அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை-இந்திய மீனவர்கள் பிரச்சினை குறித்து கலந்துரையாட இந்தியா செல்லும் குழுவினர் இனிவரும் காலங்களில் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை பெற வேண்டும்.

 இலங்கை-இந்திய மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து  இந்தியாவில் பேச்சுவார்த்தை நடத்த  செல்லவிருக்கும் அதிகாரிகள் குழு வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுகின்ற இந்திய மீனவர்கள் இனி வரும் காலங்களில் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை பெற வேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளரும்,ஊடகப் பேச்சாளருமான என்.எம்.ஆலம் கோரிக்கை விடுத்துள்ளார்.


மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை (5) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,,


இலங்கை-இந்திய மீனவர் பேச்சுவார்த்தை தொடர்பாக இந்தியா செல்லவிருக்கும் மீன்பிடி தொடர்பான அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தை நடைபெறவிருப்பதாக நேற்றைய தினம்   கடற்றொழில் அமைச்சர் அவர்கள் தனது அறிவிப்பில் தெரிவித்திருக்கின்றார்.


இந்த பேச்சுவார்த்தை நாங்கள் எதிர்பார்க்கும் விடயம் அதில் உள் வாங்கப்படுமா? குறிப்பாக, இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பாக நீண்டகாலமாக எங்களால் பேசப்பட்ட விடயம், அது தொடர்பாக நீண்ட பேச்சுவார்த்தைகளை நாங்கள் நடத்தி இருந்த நிலையில் தான், தற்போது இருக்கின்ற அரசாங்கம் இரண்டு வருடங்கள் நெருங்கியிருக்கும் நிலையில் இந்த பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கலாம் என்ற கருத்தை, அமைச்சரின் கருத்தை நாங்கள் வரவேற்கின்றோம்.


அந்த வகையிலே, அதிகாரிகள் மட்டத்தில் பேசுவதற்கு செல்லுகின்ற அந்த குழுவானது, இலங்கையில் இருக்கின்ற குறிப்பாக வடக்கிலிருக்கின்ற மீனவர்களின் பிரச்சினை எந்த அளவுக்கு புரிந்திருக்கிறது, அவர்களிடம் இது தொடர்பாக கருத்துக்கள் பெறப்பட்டதா என்பது கேள்வியாக இருக்கிறது. 


குறிப்பாக வடமாகாணத்தை பொறுத்தவரைக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகளில் பல்வேறுபட்ட விடயங்களை இப்போது இருக்கின்ற தலைவர்கள் பல்வேறு கோணத்தில் பேசி வருகிறார்கள்.


ஆனால் ஒட்டுமொத்தமாக வடக்கிலிருக்கின்ற மீனவர்களின் ஒரே குரலாக, இந்திய மீனவர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.


 அந்த மீனவர் பிரச்சினை எங்களது கடல் எல்லைக்குள் இந்திய படகுகள் அல்லது வெளிநாட்டு படகுகள் எங்களது கடலிலே தொழில் செய்வதை தடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஒட்டுமொத்த குரலாக எழுப்பி வருகிறார்கள்.


  கடற்றொழில் அமைச்சரின் தற்போதைய நடவடிக்கைகளை நாங்கள் பாராட்டுகிறோம். இருந்தபோதிலும், இங்கு பேசச் செல்கின்ற அதிகாரிகள் மட்ட குழுவானது, இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைய மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை அவர்களால் வழங்கக்கூடிய அல்லது இந்தியாவால் பெறக்கூடிய நிலையில் அவர்களின் பேச்சு வார்த்தை அமையுமா? என்பது கேள்வியாக இருக்கிறது.


இந்த பேச்சுவார்த்தைக்கு அப்பால், மீனவர் மட்டத்தில் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறும் என்று அமைச்சர் தெரிவிக்கின்றார்.


 இருந்தபோதிலும் நாங்கள் இந்த பேச்சுவார்த்தையை ஆரம்பத்திலிருந்தே குறிப்பிடுகின்றோம், இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய—குறிப்பாக தமிழக, பாண்டிச்சேரி சார்ந்த மீனவர்கள் எங்களது கடல் எல்லைக்குள் வந்து எமது அரசாங்கத்தால் தடை செய்யப் பட்டிருக்கின்ற இழுவை மடியைக் கொண்டு தொழில் செய்வது தடுக்கப்பட வேண்டும். 


அவ்வாறு தடுக்கப்படும் பட்சத்தில் தான் அவர்களோடு நாங்கள் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள முடியும் என்ற கருத்தை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.


அவர்கள் இப்போது இந்த தொழில்முறையின் ஊடாக இலங்கை கடல் எல்லைக்குள் வந்து அவர்கள் கைது செய்யப்படும் நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தான் இப்போது அதிகாரிகள் மட்டத்தில் பேசச் செல்கின்றார்கள். 


ஆனால் இந்தியா நிச்சயமாக ஒரு கோரிக்கையை முன்வைக்கும்.கைது செய்யப்பட்ட படகுகளையும் மீனவர்களையும் விடுவிக்குமாறு கோரும். ஆனால் இலங்கை அதிகாரிகள் எதை கோர போகிறார்கள்? அவர்களை விடுவிப்பதில் எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.


 மீனவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பது எங்களது கோரிக்கை தான்.


இருந்தபோதிலும், அந்த மீனவர்கள் விடுவிக்கப்படும் அதேநேரம், அவர்களால் பயன்படுத்தப்பட்ட படகுகள் பறிமுதல் செய்யப்பட வேண்டும். அதற்கப்பால் இனிவரும் காலங்களில் இலங்கை எல்லைக்குள் நாங்கள் மீன்பிடியை மேற்கொள்ள மாட்டோம்.


 இருந்தபோதிலும் தடைசெய்யப்பட்ட மீன்பிடியை எவ்வாறாயினும் நாங்கள் மேற்கொள்ள மாட்டோம் என்ற உத்தரவாதத்தை இந்திய அரசு வழங்குமாக இருந்தால், இந்த பேச்சுவார்த்தையிலே அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தையில்  அவர்களின் மீனவர்களை விடுவிப்பதற்கு இந்த அதிகாரிகள் குழு இணங்க வேண்டும். 


அல்லாத பட்சத்தில், இந்த விடயத்தை அவர்கள் கைவிட வேண்டும்.பேச்சுவார்த்தை என்பது ஒரு தீர்வுக்கானது. இந்தியாவின் அழுத்தத்தில் அல்லது வேறு அழுத்தத்தின் பேரிலோ பேசுவதாக இருந்தால், வடக்கிலிருக்கின்ற மீனவர்களுக்கு எந்தவிதமான எதிர்கால நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடிய சூழலை அது இல்லாமல் ஆக்கிவிடும்.


 எனவே தயவு கூர்ந்து அமைச்சரின் பணிப்புரைக்கமைய செல்கின்ற அதிகாரிகள் மட்ட குழு ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.


 வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுகின்ற இந்திய மீனவர்கள் இனிவரும் காலங்களில் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை பெற வேண்டும். 


பெறுகின்ற பட்சத்தில்தான் நாங்கள் இந்த பேச்சுவார்த்தைக்கு உடனடியாக அல்லது அதற்கான ஆதரவு வழங்க கூடிய வகையில் வட மாகாண மீனவர்கள் இருப்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.





இலங்கை-இந்திய மீனவர்கள் பிரச்சினை குறித்து கலந்துரையாட இந்தியா செல்லும் குழுவினர் இனிவரும் காலங்களில் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை பெற வேண்டும். Reviewed by Vijithan on September 05, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.