இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.25 லட்சம் மதிப்பிலான 150 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது:-மரைன் போலீசார் நடவடிக்கை
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அடுத்த முள்ளிமுனை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்திய மதிப்பில் 25 லட்சம் ரூபாய் பெறுமதியான 150 கிலோ கஞ்சா பொதிகளுடன், மரைன் போலீசார் இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் சமீப காலமாக தனுஷ்கோடி கடல் வழியாக ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதியில் இருந்து இலங்கைக்கு,கஞ்சா, கடல் குதிரை, கடல் அட்டை, சமையல் மஞ்சள், மெத்தாம்பேட்டமைன் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று (13) இரவு தொண்டி அடுத்த முள்ளிமுனை கடற்கரையிலிருந்து படகில் இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாக தேவிப்பட்டினம் மரைன் போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (13) இரவு முள்ளிமுனை முக துவார கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மரைன் போலீசாரை கண்டதும் அங்கிருந்து இருவர் தப்பி சென்ற நிலையில் அந்த பகுதியை சுற்றிவளைத்து மரைன் போலீசார் தீவிரமாக தேடினர்.
அப்போது இலங்கைக்கு கடத்துவதற்காக மூட்டையில் பொட்டலங்களில் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து கஞ்சா பொட்டலங்களை தேவிபட்டினம் மரைன் காவல் நிலையத்திற்கு எடுத்து வந்து எடை போட்டுப் பார்த்தபோது அதில் 150 கிலோ கஞ்சா இருந்தது.
கஞ்சாவை பறிமுதல் செய்த மரைன் போலீசார் கடத்தலில் ஈடுபட்ட முள்ளிமுனை பகுதியை சேர்ந்த இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் இந்திய மதிப்பு ரூ.25 லட்சம் எனவும் சர்வதேச மதிப்பு ஒரு கோடி ரூபாய் இருக்கும் என மரைன் காவல் நிலைய ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
Reviewed by Vijithan
on
December 14, 2025
Rating:


No comments:
Post a Comment