அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் இணையத்தின் விம்பம் ஊடாக... கைப்பணி கைவினைக்காக தேசிய விருதுகள் பல தடவை பெற்ற ப.ஜெயலஷ்மி


பனைவளபோதனாசிரியர் சிறந்த அளுமைப்பெண் விருது  கைப்பணி கைவினைக்காக தேசிய விருதுகள் பல தடவை பெற்ற ஜெயந்தி என அழைக்கப்படும் ஜெயலஷ்மி அவர்களுடனான சந்திப்பின் போது…...... சும்மா அழுது புலம்புவதால் குறிப்பாக பெண்கள்எந்த விடையத்தினையும் சாதித்து விட முடியாது தன்னம்பிக்கையோடு முயற்சியும் இருந்தால் சாதிக்கலாம்............பிரகாசிக்கலாம்........

தங்களைப்பற்றி-
எனது அம்மா க.எவுதீக்கா(ராசாத்தி) தையல்தொழினினையும் அப்பா பொ.கதிரமலை (பத்தர்)நகைத்தொழிலாளி எமது சொந்த இடம் அடம்பன் அங்கு தான் மிகவும் பிரபல்யமான றோகினி சினிமா அரங்கு வைத்திருந்தார். அதுவும் சில காரணங்களால் கைமீறிப்போக மிகவும் கஸ்ரத்திற்குள். நான் எனது சாதாரண தரம் வரை கற்றேன். என்னை அருட்சகோதரிகள் தான் படிப்பித்தார்கள் அதிலும் என்னை படிப்பித்த அருட்சகோதரி மாற்றலாகிப்போகவும் எனக்கு படிக்க வேண்டும் என்ற எண்ணமும் தோண்றவில்லை வேலைக்குப்போனால் தான் சாப்பாடு என்ற நிலை சின்ன வயசிலே வயல் வேலை தோட்ட வேலை என பாடுபடத்தொடங்கினேன். யுத்த சூழலும் வீட்டுப்பொருளாதாரமும் எனது கல்வியை இடைநிறுத்த கல்வி காணமல்போனது பிறகென்ன வாழ்வு சிறுவயதிலே 16 திருமணமாகி குடும்ப வாழ்க்கையாகியது.

கைப்பணியினை கற்றுக்கொண்டது எப்படி---
யுத்தத்தினால் இடம்பெயர்ந்து 1990ம் ஆண்டளவில்  மடுவில் முகாமில் இருந்தோம் சிறிது காலத்தின் பின் 1992ம் ஆண்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்த மக்களின் மனங்களை கொஞ்சம் திசை திருப்ப இலகுவாக்க பல செயற்பாடுகளை வெளிநாட்டு சமாதான தொண்டு நிறுவனங்கள் மேற்கொண்டனர். அப்படியானதொரு பயிற்சியாகத்தான் பெண்களுக்கான கைப்பணிகள் பலவற்றினை பயிற்சி கொடுத்தார்கள் அவர்களின் வாழ்வாதாரத்தினை உறுதிப்படுத்த அப்படியான பயிற்சிகளை நானும் பெற்றுக்கொண்டேன் விருப்பத்தோடு….

எவ்வாறான கைப்பணிகள் உங்களுக்கு தெரியும்---
தையல் கேக் அலங்காரம் மணப்பெண் அலங்காரம் முத்துவேலைப்பாடுகள் தங்க நகைவேலைப்பாடுகள் கலறிங் வேலைப்பாடுகள் கிளாஸ் அலங்காரங்கள் இதோடு பனைவள கைப்பணியினையும் செய்வேன் இயல்பாக இலகுவாக பழகிவிடுவேன்.

தங்களின் வாழ்க்கையில் கைப்பணி எவ்வாறு---
மடு முகாமில் இருந்த போது தான் எனது கணவருக்கும் எனக்கும் கருத்து முரண்பாடு ஏற்பட்டு பிரிவானது அப்படியானதருணத்தில் தான் எனது மகளுக்கு 9வயது எனது மகனுக்கு 6வயது அம்மா அப்பா இயலாத நிலையில் உள்ள அண்ணன் இவர்களுடன் எனது வாழ்க்கை பெரும் சுமையாக எனது தலையில் சுமத்தப்பட்டது. குடும்பபொறுப்பை சுமக்க ஆரம்பித்தேன். எனதும் என்னுடைய பிள்ளைகளினதும் பாதுகாப்பினை கருதி எனது அம்மாவின் ஊரான பள்ளிமுனைக்கு வந்து வாடகைவீட்டில் குடியேறினோம். நன் எதிர்பார்த்த உதவியோ ஆதரவோ எனது அம்மாவின் உறவுகள் மூலம் கிடைக்கவில்லை எனது மாமா ஒருவர்தான் உதவியாக இருந்தார்.

இப்படியான தருணத்தில் எவ்வாறு---
வாடகை வீடு வருமாணம் இல்லை வளர்ந்த பிள்ளைகள் அம்மா அப்பா இவர்களை பராமரிப்பது எப்படி மிகவும் கஸ்ரம் துயரமான நேரம் பனை அபிவிருத்தி சபையிடம் தொடர்பு கொண்டு பனைவேலை செய்து கொள்ள முனைந்தேன் பலனில்லை 1999ம் ஆண்டு எனது கையில் வெறும் 16 ரூபாய் தான் இருந்தது. தலைமன்னாரில் இருந்து ஓலை எடுத்து தொப்பி பிண்ணி விற்றேன் இரவு பகல் பாராது ஓடியோடி ஓடர் எடுத்து பனைப்பொருட்கள் செய்து விற்று வரும் பணத்தில் தான் எனது பிள்ளைகளினதும் ஏலாத பெற்றோரினதும் தேவைகளை பூர்த்தி செய்தேன்.

பெண் தலைமைத்துவம் எனும் போது........
 கொஞ்சம் கொஞ்மாக சேமித்தேன் அதுவும் புருஷன் இல்லாது தலைமைத்துவம் கொண்ட பெண்கள் சமுதாயத்தில் தலை நிமிர்ந்து நடப்பது என்பது கொடிது பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டும் எவ்வளவு நேர்மையாக உண்மையாக இருந்தாலும் கட்டுப்பாடாக இருந்தாலும் சமுதாயம் ஏற்கப்போவதில்லை அவமானங்கள் கேவலமான சொற்பதங்கள் வீண்பழிகள் எல்லாம் தாங்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை .
அப்படியானவேளையில் எனது அம்மா இங்கபார் புள்ள இப்படியான விடையங்களுக்கெல்லாம் மனம் தளர்ந்து சோர்ந்து போகக்கூடாது எந்தச்சூழ்நிலையானாலும் அதை தகர்த்து முன்னேறனும்.
தன்னம்பிக்கைதான் வாழ்க்கைக்கு முக்கியம் நீ சந்திக்கின்ற ஒவ்வொரு தோல்வியும் தான் உனது வெற்றிக்கான ஏணிப்படிகள் அதை மனத்தில் வைத்துக்கொண்டு முன்னேறு அம்மாவைப்போல் எனது பிள்ளைகளும் எனக்கு சரியான ஆதரவு வீட்டின் கஸ்ரதுன்பங்களை உணர்ந்தவர்களாக எதையும் நான் வாங்கிக்கொடுக்காமல் கேட்க மாட்டார்கள் என்னுடைய வளர்ச்சிக்கு எனது பிள்ளைகளும் முக்கிய காரணம்.

எவ்வாறு உங்கள் வேலைவாய்ப்பு இருந்தது…
எடுத்தவுடன் எல்லாம் கிடைக்காது கிடைத்த வேலையை செய்யவேண்டும் அதற்காக பல நிறுவனங்களிடம் சென்றேன் அவர்களிடம் எனது இயலாமை கணவன் இல்லை என்று வேலை தரவேண்டாம் எனது திறமையினைப்பார்த்து வேலை தாருங்கள் என்று கேட்டேன் அவ்வாறு எனது வார்த்தைக்கு ஏற்றாப்போல் எனது திறமையினை கண்டு எனக்கு வேலை தந்தார்கள் எனது நேர்மையான தரமான வேலையினைப்பார்த்து நிறைய நிறுவனங்கள் அமைப்புகளிடம் இருந்து வேலைகள் தேடிவர ஆரம்பித்தது. ஒரு வருடத்தில் குறைந்தது மூன்று நிறுவனத்தின் பயிற்சி ஆசிரியராகவும் வீட்டில் தையல் தொழிலினையும் கைப்பணிகளையும் செய்து கொண்டே இருந்தேன் எனது பொருளாதாரம் தான் எனது இலக்காக இருந்தது. 

எத்தனை அமைப்புக்களுடன்  இணைந்து வேலை செய்துள்ளீர்கள்---

Offer
Y-gro
Save the Children
Kodek

கறிற்றாஸ் வாழ்வுதயம் இன்னும் பல அமைப்புகள் மூலமாக பயிற்சிகளை வழங்கி இருக்கின்றேன். பெரும்பாலும் எல்லா நிறுவனங்களுக்கும் என்னைத்தெரியும் என்னை இனம்காட்டியுள்ளது பன்னவேலை

பன்னை வேலையின் போது உங்களை ----
ஆரம்பத்தில் நான் பன்னை வேலை பழகும் போது இதைப்பழகி என்ன செய்யப்போகின்றாய் இது எல்லாம் ஒரு வேலையா…? என்று கேட்டார்கள் பன்னை வேலை பெரிதாக லாபம் தரக்கூடியது இல்லைத்தான்  என்றாலும் 100 ரூபா மொத்தமாக கிடைக்காவிட்டாலும் பத்து நாளில் பத்தப்பத்தாக சேர்த்தால் 100 ரூபா சேர்த்து விடலாம் என்று நினைத்தேன் சும்மா இருந்தால் அந்த பத்து ரூபா என்றாலும் யார் தருவது என்ற நம்பிக்கையோடு தான் பழகினேன் அத்தோடு எனது அப்பா செய்த வேலை தாலிக்கொடி பிண்ணிக்கொடுப்பேன் அதற்கும் தேடிவருவார்கள் என்னைப்பொருத்தமட்டில் துக்கம் என்பது பொதுவாக இல்லை மாறி மாறி வேலை செய்து கொண்டிருப்பேன் ஏன் என்றால் உழைக்க வேண்டும் என்னை நம்பி 5பேர் உள்ளார்கள் அத்தோடு ஒரு சவாலுக்காகவும் தான் எனது கணவன் என்னைப்பிரியும் போது சொன்ன வார்த்தை அந்த வார்தை என்னை காயப்படுத்தியது. அதைப்பொய்யாக்க வேண்டும் என்று மெய்வருத்தி உழைத்தேன் உழைத்து வருகின்றேன். அந்த சவால் என்னை கொண்டு செல்கின்றது.

உங்களது வாழ்வின் வெற்றி என்றால்--
இவ்வளவு கஸ்ரத்தின் மத்தியிலும்  எனது இரண்டு பிள்ளைகளினதும் கல்வியை திறமையாக அதாவது எனது மூத்த மகளை பட்டதாரியாக்கி இன்று மடுப்பிரதேசத்தில் கலாச்சார உத்தியோகத்தராக இருக்கின்றார். அத்தோடு அவளுக்கு சிறந்த எதிர்காலத்தினையும் கொண்டு செல்ல திருமணமும் செய்து வைத்தள்ளேன். அத்தோடு எனது மகனும் தற்போது தொழிநுட்பக்கல்லுரியில் பயிற்சி ஆசிரியராகவும் இறுதியாண்டு பரீட்சையும் எழுதியுள்ளார் அவனுக்கும் நல்ல எதிர் காலத்தினை உருவாக்கி விடவேண்டும் அத்தோடு வாடகை வீட்டில் இருந்த நான் இன்று எனது சொந்த வீட்டில் இருக்கின்றேன். ஆனாலும் இன்னும் சில சிக்கல்களில் இருந்து முழுமையாக மீளவில்லை இன்னும் ஓரிரு வருடங்களில் மீண்டிருவேன். நான் எந்த உதவியினையும் யாரிடமும் எதிர்பார்க்கவில்லை நான் துயரப்படும் போது செய்யாதவர்கள் எப்போதும் செய்ய மாட்டார்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும் எனது அம்மாவினதும் அப்பாவினதும் உறவுகள் நல்ல வசதி வாய்புக்களோடுதான் உள்ளார்கள் ஆனால் எனக்கு எந்தவிதமான உதவியும் செய்யவில்லை நானும் கேட்டதில்லை முதலாவது கடவுள் நம்பிக்கை இரண்டாவது என்னில் நான் னொண்ட நம்பிக்கைதான்.
உங்கள் முன்னேற்றத்தின் பங்காளர்கள்---
எனது முன்னேற்றத்தின் பங்காளர்கள் சிலர்தான் அவர்கள் எனது வேலையின் தரம் திறமையினதும்  எனது குடும்பத்தின் சூழ்நிலையினதும் கருத்தில் கொண்டு மாதர் சங்கத்தினரும் அருங்கலைகள் பேரவை திருமகள் அதிகாரியும் வெளிநாட்டு நிறுவனங்கள் தேசிய நிறுவனங்கள் வைக்கின்ற கருத்தரங்குகள் கண்காட்சி நிகழ்வுகள் பயிற்சிவகுப்புக்கள் போன்றவற்றில் கலந்து கொள்ளச்செய்து போட்டிகளில் ஈடுபடுத்தி தெளிவும் தன்னம்பிக்கையும் பெறச்செய்தார்கள் எங்களாலும் முடியும் என்ற எண்ணத்தினை வளர்த்தவர்கள்.அத்தோடு குறிப்பாக எனது வளர்ச்சியின் பிரதானமானவர் திருமகள் என்பேன் காரணம் நான் விரும்பி எந்தப்போடடியிலும் கலந்த கொள்வதில்லை காரணம் நான் குடும்பத்திற்காக உழைத்துக்கொண்டிருந்தேன். போட்டிக்கா கலந்து கொள்வதற்காக நேரமெடுத்து ஒரு பொருளை செய்யும் நேரத்தில் வேறுவேலை செய்தால் எனது தேவையினைப்பூர்த்தி செய்து கொள்ளலாம் அல்லவா… ஆனால் இவர் என்னை சும்மா விடமாட்டார் நீர் போட்டியில் கலந்து கொள்ளத்தான் வேண்டும் என்பார் என்னிடம் திறமை இருந்தது எனக்கு மட்டும் தான் தெரியும் ஆனால் திருமகள் மூலம் தான் எனது திறமை எல்லோருக்கும் தெரிய வந்தது. எவ்வாறு என்றால் நீர் கட்டாயம் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் உமது ஆக்கம் கட்டாயம் பரிசு பெறும் என்று ஊக்கப்படுத்துவதோடு இல்லாமல் தானே முன்வந்து எனது ஆக்கத்தினைப்பெற்று தனது நிதியில் போட்டிக்கு அனுப்பி வைப்பார் அப்படியானதொரு நல்ல மனம்படைத்தவர் அருங்கலைகள் பேரவையின் அதிகாரி திருமகள் இவரை என்னால் என்றுமே மறக்கமுடியாது.

உங்களுக்கு இயல்பாகவே கைப்பணி மீது ஆர்வம் இருந்ததா…

ஆர்வம் இருந்தது ஆனால் இந்த வேலையினை நான் பயிற்சி பெறவும் வேலைசெய்யவும் காரணமாய் இருந்து என்றால் அது எனது குடும்ப பொருளாதாரமும் சூழ்நிலையும் தான் என்பேன். ஒரு வேளை எனக்கு நல்ல வாழக்கை அமைந்திருந்தால் இந்த வேலை செய்ய வாய்ப்பே இல்லை கணவரோடு இருந்திருந்தால் நான் இந்த வேலையை செய்த இந்தளவிற்கு முன்னேறி இருக்க மாட்டேன். ஒருவகையான கட்டுப்பாட்டுக்குள் இருந்திருப்பேன். எல்லோரும் கட்டுப்பாட்டை மீறிவரச்சொல்லவில்லை எனது வாழ்வில் இப்படியான சூழல் அமைந்தது நிறையத்தோல்விகள் ஏமாற்றங்கள் பாதிப்புக்கள் எல்லாம் கடந்து எனது முயற்சியாலும் தன்னதம்பிக்கையாலும் தான் நான் இன்னிலையை அடைந்துள்ளேன். சும்மா அழுது புலம்புவதால் எந்த விடையத்தினையும் சாதித்து விட முடியாது தன்னம்பிக்கையோடு முயற்சியும் இருந்தால் சாதிக்கலாம்.

முதன்முதலில் தாங்கள் விருது பெறும் போது மனநிலை எப்படியிருந்தது-
2013ம் ஆண்டு விருது பெறும் போது அரசாங்க அதிபராக இருந்தவர் விஸ்வலிங்கம் ஜயா அவர்கள் எனது விருதை மன்னார் நகரமண்டபத்தில் சின்ன விழாவொன்றை நடாத்தித்தான் தந்தார் ஏன் என்றால் கொழும்பில் விருதைப்பெற்றுக்கொண்டு வருகின்றோம். மன்னார் மக்களுக்கு தெரியாது இவ்வாறான செயற்பாடுகள் மன்னார் மக்களுக்கு தெரிவதில்லை அதனால் தான் மன்னார் மண்ணில் திறமையானவர்கள் இருக்கின்றார்களா…? என்பது தெரிவதில்லை என்னைப்பொறுத்தமட்டில் இது ஒரு தாக்கம் தான் தற்போது கிடைத்த தேசிய விருதையும் பெற்றுக்கொண்டு வரும்  போது திருமகள் அவர்கள் எம்.வை.தேசப்பிரிய அரசாங்க அதிபரிடம் காட்டியபோது வாங்கிப்பார்த்து விட்டு சும்மா தந்து விட்டார் எனக்கு மிகவும் கவலையாகத்தான் இருந்தது. சின்ன நிகழ்கொன்றை செய்து பாராட்டி நினைவுச்சின்னம் ஒன்றைத்தரும் போது எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் தெரியுமா…? பெருமையாகத்தான் இருக்கும் இது என்னவென்றால் விருதை அலுமாரியிலும் சான்றிதழை பைலிலும் போட்டுவைக்கவேண்டியது தான் உறவுகளும் பாராட்டுவதில்லை ஊரும் பாராட்டுவதில்லை மாவட்டத்திலும் பாராட்டுவதில்லை எங்கனைப்போன்றவர்கள் எப்போதும் வெளியில் வரப்போவதில்லை…

முதன்மையாக விருது பெறும் போது மனநிலை எவ்வாறு ----

நான் எதிர்பாரக்கவே இல்லை என்னை அந்த விருது விழா மண்டபத்திற்கு அழைத்து செல்கின்றார்கள் அப்போட்டிக்குத்தான் பனைஅபிவிருத்தியின்போதனாசிரியர்கள் நாங்கள் தனியாக செய்து கொண்டு போன பொருட்களோடு ஒவ்வொருவரும் தங்களது ஆக்கங்களை காட்சிப்படத்துகின்றார்கள். எனக்கு சந்தேகம் தான் எனக்கு கிடைக்காது. அங்கு நிற்கப்பிடிக்கவில்லை நான் எனது ஆசிரியரிடம் சொல்லி விட்டு எனது அத்தான் வீட்டிற்கு போறன் கண்காட்சி முடிந்ததும் செல்லுங்க எல்லோரும் மன்னார் போவம் சொல்லி விட்டு அத்தான் விட்டிற்கு வந்து விட்டேன்.  இறுதிப்போட்டியில் எனது ஆக்கம் தான் முதலாம் இடத்தினை தேசிய ரீதியில் பெற்றுக்கொண்ட போது. எனது பெயரை சொல்லி அழைக்க நான் அங்கு இல்லை எனது ஆசிரியர் அவர் எனது மாணவி என்று சொல்லி பரிசைபெறுகின்றார். அந்த மண்டபத்தில் இருந்து வந்த அத்தான் என்னிடம் சொன்னார் நீர் சின்னப்பிள்ளையாக இருந்தால் துக்கிவிடுவேன் எவ்வளவு சந்தோஷமாக இருக்கின்றது. தேசிய ரீதியில் முதலாம் இடம் கிடைப்பது எவ்வளவு பெரிய விடயம் எல்லோரும் என்னை பாராட்டுகின்றார்கள் ஆனால் எனக்கு ஏனோ மகழ்ச்சியாக இல்லை….அதுபோலவே 2ம் 3ம் தடவையும் தேசியவிருதுகளைப்பெறும் போதும் பெரிதாக சந்தோஷம் வரவில்லை ஏன்என்றால் மனம் அந்தளவிற்கு வெந்து நொந்து போயுள்ளது கடவுள் ஆசியுடன் வெற்றிகள் கிடைக்கின்றன(தரமானதும் நேர்த்தியானதும் ஒருங்கமைத்தல் மூன்றினையும் கருத்தில் கொண்டுதான்) பலர் சாதிக்க வேண்டும் என்று கடுமையாக முயற்சியோடு உழைத்து முன்னுக்கு வருவார்கள் அனால் நான் குடும்பச்சூழல் பொருளாதாரம் சவால் இவற்றின் தூண்டுதலால் இந்நிலையினை அடைந்துள்ளேன் என்னைப்போன்றவர்களில் சிலர்.

தங்கள் குருவைப்பற்றி—
மடுவில் நாங்கள் முகாமில் இருந்த போது என்னைத்தேடிவந்து எனக்கு பன்னைவேலையினைக்கற்றுத்தந்தவர் திருமதி சபாநேசன் இவர் எனது குருமட்டுமல்ல சிறந்தவொரு ஆலோசகரும் ஆசிரியரும் ஆவார் பன்னைவேலையில் நான் இவ்வளவிற்கு திறமையானவளாக இருக்க பிரதானகாரணமாணவர் இவர்தான்  தற்போது மடுப்பிரதேசத்தில் பணியாற்றுகின்றார். ஓய்வு பெறப்போகின்றார்.
   
உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத விடையம் என்றால்---
எனது வாழ்க்கையில் ஏற்பட்ட அத்தனை துன்பங்களும் துயரங்களும் மறக்கமுடியாத விடையமே..!

உங்கள் வாழ்வில் நீங்கள் சந்தோஷமான தருணம் என்றால்---
எனது இருபிள்ளைகளும் அருமையான பிள்ளைகள் மற்றவர்களால் மதிக்கப்படுகின்ற அளவிற்கு உள்ளார்கள் எனது பிள்ளைகள் பற்றி பிறர் பெருமையாக கதைக்கும் போது அதை நான் கேட்கும் போதும் எனது மனம் படும் சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை எனது வாழ்வில் நான் முதலில் சந்தோஷமடைந்த விடையம் என்றால் எனது மூத்த மகள் பட்டப்படிப்பினை முடித்து தான் பெற்றுக்கொண்டபட்டத்தினை எனது கரங்களில் தரும் போது நான் அடைந்த சந்தோஷம் எனது வெந்து நொந்துபோன வாழ்க்கையின் வெற்றிக்கான பரிசு.

தங்களது போதனாசிரியர் பணி பற்றி---
இந்த வேலைக்கு நான் மிகவும் சிரமப்பட்டேன் போகாத இடமில்லை எல்லா அலுவலகங்களிலும் போய் நின்றேன். ஒரு முறை இருமுறையல்ல பல முறை பலரிடம் சென்றேன். பலனில்லை ஏமாற்றம் தான் மிஞ்சியது. எல்லாவற்றினையும் தூக்கிப்போட்டுவிட்டு NGO நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்தேன் 2012ல் தான் பாரம்பரிய சிறுகைத்தொழில் கைப்பணி அமைச்சராக மாண்புமிகு  டக்ளஸ்தேவானந்தா அவர்கள் இருந்தபோது பனை அபிவிருத்தி சபையின் பிரதமமுகாமையாளராக இருந்த பசுபதி ஜீவரெட்ணம் ஜயா இவர்கள் மன்னார் வருகை தந்தபோது லிங்கேஸ் தோழர் மற்றும் சுந்தர் அருள்சிலன் போன்றவர்களின் வழிகாட்டலில் அவரிடம் எனது திறமைச்சான்றிதழ்களை காட்டினேன் செய்தும் காட்டினேன் இவ்வளவு திறமையுள்ளவர் வெளியில் இருக்க கூடாது. என்று சொன்னவர் உடனே பகுதிநேர போதனாசிரியராக நியமனம் செய்யதார் 3-6மாதங்கள் தொடர்ச்சியாக பணியாற்றி வந்தேன் 10ம் மாதம் 2014ம் ஆண்டு நிரந்தர நியமனம் எனக்கு கிடைத்தது.

உங்களின் தற்போதைய தேவை என்றால்---
தரமான வேலைப்பாடுகள் செய்து கொள்வதற்கு தையல் இயந்திரம் ஒன்றுதான். என்னிடம் இருக்கும் தையல் இயந்திரம் மிகவும் பழுதடைந்து விட்டது. மாண்புமிகு அமைச்சர் றிஷாட்பதியுதீன் அவர்களின் கீழ் வழிகாட்டலில் பல பெண்களுக்கு தயைல்பயிற்சிகளையும் கைப்பணிப்பயிற்சிகளையும் வழங்கியுள்ளேன். அவர்கள் எல்லோரும் தற்போது நல்ல நிலையில் உள்ளார்கள் அத்தனைபேருக்கும் அமைச்சர் அவர்கள் தையல் இயந்திரங்களை வழங்கியுள்ளார். அவர் வழங்கிய பலரது விடுகளில் சும்மா கிடந்து கறல்பிடிக்கின்றது. எங்களைப்போன்ற தேவையுடையவர்களுக்கு கொடுத்தால் பிரயோசனமாக இருக்கும் எனது வருமானம் எனது குடும்பச்செலவோடும் பொருளாதாரத்தோடும் சரிசமமாய் உள்ளது. இந்த நிலையில எவ்வாறு பெரிய முதலீட்டில் தையல் இயந்திரம் வாங்கமுடியும் பலமுறை அமைச்சர் அவர்களிடம் கேட்டுள்ளேன் ஆனால் இதுவரை கிடைக்கவில்லை கிடைத்தால் மகிழ்ச்சியே….

பனைவளப்போதனாசிரியராக இருக்கும் நீங்கள் பன்னைவேலை எல்லாம் செய்வீர்களா---
பன்னைவேலை சம்மந்தப்பட்ட அனைத்துவிதமான கைப்பணிப்பொருட்களையும் செய்வேன் ஒருமுறைப்பார்த்தால் போதும் சிறப்பாக செய்துவிடுவேன் பூக்கள் செய்தல் தொப்பி பின்னுதல் போன்றவை எனக்கு மிகவும் பிடித்தவை.

மன்னாரில் பனைவளம் அழிக்கப்படுவது பற்றி---
மன்னார் மண்ணில் பனைவளம் அழிக்கப்படுவது எங்களைப்போன்றவர்களுக்கு மிகவும் கவலையான விடயமே பனையே வாழ்வாதாரமாகக்கொண்டவர்களின் நிலைமையினை எண்ணிப்பாருங்கள்…!!! போதனாசிரியராக கடமைபுரியும் போது எமது அலுவலகத்திற்கு பனைமரத்தினை தறிப்பதற்கான அனுமதியினை கோரும் பத்திரத்தினைப்பார்க்கும் போதெல்லாம் மிகவும் கவலையாகவுள்ளது. தற்போது வந்துள்ள வீட்டுத்திட்த்திற்காய் அதிகளவான மரங்கள் அழிக்கப்படுகின்றன அதற்குப்பதிலாக கம்பஸ் மரத்தினைபயன்படுத்துகின்றார்கள் வேறு எதாவது மாற்றீடாக உடனே கொண்டுவரவேண்டும். ஒரு மரத்திற்கு 200 ரூபா வாங்கிக்கொண்டு மரத்தினை தறிக்க அனுமதிக்கின்றார்கள் அந்த பனைமரத்தின் முழுமையான பெறுமதி யாருக்கும் தெரியாது பனையோலை என்குடம்பத்தினை காத்திருக்கின்றது. எனது மகள் சொல்லுவாள் பனையோலைதான் நான் பட்டதாரியாக நிற்கின்றேன். பயன் தருகின்ற ஒரு பிள்ளை போல் தான் பனைமரம் உள்ளது உணருங்கள் உண்மை தெரியும்.

பெண்களுக்கு தங்களின் வாழ்வில் இருந்து----
பெண்களைப்பொறுத்தமட்டில் எதாவது ஒரு சுயதொழில் தெரிந்திருக்க வேண்டும் காரணம் அப்போதுதான் அவர்கள் சொந்தக்காலில் நிற்க முடியும் அதை விட இந்த பன்னைவேலை பெண்களுக்கு மிகவும் நல்லது இலகுவானது ஏன்என்றால்  நான் பனையோலையை தூக்கிக்கொண்டு பயிற்சிக்கு போகும் போது இது எல்லாம் ஒரு தொழிலா… என்று ஏளனம் செய்தவர் இன்று வீட்டில் சும்மா இருக்கின்றார் ஆனால் நான் அன்று பன்னை வேலையை பெருமையாக கருதினேன் எனது திறமையால் முழுமையாக கற்று அதனால் இன்று அரசப்பணியில் 35000 ரூபா சம்பளம் பெறும் ஒரு போதனாசிரியராக உள்ளேன். எந்த தொழிலாக இருந்தாலும் குறைவாக என்னாமல் நாம் முயற்சியுடனும் நம்பிக்கையுடனும் இருக்கவேண்டும் செய்யும் தொழிலே தெய்வம் என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள். இன்று இந்த சமுதாயத்தில் மதிப்பிற்குரிய ஒருத்தியாக இருப்பதற்கு அடையாளம் பனைதான் கற்றுக்கொண்ட கைத்தொழில்தான்.

பெண்கள் எப்படி இருக்க வேண்டும்---
பெண்கள் எனும் போது பெண்ணுக்கே உரிய அடக்கம் கட்டுப்பாடு ஒழுக்கம் இருக்கவேண்டும் அகங்காரம் கூடாது அத்தோடு தாழ்வு மனப்பான்மை பெண்களுக்கு கூடவே கூடாது ஆளுமையுடன் செயற்படவேண்டும் அத்தனை விடையத்திலும். அகங்காரம் ஆணவம் கொண்டபெண்கள் உள்ள குடும்பத்திலும் அந்த பெண்களின் வாழ்விலும் சந்தோஷம் என்பது இருக்காது நிலைக்காது. தற்காலத்தில் ஒருவர் உழைத்து குடும்பத்தை கொண்டு செல்வது கடிணம் அதனால் பெண்களும் உழைக்க வேண்டிய சூழல் இருக்கின்றது. அப்படி இருக்கும் போது நானும் உழைக்கிறன் தானே என்று கர்வம் கொள்ளக்கூடாது. மதிக்காமலும் முடிவுகளை தானே எடுத்தலும் குடும்பத்திற்கு ஆகாது அவ்வாறு செயற்பட்டால் குடும்பத்தில் பிரிவுதான் ஏற்படும் பிரிந்து வாழ்தல் பெண்ணுக்கும் குடும்பத்திற்கும் அழகல்ல பெண்கள் சுயதொழில் ஒன்றைக்கற்றுக்கொண்டால் அதனால் தேவைகளும் மேலதிக வருமானமும் வருவதால் நாட்டிற்கும் வீட்டிற்கும் வருமானம் வரும் அந்த வருமானம் வாழ்வாதாரத்தினை உயர்த்துவதன் மூலம் வறுமை வறியமக்கள் என்ற நிலை மாறி எல்லோரும் வசதியுடன் வாழலாம்.

போதனாசிரியர் என்ற வகையில் பன்னை வேலைப்பயிற்சியளிக்க எத்தனை மாதங்கள் எடுக்கும்---
இந்த பன்னை வேலைப்பயிற்சியை முழுமையாக 1வருடம் எடுக்கும் எல்லாவற்றினையும் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்ன கேள்வி இருக்கின்றதோ… வருமானம் எதில் அதிகம் வருமோ… அதைத்தான் தெரிவு செய்து பயிற்சியளிப்போம் அதற்கு 06மாதம் போதுமானது தரமானதொரு உற்பத்தியாளராக ஆக்கிக்கொள்ள முடியும்.

எத்தனை வகையான பொருட்களை உற்பத்தி செய்யலாம்---
அண்ணளவாக 35-40வரையான பொருட்களை உற்பத்தி செய்யலாம் வருமானம் தரக்கூடிய பொருட்கள் அத்தோடு ஏராளமான வகையில் அழகுக்கான பொருட்களாக செய்யலாம்.

பன்னை வேலையில் சவாலான விடையம் என்றால்---
பன்னை வேலையின் சவால் எனும் போது மழை காலத்தில் பனையோலை மிகவும் பழுதடைகின்றது. நிறம் மாறுகின்றது அதைப்பாதுகாக்க முடிய வில்லை மழைக்குளிருக்கு பங்கஸ் பிடித்து விடுகின்றது.  தடுக்கவும் முடியவில்லை இதனால் பெரும் சிரமமாகவுள்ளது. பாரிய செலவுகள் ஏற்படுகின்றது செய்து வைக்கின்ற பொருட்கள் பாவனைக்கு ஏற்றதாக இல்லாமல் போகின்றது.

தற்போதைய யுவதிகள் விரும்பி கற்கிறார்களா----
பிள்ளைகளுக்கு எல்லாவிதமான பயிற்சிகளையும் தேவையான வளங்களையும் கொடுத்து எமது நேரத்தினை செலவு செய்து பயிற்சியினை வழங்கினால் பயிற்சியை 100 பேர் பெற்றுக்கொள்கின்றார்கள் அதில் 30 பேர் தான் தேறுகின்றார்கள் மீதியுள்ள 70 பேர் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை ஏதோ காரணங்களைக்காட்டி விலகிக்கொள்கின்றார்கள் என்பது மிகவும் கவலையான விடையம். நான் பழக்கிய மாணவர்கள் மட்டும் 150 பேர் உள்ளார்கள் என்றால் எனக்கு முன்பு பழக்கியவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்.
 இதற்கான காரணம் எதுவாக இருக்கும்.....
 நறுவிலிக்குளம் மக்கள் தான் தொடர்ச்சியாக பன்னைவேலையை செய்கின்றார்கள் என்றால் அவர்களுக்கு வெளிநாட்டு தொடர்பாடல் மூலம் ஓடர்களைப்பெற்றுக்கொண்டு நல்ல முறையில் பொருட்களை விற்பனை செய்கின்றார்கள் சாதாரணமாக இங்கு கூடை ஒன்றின் விலை 500 ரூபா என்றால் நறுவிலிக்குளத்தில் அந்த கூடையை 800 ரூபாவிற்கு விற்கின்றார்கள் அவர்கள் சிறந்த தொடர்பாடல் மூலம் அந்த விலைக்கு விற்கக் கூடியதாகவுள்ளது.
பனைஅபிவிருத்திச்சபை நல்ல விலைக்கு பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டும் இல்லையென்றால் நல்லதொரு தொடர்பாடலை ஏற்படுத்திக்கொடுத்தால் அதிகவருமானம் வரும் தொழிலாக அமையுமானால் பயிற்சி பெறுகின்ற பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அத்தோடு இடைவிலகாமல் முழுமையாக பயிற்சியும் நிறைவு செய்து தொழிலாகவும் மேற்கொள்வார்கள் அதற்கு பனைஅபிவிருத்தி அதிகார சபை நல்ல தீர்வை முன்வைக்கவேண்டும. இது காலத்தின் கட்டாயம்.

இதுவரை நீங்கள் பெற்றுக்கொண்ட விருதுகளும் பட்டங்களும் பற்றி---

பெரிதாக இல்லையென்றாலும் சிறப்பானவையாக பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டேன்.
  • தேசிய அருங்கலைகள் பேரவை தேசிய கைப்பணிகள் விருது
    சில்பா-1ம் இடம் 2013
    • தேசிய அருங்கலைகள் பேரவை தேசிய  கைப்பணிகள் விருது சில்பா-3ம் இடம்-2014
    • சர்வதேச மகளிர் தினம் மன்னார் மாவட்டம் -சிறந்த பெண்சாதனையாளர் விருது-08-03-2016
    • இந்துசமய விவகாரஅலுவல்கள் அமைச்சு பனைவளஅபிவிருத்திச்சபை வெள்ளிவிழாச்சான்றிதழ்-(1978-2003) 2ம் இடம் 21-10-2003
    • இந்துசமய விவகாரஅலுவல்கள் அமைச்சு பனைவள அபிவிருத்திச்சப வெள்ளிவிழாச்சான்றிதழ்-(1978-2003) 1ம் இடம் 21-10-2003
  • ,e;Jrka tptfhumYty;fs; mikr;R gidtsmgptpUj;jpr;rig rhd;wpjo;-1k; ,lk;-2016
  • Ministry of  Industry  &Commerce Certificat Traning Course-2010-2011
  • Step One Traning Certificate
  • Save the Children (U.K) Certifict traning-07-02-1993
  • National Appreatience Industrial Traning Authority Certificate Of Proficency-14-02-2012
  • Department Of Industries Northern Province (provincial Industrial Exhibition-2014-2nd Market Basket Palmyrha
  • Department Of Industries Northern Province (provincial Industrial Exhibition-2013-1st Tail Pot Palmyrha
  • Department Of Industries Northern Province (provincial Industrial Exhibition-2014-1st Hospital Basket Palmyrha
  • Department Of Industries Northern Province (provincial Industrial Exhibition-2015-1st  Trawaling Bag Palmyrha Leaf


மன்னார் கலைஞர்களின் எழுச்சியில் வளர்ச்சியில் பங்குகொள்ளும் நியூமன்னார் இணையம் பற்றி தங்களின்….

மன்னார் மாவட்டத்தில் இதுவரை காலமும் எத்தனையோ படைப்பாளிகள் கலைஞர்கள் மாகாணம் மட்டம் தேசியமட்டங்களில் பல விருதுகள் பட்டங்கள் பெற்றுள்ளார்கள் அவை பெரும்பாலும் மன்னார் மக்களில் பெரும்பாலானோருக்கு தெரியாது. அந்தக்குறையினை பல கலைஞர்களின் ஏக்கத்தினை நிவர்த்தி செய்யும் பொருட்டு இனங்கண்டு மன்னார் மாவட்டமக்களுக்கு மட்டுமன்றி வெளிநாடுகளில் உள்ள இணையத்தள நண்பர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் வெளிப்படுத்தும் நியூமன்னார் இணையத்திற்கும் அதன் இயக்குநருக்கும் உங்களுக்கும் எனதும் ஏனைய படைப்பாளிகள் சார்பாகவும நன்றியை தெரிவித்துக்கொள்வதோடு இத்துறையில் இன்னும் முன்னேறிச்செல்ல எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன். அத்துடன் மனமகிழ்வுடன் பாராட்டுக்களைத்தெரிவித்துக்கொள்கின்றேன்.


நியூமன்னார் இணையத்திற்காக
நேர்காணல்-வை.கஜேந்திரன்-















































மன்னார் இணையத்தின் விம்பம் ஊடாக... கைப்பணி கைவினைக்காக தேசிய விருதுகள் பல தடவை பெற்ற ப.ஜெயலஷ்மி Reviewed by Author on January 28, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.