மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றும் புகையிரதக் கடவை ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் முதல் மாதாந்தக் கொடுப்பனவு வழங்கப்படவில்லை
மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றும் புகையிரதக் கடவை ஊழியர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவு உயர்த்தப் பட்டும் நிலுவை வழங்கப்படாமை தொடர்பான பாதிக்கப்பட்ட புகையிரத கடவை பணியாளர்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை (3) மதியம் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு சென்று மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் யை சந்தித்து தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் கடந்த 12 வருடங்களுக்கு மேலாக தலைமன்னார் வரையிலான புகையிரதக் கடவையில் கடமை பொறுப்பினை குறித்த பணியாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
ஆரம்பத்தில் குறித்த பணியாளர்களுக்கு பொறுப்பான பொலிஸ் நிலையங்கள் ஊடாக மாதாந்தக் கொடுப்பனவாக ரூபா 7,500 ரூபாய் மாத்திரமே வழங்கப்பட்டு வந்தது. தற்போது அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவாக 01-01-2026 முதல் மாதாந்தக் கொடுப்பனவு ரூபா 15,000 ஆக அதிகாரப்பூர்வமாக உயர்த்தப் பட்டதாக குறித்த பணியாளர்கள் தெரிவித்தனர்.
குறித்த பணியாளர்கள் தொடர்பாக பொலிஸ் அதிகாரிகளினால் கடவை ஊழியர்களின் அனைத்து விபரங்களும் புகையிரத திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஏனைய பகுதிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உயர்வு பெற்ற கொடுப்பனவு வழங்கப் பட்டுள்ள போதும் எங்களுக்கு இதுவரை கொடுப்பனவு எதுவுமே கிடைக்கப்பெறவில்லை என பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்ட புகையிரத கடவை பணியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஜனவரி மாதம் முதல் தமக்கு எவ்வித கொடுப்பனவு வழங்கப்படவில்லை எனவும் பாதிக்கப்பட்ட பணியாளர்கள் அரச அதிபரிடம் தெரிவித்தனர்.பொலிஸ் அதிகாரிகளினால் அனைத்து விபரங்களும் புகையிரத நிலையத்திடம் முறையாக ஒப்படைக்கப்பட்டுள்ள போதிலும், கொடுப்பனவு இன்னும் வழங்கப்படாமல் உள்ளதாக பாதிக்கப்பட்ட பணியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நீண்டகாலமாக மிகவும் குறைந்த ஊதியத்தில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வரும் தமக்கு தற்போதைய பொருளாதாரச் சூழலில் இக் கொடுப்பனவு தாமதமாவது பெரும் வாழ்வாதாரக் கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றும் அனைத்து புகையிரத கடவை பணியாளர்களின் கொடுப் பணவையும் குறிப்பாக அதிகரிக்கப்பட்ட நிலுவையில் உள்ள கொடுப்பனவை பெற்றுத் தருமாறு அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று துரித நடவடிக்கைகள் மேற்கொள்வதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
Reviewed by Vijithan
on
September 03, 2026
Rating:


No comments:
Post a Comment