அண்மைய செய்திகள்

recent
-

முதன்முதலில் அதிகாரத்துக்கு வந்த பெண்கள் இவர்கள் தான்! -


ஆசியாவில்தான் பெண்கள் முதன் முதலில் அதிகாரத்துக்கு வந்தார்கள்’ என்று பெருமை பொங்க சொல்லலாம். இலங்கை அதிபராக சிறிமாவோ பண்டார நாயகே, சந்திரிகா குமாரதுங்க, இந்தியாவில் பிரதமராக இந்திரா காந்தி, குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டீல், பாகிஸ்தான் பிரதமராக பெனாசிர் பூட்டோ ஆகியோர் உயர் பதவிகளை அலங்கரித்தார்கள்.
சர்வதேச அளவில் பெண் தலைவர்கள் அதிகாரமிக்க பொறுப்பில் காணப்பட்டாலும், மிகக்குறைவான அளவிலேயே அவர்களின் எண்ணிக்கை இருக்கிறது. ஐ.நா-வில் அங்கம்வகிக்கும் 193 உறுப்பு நாடுகளில், 10 சதவிகித நாடுகளே பெண்களைத் தலைவர்களாகக் கொண்டிருக்கின்றன. 

உலக அளவில் மாநிலங்களையும் உள்ளடக்கி, இப்போது அதிகாரத்தில் உள்ள பெண்கள் எனக் கணக்கில் கொண்டால், 70 பேர் தான் இருக்கிறார்கள். 2014 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் 146 நாடுகளில் உலகப் பொருளாதாரக் கூட்டமைப்பு செய்த ஆய்வின்படி, 56 நாடுகளில் மட்டுமே பெண்கள் அதிகாரப் பதவிகளில் இருக்கிறார்கள். 

அதைவிட, அவர்கள் எத்தனை காலம் அந்தப் பொறுப்பில் இருக்கிறார்கள் என்பதும் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒன்று.தென்னாப்பிரிக்காவில் ஒரு பெண் அதிபர், 14 மணி நேரம் மட்டுமே பதவியில் இருந்தார். ஈக்வடார், மடகாஸ்கர் போன்ற நாடுகளில் இரண்டு நாள்கள் மட்டுமே பெண்கள் தலைவர்களாக இருந்துள்ளனர். கனடாவின் கிம் கேம்ப் பெல், நான்கு மாதங்களே பிரதமர் பதவி வகித்துள்ளார்.
அதிக ஆண்டுகள் ஆட்சியில் இருப்பது, வங்க தேசப் பிரதமர் ஷேக் ஹசீனா.13 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருக்கிறார். இன்று உலகளவில் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் ஜெர்மனியின் சான்சிலர் ஏஞ்சலா மெர்கல் முதலிடம் வகிக்கிறார். இவர் 12 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருக்கிறார். 

லைபீரியாவின் எலன் ஜான்சன் சர்லீஃப், 11 ஆண்டுகளாக அதிபராக உள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் ஐந்தில் மூன்று நாடுகள் மட்டுமே பெண் தலைவர்களைக் கொண்டிருக்கின்றன.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்து சென்றுள்ள பிரிட்டனின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இரண்டாவது பெண் தெரசா மே. மார்கரெட் தாட்சர் 1979 முதல் 1990 வரை பிரிட்டன் பிரதமராக இருந்தார். இவருக்குப் பிறகு தெரசா மே-தான் பிரிட்டனின் பெண் பிரதமர் ஆகியுள்ளார். 

மியான்மரில் ஆங்சான் சூசி இப்போது அதிபராக இல்லை என்றாலும், அவர்தான் இன்றும் அரசின் முதன்மை ஆலோசகர்; அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றவர். 20 ஆண்டுகளாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தவர். மனித உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தவர்.
அத்தகைய ஆங்சான் சூசியின் கொள்கைகள், அரசியல் மதிப்பீடுமீது இப்போது மிகப்பெரிய கறை படிந்துள்ளது. மியான்மரில் கடந்த சில மாதங்களாகப் புத்த பிட்சுகளுக்கும் இஸ்லாமியக் கிளர்ச்சியாளர்கள் குழுக்களுக்கும் இடையே ஏற்பட்ட ஆயுதத் தாக்குதலில் அப்பாவி இஸ்லாமியர்கள் - குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை - கொல்லப்பட்டனர். 

உயிருக்குப் பயந்து லட்சக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்கதேசத்துக்கு இடம்பெயர்ந்துள்ளனர். ஆனால், புத்த பிட்சுக்களுக்கு ஆதரவாக அந்நாட்டு இராணுவமே இஸ்லாமியர் மீது வன்முறையை ஏவிய நிலையில், `ஆங்சான் சூசி அதைத் தடுத்து நிறுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை’ என்கிற குற்றச்சாட்டு எழுந்தது.
வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா, ரோஹிங்கியாக்களுக்கு மனிதாபிமானத்தோடு இடம்கொடுத்தார். ஆனால், அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்ற ஆங்சான் சூசியின் மௌனம், பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவருக்கு வழங்கிய கௌரவ டாக்டர் பட்டத்தை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் திரும்பப் பெற்றது. 

`நோபல் பரிசை இனிமேலும் வைத்திருக்கும் தகுதி, ஆங்சான் சூசிக்கு இல்லை’ என்றார்கள் சிலர். இதுபோன்ற இக்கட்டான தருணங்களில், பெண்கள் தங்களிடம் உள்ள அதிகாரத்தை யாருக்காகப் பயன்படுத்துகிறார்கள் என்பதும் மிக முக்கியம்.
வங்கதேசத்தைப் பொறுத்தவரை, இப்போது பிரதமராக உள்ள ஷேக் ஹசீனா, இதற்குமுன் கலிதா ஜியா என்று இரண்டு பெண் பிரதமர்கள் ஆட்சியில் இருந்துள்ளனர். 1991-ம் ஆண்டு முதல் இவர்கள் இருவரும் மாறிமாறி ஆட்சியில் இருப்பதை `Battle Of The Begums’ என்று வங்க தேசத்தினர் குறிப்பிடுகிறார்கள். 

ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் ஷேக் ஹசீனாவும் அடக்கம். இவர் உலகப் பெண் தலைவர்கள் கூட்டமைப்பிலும் உறுப்பினர். உலகளவில் உள்ள பெண் அதிபர்கள், பிரதமர்கள் குறித்து ஷேக் ஹசீனா ஒரு புத்தகமே எழுதியுள்ளார்.
ரோஹிங்கியா விவகாரத்தை மென்மையாகக் கையாண்டதோடு, அகதிகளாக வந்த இஸ்லாமியரைத் தடுக்காமல் வெளியுறவுக் கொள்கை மூலம் அவர்களைத் திரும்ப அனுப்புவது குறித்த ஏற்பாடுகளை முன்னெடுத்துப் பக்குவமாக இந்தப் பிரச்சினையை அணுகினார். அதேநேரத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் கொல்லப்படுவதற்கு மியான்மர் அரசுக்குக் கடுமையான கண்டனத்தையும் ஷேக் ஹசீனா பதிவு செய்தார். 

கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் முதன்முறையாக ஹிலரி கிளின்டன் போட்டியிட்டார். முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்டனின் மனைவியாக, பிறகு அமெரிக்க வெளியுறவுச் செயலாளராக உலக அரசியலில் இவரின் செயல்பாடுகள் பல ஆண்டுகள் தொடர்ந்தன. அதிபராகவும் இவர் வெள்ளை மாளிகையில் புதிய சரித்திரம் படைப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. 

அவருடைய பிரபலம், கடந்தகால அரசியல் அதிகாரச் செல்வாக்கு இதற்குப் பக்கபலமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டது. இந்தக் கணிப்பும் பொய்த்துப்போகவில்லை. `அதிக செல்வாக்குள்ள தலைவர்’ என்று 30 லட்சம் பேர் ஹிலரியைத் தேர்ந்தெடுத்திருந்தார்கள்.
ஆனால், மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அமெரிக்க மக்கள் ட்ரம்ப்பை அதிபராக்கினார்கள். ஹிலரி மூலம் புதிய வரலாறு அமெரிக்காவில் எழுதப்படப்போகிறது என்று எதிர்பார்த்தால்... ஜனநாயகம், மனித உரிமை, பாலினச் சமத்துவம், வல்லரசு என்ற பெரும் பிம்பம்கொண்ட அமெரிக்காவில்கூட ஒரு பெண் அதிபராக முடியவில்லை என்பதுதான் யதார்த்தம். 

ஹிலரியின் தேர்தல் பிரசாரத்தில் தொலைநோக்குப் பார்வையில், அமெரிக்காவில் தேவையான மாற்றங்கள் குறித்த கொள்கை இருந்தது. சரிசமமான வரி விதிப்பு, அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு, போதைப் பழக்கத்திலிருந்து இளைஞர்களை மீட்டல், பெண்களைப் பாலியல் வன்கொடுமைகளிலிருந்து காத்தல் என நீண்ட பட்டியலை முன்வைத்தார்.
ஆனால், ஹிலரியின் வாக்குறுதியை நம்ப, அமெரிக்கர்கள் தயாராக இல்லை. இங்கே `ஹிலரி’ எனக் குறிப்பிடுவது ஹிலரியின் தனிநபர் மீதான நம்பிக்கையை அல்ல; ஒட்டுமொத்தப் பெண்களின் ஆளுமை குறித்த அமெரிக்கர்களின் மதிப்பீடுதான் அது.ஜெர்மனியின் ஏஞ்சலா மெர்கல் சமீபத்தில்தான் நான்காவது முறையாக சான்சிலராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். 

கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்ததாலோ என்னவோ, சுற்றுச்சூழலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில் அதீத ஆர்வம்காட்டுகிறார். சமீபத்தில் இவர் தலைமையில் ஜி-20 மாநாடு ஹேம்பர்க்கில் நடைபெற்றது. 

அதில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கக் கொண்டுவரப்பட்டுள்ள பாரிஸ் ஒப்பந்தமே பிரதானம். உலக நாடுகள் அனைத்தையும் பாரிஸில் இயற்றப்பட்ட ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்ளவைத்து சூழலைப் பாதுகாப்பதுதான் இப்போது ஏஞ்சலா முன் உள்ள பெரும் சவால். இதில் பாதிக்கடல் தாண்டிவிட்டார்.
இந்த ஒப்பந்தம் நிறைவேறும்போது உலக வரலாற்றில் ஏஞ்சலா அசைக்க முடியாத நபராக அடுத்த தலைமுறையினருக்கும் இருப்பார். இந்த ஒப்பந்தத்துக்கு, முன்னர் இருந்த அமெரிக்க அதிபர் ஒபாமா பச்சைக்கொடி காட்ட, இப்போதைய அதிபர் ட்ரம்ப்போ கறுப்புக் கொடி காட்டி, பல திருத்தங்களைக் கேட்டார். 

ஆனால், அவை சுற்றுச்சூழலுக்கு உகந்ததல்ல என்பதால், ஹேம்பர்க் ஜி-20 மாநாட்டில் ஏஞ்சலா மெர்கல் மறுத்துவிட்டார். `அமெரிக்கா இதை ஆதரிக்கவில்லை என்றால், வருங்காலத் தலைமுறைக்கு பெரும் தவறு விளைவிக்கிறது’ எனக் குறிப்பிட்டார்.
ஜெர்மனியின் 20 சதவிகித மக்கள்தொகை, இடம்பெயர்ந்தவர்களை உள்ளடக்கியது. பெரும்பாலும் இஸ்லாமியர் இருக்கிறார்கள். இந்த நிலையில் தொடர்ந்து அகதிகள் வருகையை ஏஞ்சலா மெர்கல் ஊக்குவிப்பதை ட்ரம்ப் தொடங்கி ஏஞ்சலாவின் எதிர்க்கட்சியான கன்சர் வேட்டிவ் கட்சியினர் வரை கடுமையாக எதிர்க்கிறார்கள்.

குழந்தைகள் உரிமை மற்றும் தொடக்கக் கல்வியை உறுதிப்படுத்தியது, பாலின சமத்துவத்துக்கான முக்கியத்துவம் ஆகியவை ஏஞ்சலாவின் குறிப்பிடத்தக்க பணிகள். சமீபத்தில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்குத் திருமணச் சட்டம் கொண்டுவந்தது வரை ஏஞ்சலாவின் சாதனைப் பட்டியல் நீள்கிறது. `
பெரும் நிறுவனங்களில் உயர் பதவிகளுக்குப் பெண்களுக்கு 30 சதவிதம் இட ஒதுக்கீடு வழங்கியது, ஏஞ்சலா மெர்கலை ஜெர்மனியின் உழைக்கும் பெண்களிடம் ஏஞ்சலாகவே மாற்றியது. புதிய ஜெர்மனியை உருவாக்கியவர்களில் ஏஞ்சலாவுக்கு முதலிடம்’ என ஜெர்மனியர்கள் புகழ்வதுதான் ஏஞ்சலாவின் அரசியல் அதிகாரத்துக்குக் கிடைத்த வெற்றி.
பிரிட்டன் பிரதமராக தெரசா மே, 2016-ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்ற அமெரிக்காவுக்குள் நுழைய, முஸ்லிம் நாடுகள் சிலவற்றுக்குத் தடை விதித்ததை தெரசா மே கடுமையாகக் கண்டித்தார். `

இது அகதிகளின் உரிமை மற்றும் பெண்களின் பாதுகாப்பை மீறிய கட்டுப்பாடு’ என விமர்சித்தார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் `பிரெக்ஸிட்’ எனும் பெரும் சவாலை முன்னிறுத்திதான் இவரது தேர்வே நடைபெற்றது.
இவர் பொறுப்பேற்ற நாளிலிருந்து பிரெக்ஸிட் விவகாரம் பெரும் தலைவலியாக அமைந்தது. இது தொடர்பாக, பல கூட்டங்களை, கருத்தரங்கங்களை, பல ஒப்பந்தங்களை, முக்கிய முடிவுகளை எடுக்கும் இடங்களுக்கு தெரசா மே தள்ளப்பட்டார். 

பிரெக்ஸிட் விவகாரத்தில் தெரசா மே தலைக்கு மேல் கத்தி எப்போதும் இருக்கிறது. இப்போது `பிரெக்ஸிட்'க்குப் பிறகு - அதாவது, ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறிய பின், பிரிட்டனின் பொருளாதாரம், வளர்ச்சி மேம்பாடு தொடர்பான விஷயங்களை முடிவு செய்வதிலும் அவர் கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
அதிகாரத்தில் உள்ள பெண்கள், ஊழல் குற்றச்சாட்டுகளில் மாட்டாமல் இல்லை. பிரேசிலின் அதிபர் டில்மா ரூசெல்ஃப் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி 2016-ம் ஆண்டு பதவியிலிருந்து நீக்கப்பட்டார். ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் ஒருவர், ஊழல் குற்றச்சாட்டில் பதவி விலகுவது அதுவே முதன்முறை.
தென்கொரியாவின் அதிபராக பார்க் கியூன் ஹே, 2013-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்தடுத்த ஆண்டுகளில் உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் இடம்பிடித்தார். பார்க்கின் தந்தை பார்க் சங்க் ஹேவும் தென்கொரியாவின் அதிபராகப் பலமுறை இருந்தவர்.
இந்த அடிப்படையில் பார்க் கியூன் ஹேவை `கட்டளையிடுபவரின் மகள்’ எனக் குறிப்பிட்டனர். இந்நிலையில், 2017-ம் ஆண்டு அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் பார்க் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
உலகளவில் 37 வயதுள்ள இளம் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன். நியூசிலாந்துக்குப் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். `உழைப்பாளர் உரிமைகள், பாலினச் சமத் துவம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிப் பேன்’ என நம்பிக்கையோடு கூறியுள்ளார்.

ஆசியாவில்தான் பெண்கள் முதன் முதலில் அதிகாரத்துக்கு வந்தார்கள்’ என்று பெருமை பொங்க சொல்லலாம். இலங்கை அதிபராக சிறிமாவோ பண்டார நாயகே, சந்திரிகா குமாரதுங்க, இந்தியாவில் பிரதமராக இந்திரா காந்தி, குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டீல், பாகிஸ்தான் பிரதமராக பெனாசிர் பூட்டோ ஆகியோர் உயர் பதவிகளை அலங்கரித்தார்கள்.
உறுதியான முடிவுகள் எடுக்கும் இரும்புப் பெண்மணியாக அறியப்பட்டார் இந்திரா; இராணுவ ஆட்சியை மாற்றி, மக்களாட்சியை பாகிஸ்தானில் மலரச் செய்தார் பெனாசிர்.

இருவரும் அரசியல் படுகொலைகளால் இறந்தது சோகம்.லைபீரியாவின் அதிபர் எலன் ஜான்சன் சர்லீஃப்பை, `நாட்டுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்’ என்றும் அவர்தான் தனக்கு முன்னுதாரணம் என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஒருமுறை குறிப்பிட்டிருக்கிறார்.
`எதிர்காலம் என்பது நம்பிக்கையையும் சத்தியத்தையையும் உள்ளடக்கியது’ என்கிறார் எலன் ஜான்சன். ஏஞ்சலா மெர்கல் தன் வெற்றிக்குக் காரணமாக எப்போதும் சொல்வது, `என்னை நான் ஒருபோதும் குறைத்து மதிப்பிட்டதில்லை’ என்பதுதான். இவையே, இந்தப் பெண்கள் மட்டுமல்ல... இனி உலகில் பெரும் மாற்றங்களை நிகழ்த்தப்போகும் பெண்களும் கொண்டிருக்க வேண்டிய அரசியலும் அதிகாரமும்!
முதன்முதலில் அதிகாரத்துக்கு வந்த பெண்கள் இவர்கள் தான்! - Reviewed by Author on January 02, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.