அண்மைய செய்திகள்

recent
-

பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்கி அதற்குப் பதிலாக வேறு சட்டங்களை முன் மொழியாது மக்களின் உணர்வுகளை புரிந்து மக்களோடு பயணிக்க அரசு தயாராக இருக்க வேண்டும் மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை

 பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்கு வதில் அரசு மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். இதற்குப் பதிலாக வேறு சட்டங்களை முன் மொழியாது  மக்களின் உணர்வுகளை புரிந்து மக்களோடு பயணிக்க அரசு தயாராக இருக்க வேண்டும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை மறைமாவட்ட மக்களுக்கு எழுதிய தவக்கால திரு மடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.


குறித்த மடலில் மேலும் குறிப்பிடுகையில்,,,,



கத்தோலிக்க கிறிஸ்தவர்களாகிய நமது வழிபாட்டு ஆண்டில் தவக்காலம் ஒரு முக்கியமான காலம் ஆகும். திருநீற்றுப் புதனில் ஆரம்பித்து ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு விழா வரையிலான நாற்பது நாட்களைக் கொண்ட இந்தத் தவக்காலம் ஒரு வகையில் நமக்கு ஞான ஒடுக்க நாட்களாகவோ, தியான நாட்களாகவோ அல்லது பல தியாகங்கள், ஒறுத்தல்கள் செய்யும் நாட்களாகவோ இருக்கின்றன. 


நமது வாழ்க்கைப் பயணத்தில் இடைவிடாது ஓடிக்கொண்டிருக்கும் நாம், சற்று நின்று நிதானித்து, நமது ஆன்மீக வாழ்வை பற்றிச் சிந்திக்க, நமது ஆன்மீக வாழ்வை மீளாய்வு செய்ய, மீள் பரிசீலனைக்கு உட்படுத்த இத் தவக்காலம் அரியதோர் வாய்ப்பை வருடா வருடம் நமக்குத் தருகின்றது.

 

தவக்காலம் உறவைச் சரி செய்கின்ற, சீர் படுத்துகின்ற உன்னதமான காலமாகும். ஒவ்வொரு தனி மனிதரும் இறைவனோடும், தம்மோடும், அயலவரோடும் உறவைச் சரிசெய்ய இத் தவக்காலம் அழைப்பு விடுகின்றது.


 செபம், தவம், தான தருமம் ஆகிய மூன்று செயற்பாடுகளும் இத் தவக்காலத்தின் மூன்று முக்கிய தூண்களாக உள்ளன. முதலாவது, செபத்திற்கு அதிக நேரம் ஒதுக்கி இறைவனோடு உள்ள உறவை ஆழப்படுத்துவது   தவக்காலத்தில் முக்கியமாகும். இரண்டாவது, உண்ணா நோன்பு மற்றும் புலால் உணவைத் தவிர்த்தல் போன்ற தவ முயற்சிகள் மூலம் நாம் பசித்திருக்கின்றோம். 


இது நமக்குள் நாம் பயணம் செய்யவும், நம்மை ஆழமாக அறியவும், நம்மோடு நாம் உறவை சீர் செய்யவும் உதவுகிறது. மூன்றாவது தான தர்மம் என்பது வெறும் காசு, பணம், பொருளை மட்டுமல்ல, நமது நேரத்தை, அன்பை, அக்கறையை, உடனிருப்பை மற்றவர்களுக்கு கொடுப்பதும், சிலுவையின் பங்காளிகளாகுவதும் ஆகும். இது அயலவர்களுடன் நமது உறவைச் சீர் படுத்துகின்ற முயற்சியாகும்.

 

'கடவுளோடு ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவின் சார்பில் நாங்கள் மன்றாடுகிறோம்' (2 கொரி 5: 20) எனப் புனித பவுல் கொரிந்திய மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றார். இந்த அழைப்பு இன்று நமக்கும் விடுக்கப்படும் அழைப்பாகும். 'இதுவே தகுந்த காலம்! இன்றே மீட்பு நாள்!' (2 கொரி 6:2) என உணர்ந்து நமது ஆன்மீக வாழ்வைப் புதுப்பிக்க இத்தா காலத்தில் நம்மை ஒப்புக்கொடுப்போமாக!


திருத்தந்தையின் தவக்காலச் செய்தி

 

திருத்தந்தை லியோ அவர்கள் இவ்வாண்டிற்கான தவக்காலச் செய்தியில் உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கர்கள் இத்தவக்காலத்தை செவிசாய்த்தல், உண்மையான நோன்பு மற்றும் நீதிக்கான புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பின் காலமாகக் கடைப்பிடிக்கும்படி அழைப்பு விடுத்துள்ளார். 


நவீன கால மனப்பதற்றங்கள் மற்றும் கவனச்சிதறல் களுக்கு மத்தியில் கடவுளை தங்கள் வாழ்க்கையின் மையத்தில் கொள்ளுமாறு அவர் விசுவாசிகளை வலியுறுத்தியுள்ளார். 'செவிசாய்த்தல், நோன்பு : தவக்காலம் மனமாற்றத்தின் காலம்' என்ற தலைப்பில் தனது தவக்காலச் சிந்தனைகளை வழங்கியுள்ள திருத்தந்தை, 'கடவுளுடைய வார்த்தைக்கு நம் இதயங்களைத் திறக்கும்போது மனமாற்றம் தொடங்குகிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.

 

அடுத்து நோன்பு குறித்து தனது சிந்தனைகளை திருப்பிய திருத்தந்தை, இது கடவுளின் வார்த்தையை பெற இதயத்தைத் தயார்படுத்துவதற்கான ஓர் உறுதியான வழி என்று விவரித்துள்ளார். 'உணவைத் தவிர்ப்பதைத் தாண்டி, விசுவாசிகள் தங்கள் ஆழமான ஆசைகளை ஆராயவும், நீதிக்கான தாகத்தைப் புதுப்பிக்கவும், அற்ப நிறைவில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ளவும் நோன்பு உதவுகிறது' என்று கூறியுள்ள திருத்தந்தை, உண்மையான நோன்பு என்பது, தற்பெருமையில் அல்ல, மாறாக, பணிவிலும் நம்பிக்கையிலும் வேரூன்ற வேண்டும்' என்று  குறிப்பிட்டுள்ளார்.

 

தீங்கு விளைவிக்கும் பேச்சை தவிர்க்க வேண்டும் என்றும், கத்தோலிக்கர்கள் சமூக ஊடகங்களிலோ அல்லது பொது விவாதங்களிலோ கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தவோ தீர்ப்பளிக்க அவசரப்படவோ அல்லது அவதூறுகளைப் பரப்பவோ கூடாது. அதற்குப் பதிலாக இரக்கம், மரியாதை மற்றும் நம்பிக்கையுடன் பேசவேண்டும் என அன்போடும் அக்கறையோடும் அறிவுறுத்தியுள்ளார்.

 

தூய ஆவியின் ஆண்டு


நமது மன்னார் மறை மாவட்டத்தில் இவ்வாண்டு தூய ஆவியின் ஆண்டாக பிரகடனப்படுத்தி உள்ளோம். எனவே இவ்வாண்டுக்கான நமது மேய்ப்புப்பணி திட்டங்களின் மையமாக தூய ஆவியானவர் விளங்குகின்றார். தூய ஆவியானவர் இறைவனின் வல்லமையாக இருந்து, விசுவாசிகளை வழிநடத்துகிறார், திருஅவையைப் பாதுகாக்கின்றார், அன்பு, அமைதி போன்ற கனிகளைத் தந்து, ஞானம் மற்றும் அருள் கொடைகளை பொழிந்து இயேசுவை ஆண்டவர் என அறிக்கையிட செய்கிறார். அவர் திருஅவையின் உயிர் மூச்சாகவும், உண்மையை நோக்கி வழிநடத்துபவராகவும் இருக்கின்றார்.

 

எனவே தூய ஆவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆண்டில் தூய ஆவி பற்றிய அறிவைப் பெற்றுக் கொள்ளவும், தூய ஆவியின் அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளவும் நாம் அனைவரும் முழு முயற்சி எடுப்போம். தூய ஆவியை மையப்படுத்திய நமது பங்கு மேய்ப்பு பணி திட்டங்களை ஒவ்வொரு பங்குச் சமூகமும், ஆலய சமூகமும் முனைப்போடு, பிரமாணிக்கமாக நிறைவேற்ற தம்மை அர்ப்பணிக்க வேண்டும் என இவ்வேளையில் அன்போடு வேண்டுகோள் விடுக்கின்றேன்.


நாட்டின் இன்றைய சூழ்நிலைகள்


பெரும்பான்மை வாக்குகளால் ஆட்சி பீடமேறிய இன்றைய அரசாங்கத்தின் மட்டில் மக்கள் கொண்டிருந்த பல எதிர்பார்ப்புகள் இன்றும் எதிர் பார்ப்புகளாகவே உள்ளன. 


தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் வலியுறுத்தி வரும் பல பிரச்சினைகளுக்கு இன்றைய அரசாங்கம் தீர்வுகளைத் தராமல் காலத்தை இழுத்தடித்துக் கொண்டு செல்வது மன வருத்தத்திற்குரியது.


  கடந்த கால தேர்தல் பரப்புரை களின் போது தமிழ் மக்களுக்கு குறிப்பாக மன்னார் மக்களுக்கு வழங்கப்பட்ட பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. மக்களின் எதிர் பார்ப்புகளும், காத்திருப்பும் தொடர்கதையாகவே உள்ளன. இந்நிலையில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் தற்போது மீனவ சமூகம் எதிர்நோக்கும் பாரிய தொழில் பிரச்சினைகள் மற்றும் ஏனைய பிரச்சினைகள் மட்டில் அரசாங்கம் அதிக அக்கறையோடு விரைந்து செயலாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம்.


பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதில் அரசு மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். இதற்குப் பதிலாக வேறு சட்டங்களை முன் மொழியாது, மக்களின் உணர்வுகளை புரிந்து, மக்களோடு பயணிக்க அரசு தயாராக இருக்க வேண்டும். 


வேற்றுமைகளை களைந்து, சமாதான வழியில் அரசியல், சமய, சமூக முன்னெடுப்புக்களை மேற்கொள்ள வேண்டும். இது ஒன்றுபட்ட சமாதான வாழ்வுக்கு அவசியமாகும் என  குறித்த மடலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  குறித்த மடல் இன்றைய தினம் ஞாயிறு திருப்பலியின் போது இறை மக்களுக்கு அருட்தந்தையர்களினால் வாசித்துக் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.











பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்கி அதற்குப் பதிலாக வேறு சட்டங்களை முன் மொழியாது மக்களின் உணர்வுகளை புரிந்து மக்களோடு பயணிக்க அரசு தயாராக இருக்க வேண்டும் மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை Reviewed by Vijithan on March 01, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.