனது அசைக்க முடியாத ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் இலங்கை வௌிவிவகார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்துக்கு இடையிலான இரு நாடுகள் தீர்வுக்கான யோசனை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நேற்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் ஊடாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இலங்கை உட்பட 142 நாடுகள் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்துக்கு இடையிலான இரு நாடுகள் தீர்வுக்கு ஆதரவாகவும் 10 நாடுகள் எதிராகவும் தமது வாக்கை வழங்கியுள்ளன.
12 நாடுகள் இந்த வாக்களிப்பில் கலந்துக் கொள்ளவில்லை.
நியூயோர்க் பிரகடனம் என்ற பெயரில் இந்த தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்துக்கு இடையிலான இரு நாடுகள் தீர்வுக்கு இந்த பிரகடனம் ஓர் புதிய முயற்சியாக உள்ளது.
இஸ்ரேல் மற்றும் அதன் முக்கிய நட்பு நாடான அமெரிக்கா உட்பட 10 நாடுகள் குறித்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்துள்ளன.
இந்த பிரகடனம் ஹமாஸ் அதன் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் மற்றும் பணயக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் சவுதி அரேபியா மற்றும் பிரான்சின் மத்தியஸ்தத்துடன் நடைபெற்ற ஐ.நா.வின் சர்வதேச மாநாட்டின் போது ஏழு பக்கத் தீர்மானம் முன்வைக்கப்பட்டிருந்தது.
செப்டம்பர் 22 அன்று நடைபெறும் அரச தலைவர்கள் உச்சி மாநாட்டின் போது பாலஸ்தீனத்தை ஒரு சட்டபூர்வமான நாடாக அங்கீகரிக்க பிரான்ஸ், கனடா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் தயாராகி வரும் சூழலில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனிடையே ஐ.நா. பொதுச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தை நிராகரிப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் - பாலஸ்தீன தீர்வு - ஐ.நாவுக்கு நன்றி தெரிவிக்கும் இலங்கை
Reviewed by Vijithan
on
September 13, 2025
Rating:

No comments:
Post a Comment