300 அடி பள்ளத்தில் விழுந்து நபர் உயிரிழப்பு
அயகம, இந்தொலவத்தை பகுதியில் உள்ள ஆரணிய சேனாசனத்தின் பாறை ஒன்றிலிருந்து சுமார் 300 அடி பள்ளத்தில் விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் அயகம, தும்பர மானான பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபராவார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் நேற்று முன்தினம் உறவினர் வீட்டிற்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டுச் சென்றுள்ள நிலையில், குறித்த உறவினர் வீட்டிற்கு அவர் செல்லவில்லை.
இது தொடர்பில் அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் தேடுதல் மேற்கொண்டபோது, அயகம இந்தொலவத்தை பகுதியில் உள்ள 'கலே பன்சல' என்ற ஆரணிய சேனாசனத்திற்கு செல்லும் வழியில் அவரது காலணிகளும் குடையும் கண்டெடுக்கப்பட்டன.
பின்னர் அயகம பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று (15) குருவிட்ட இராணுவ அதிகாரிகளுடன் இணைந்து பொலிஸார் ட்ரோன் கெமராக்களைப் பயன்படுத்தி தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினர்.
இதன்போது அவரது சடலம் சுமார் 300 அடி பள்ளத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
எனினும், இராணுவ அதிகாரிகளும் பொலிஸாரும் முயற்சித்தும் சடலம் இருந்த இடத்தை அடைய முடியவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் நேற்று இரவு சிறப்பு நடவடிக்கை மூலம் சடலத்தை வெளியே எடுக்க முயன்றபோதிலும் அதுவும் தோல்வியடைந்தது.
அதன்பின்னர் இன்று (16) கமாண்டோ அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினரால் சடலத்தை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் அந்த இடத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டாரா என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.
Reviewed by Vijithan
on
August 16, 2026
Rating:


No comments:
Post a Comment