வாழைச்சேனையில் திருட்டுப் பொருட்களை மோசடி செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
வாழைச்சேனை பகுதியில் வீடு ஒன்றை உடைத்துத் திருடப்பட்ட 7 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலி மற்றும் 65 ஆயிரம் ரூபா பணம் ஆகியவற்றைத் தன்வசம் வைத்திருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்குடா பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து வாழைச்சேனை பொலிஸாரால் இவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த 21ஆம் திகதி வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடு ஒன்றில் 65 ஆயிரம் ரூபா பணம் மற்றும் 7 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் திருடப்பட்டன. இது தொடர்பாக நாவலடி பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரை கடந்த செவ்வாய்க்கிழமை பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட திருடனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்கு அமையவே குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி, தற்போது ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், திருடனின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அங்கு தான் இந்தத் திருட்டுச் சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதாகக் கூறி, திருடனிடமிருந்த நகைகளையும் பணத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார்.
அவ்வாறு பெற்றுக்கொண்ட பொருட்களைத் தனது நண்பர் ஒருவரிடம் பாதுகாப்பாக வைக்குமாறு அவர் கொடுத்துள்ளார் என்பது ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் தற்போது ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்திலிருந்து விசேட கடமை நிமித்தம் பாசிக்குடா சுற்றுலா மையத்தில் பணியில் அமர்த்தப்பட்டிருந்தார்.
இந்நிலையில், உதவி பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனைக்கமைய, நேற்று மாலை அவர் கைது செய்யப்பட்டார்.
அத்துடன் அவரது நண்பரிடம் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க ஆபரணங்களும் பணமும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளை இன்று (30) வாழைச்சேனை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
வாழைச்சேனையில் திருட்டுப் பொருட்களை மோசடி செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
Reviewed by Vijithan
on
April 30, 2026
Rating:
Reviewed by Vijithan
on
April 30, 2026
Rating:


No comments:
Post a Comment