மன்னாரில் 9 ஆண்டுகால அர்ப்பணிப்பான சேவைக்கு கௌரவம் – மன்னாரில் இருந்து வவுனியாவுக்கு பயணமாகும் திலீபன்!
வவுனியா மாவட்டத்திற்கு இட மாற்றலாகிச் செல்லும் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் கனகரெத்தினம் திலீபன் அவர்களின் சேவை நலன் பாராட்டு விழா, மன்னார் மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் இன்று (17) மாலை நடைபெற்றது.
மன்னார் மாவட்டத்தில் சுமார் ஒன்பது ஆண்டுகளாக அனர்த்த முகாமைத்துவ பணிகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வந்த திரு. திலீபன் அவர்கள், பல்வேறு இயற்கை அனர்த்தங்கள் மற்றும் அவசரகால சூழ் நிலைகளின் போது மாவட்ட மட்ட ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றியுள்ளார்.
2017 ஆம் ஆண்டு மன்னாரில் தனது பணியை ஆரம்பித்த அவர், வெள்ளம், கடும் மழை, புயல், வறட்சி உள்ளிட்ட அனர்த்த காலங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று நிலைமைகளை நேரடியாக கண்காணித்து, தேவையான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதில் தொடர்ந்து ஈடுபட்டார்.
அத்துடன், அனர்த்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பொதுமக்கள் விழிப்புணர்வு, தகவல் பரிமாற்றம் மற்றும் அவசர கால செயற்பாடுகள் தொடர்பில் அரச நிறுவனங்கள், உள்ளூராட்சி அமைப்புகள், ஊடகங்கள் மற்றும் பொது மக்களுடன் இணைந்து சிறப்பான பணிகளை முன்னெடுத்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் தனது நீண்டகால சேவையின் மூலம் பல்வேறு தரப்பினருடனும் நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டிருந்த அவரின் இடமாற்றம், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் அவருடன் இணைந்து பணியாற்றியவர் களிடையே உணர்வுபூர்வமான தருணமாக அமைந்தது.
பாராட்டு நிகழ்வின் போது, அவரது சேவையை பாராட்டிய மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள், புதிய பணியிடத்திலும் சிறப்பாகச் செயற்பட்டு அரச சேவைக்கு மேலும் பங்களிப்புகளை வழங்க வேண்டும் என வாழ்த்துத் தெரிவித்தனர்.
மன்னார் மாவட்டத்தில் அவர் ஆற்றிய அர்ப்பணிப்பான சேவைக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், வவுனியா மாவட்டத்தில் அவர் பொறுப்பேற்கவுள்ள புதிய பதவியில் சிறப்பான பணிகளை முன்னெடுக்க மன்னார் மாவட்டச் செயலகம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை அன்று வவுனியா மாவட்ட செயலகத்தில் தனது பதவிகளை உத்தியோகபூர்வமாக பதவி ஏற்பார் என்பது குறிப்பிடத்தக்கது
Reviewed by Vijithan
on
August 18, 2026
Rating:


No comments:
Post a Comment