அண்மைய செய்திகள்

recent
-

எமது பண்பாடுகளை வெளிக்கொணர்வது கலைவடிவங்களே-செழுங்கலை வித்தகர் கஸ்ப்பார் ஜேம்ஸ்


தங்களைப்பற்றி…
எனது சொந்த  இடம் நானாட்டான் ஆகும் எனது தந்தை வயித்தி கஸ்ப்பார் தாயார் தொம்மை விக்ரோறியா எனது மனைவி கிறேஸ் அருளம்மா பிள்ளைகளுடன் நானாட்டான் பள்ளக்கமம் கிராமத்தில் கலையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றேன்.

தங்களது கல்விக்காலம் பற்றி---
நான் எனது ஆரம்பக்கல்வியில் இருந்து க.பொ.சாதாரண தரம் வரை மன்.முருங்கன் மத்திய மகாவித்தியாலயத்தில் கற்றுக்கொண்டேன்.கல்வியும் கலைநடிப்புமாக அருமையான காலம் அது
கலைப்பயணம் பற்றி....
கல்வி கற்கும் போது ஆரம்பமானது அதுவும் தரம் 05 ஆண்டில் கல்வி கற்றுக்கொண்டு இருக்கும் போது பாடசாலை மாணவர் மன்ற நிகழ்வுகளில் கட்டுரை வாசித்தல் கவிதை வாசித்தல் பேச்சுப்போட்டிகளில் கலந்து கொண்டு எனது திறமையினை வெளிப்படுத்தி வந்தேன் தரம் 07ல்கல்வி கற்கும் போது விவிலியத்தில் இருந்து எடுத்த ஊதாரி மைந்தன் உவமையை “திருந்திய மகன்” எனும் நாடகத்தினை எழுதி 20 நிமிடம் சகமாணவர்களுடன் சேர்ந்து அரங்கேற்றினேன் பாடசாலையின் ஆசிரியர் மிகவும் பாராட்டினர் அன்றிலிருந்து எனக்கு தமிழ்ப்பாடம் கற்று தந்த ஆசிரியர் திரு.செபமாலை குழந்தை வழிகாட்டியாக இருந்து என்னை ஒரு நாடக நடிகனாக உருவாக்கினார்.

தங்களது முதல் அரங்கேற்றம் பற்றி-----
எனது வழிகாட்டியாக திரு.செபமாலை குழந்தை ஆசிரியர் அவர்களின் படைப்புகளில்  சில கூத்துக்களில்  அதாவது “யார் குழந்தை” "கவரி வீசீய காவலன்" போன்றவற்றில் நடிகனாக்கி பல மேடைகளில் ஏற்றி அறிமுகமாக்கினார் எனது வாழ்வில் மறக்கமுடியாத கூத்தும்’ முதல் கூத்தும் யார் குழந்தை என்பது தான் 1972ம் ஆண்டு யாழ்ப்பாணம் வீரசிங்க மண்டபத்தில் கூத்து அரங்கேறியது.
 எமது குழு முருங்கனில் இருந்து புகைவண்டி மூலம் மதவாச்சி சென்று அங்கிருந்து யாழ்ப்பாணம் சென்றோம் அன்றிரவு யாழ்-மத்திய கல்லூரியில் தங்கவைக்கப்பட்டோம் எனக்கு யாழ்ப்பணம் தெரியாது அன்று தான் முதல் தடவைபோயிருந்தேன் மறுநாள் காலை10 மணிக்கு நாடகம் அரங்கேறியது.அதன் பின்பு இரட்டைதட்டு பேரூந்தில் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையைப்பார்வையிட்டு மன்னார் வந்துசேர்ந்தோம். மீண்டும் ஆசிரியரின் கல்சுமந்த காவலன் கூத்துப்போட்டிக்காக மட்டடக்களப்பு சென்றோம். இரண்டு மாவட்டங்களும் அன்று எனக்கு புதிய இடமாகவே இருந்தது.

நாடகமேடையில் நடந்த விபரீதம்….
சில வருடங்களின் பின் மறைந்த முன்னாள் அதிபர் அ.செபமாலை அவர்கள் மாணவர் குழுவை வைத்து வாணிவிழாவின் போது யாருக்கு வெற்றி என்ற(சரஸ்வதி சபதம் படம்)என்ற நாடகத்தினை உருவாக்கி அரங்கேற்றம் செய்தார் அதில் நான் வீரமல்லன் என்ற தளபதி பாத்திரம் ஏற்று நடித்தேன் இது பல்வேறு இடங்களில் 13 தடவை மேடையேற்றப்பட்டது.

பின்னர் இன்னொரு படைப்பான கரிகாற்சோழன் என்ற சரித்திர நாடகம் எமது பாடசாலையின் கலைவிழாவில் மேடையேற்றப்பட்டது அதில் நான் கரிகாலனின் நண்பன் மாவூரன் மற்றும் வேளிர் குலத்தலைவன் என்ற இரண்டு பாத்திரங்கள் ஏற்று நடித்தேன். அப்போதும் அந்நாடகப்போட்டிக்காக யாழ்ப்பாணம் சென்றோம் இதில் வேளிருக்கும் கரிகாலனுக்கும் நடக்கும் வாள்சண்டையானது கவர்ச்சிக்கு உரியதாக இருக்க வேண்டும் என்பதற்காக எங்களின் வாள்களுக்கு மின்சாரம் பொருத்தப்பட்டது. வாள்கள் மோதும் போது தீப்பொறி பறக்கும். அதாவது எமக்கு மின்சாரம் மூலம் தாக்கம் ஏற்பட்டால் உடனே மின்இணைப்பைத்துண்டிப்பதற்கு ஒருவர் நியமிக்கப்பட்டார் சண்டை ஆரம்பமானது நாம் அணிந்த பாதணி(சப்பாத்து)இதில் லாடம் என்கின்ற இரும்பாலான தகடு பொருத்தப்பட்டு இருந்தது.யாழ் இந்துக்கல்லூரி மேடை பலகையால் ஆனது மேடையில் மணல்தூவி படிந்திருந்தது.
 தற்செயலாக நான் தடுமாறி விழுந்துவிட்டேன் சகநடிகரும் பதட்டடப்பட்டு விடடார். 
மின்சாரப்பொறுப்பாளரும் மெய்மறந்த நிலை நாங்கள் இருவரும் ஏதோ ஒரு விதமாய் சமாளித்துக்கொண்டோம். ஆனால் பயம் ஒரு புறம் ஆசிரியரோ மிகவும் கண்டிப்பானவர் சகநடிகர் சொன்னார் பிழைவிட்டிற்றோம் அடி நிச்சயம் ஏன் எனில் இந்த வாள் சண்டை பழகுவதற்காக குலேபாகாவலி என்ற படத்தினை பல தடவை கூட்டிச்சென்று காட்டியிருந்தார்.

 ஒருவாறாக நாடகம் முடிந்து வெளியே வந்ததும் நடுவராக இருந்தவர்களில் ஒருவர் எம்மிடம் வந்து ஆரத்தழுவி கைலாகு கொடுத்து எங்களின் வாள் சண்டையின் தன்மையைப்பார்த்துதான் நடுவர் மூவரும் மேலதிக புள்ளிகளை வழங்கியிருந்தோம் என்றார் அதன் பின்புதான் ஆசிரியரின் முகம் மலர்ச்சி கண்டது. அதன் பின்பும் இவரால் உருவாக்கப்பட்ட 20ற்கும் மேற்பட்ட நாடகங்களில் பாடசாலையின் இறுதிக்காலம் வரை நடித்தேன். குறிப்பாக வீரத்திருமகன் சேரன் செங்குட்டுவன் வரலாற்றில் நான் வில்லவன் என்ற தளபதிப்பாத்திரத்தில் நடித்தேன் இவ்நாடகம் 10 தடவைக்கு மேல் மேடையேறியது.

குருவாக்கும் எனது கலைப்பயணமும்….
நான் 1975ம் ஆண்டு க.பொ.த சாதாரணப்பரீட்சைக்கு தோற்றவிருந்த போது எனது ஞானத்தந்தை(தொட்டப்பா) சுண்டுக்குழி வரகவி உயர்திரு கபிரிகேல்ப் புலவர் என்னை அழைத்து என்நாவில் அவரின் எழதுகோளால் அட்சரம் எழுதி ஆசி கூறி அனுப்பினார் அதன்பின்பே சுயமாக எனக்கு பாடல்கள் எழுதும் வல்லமை கிடைத்தது 1977ம் ஆண்டு காலப்பகுதியில் முன்னைய எமது நவஜோதிக்கலாமன்றத்தினைப்புனரமைத்து மீண்டுமாக செயல்படவைத்தேன் பின்பு மன்னார் பகுதி பாராளுமன்ற உறுப்பினர் மறைந்த கௌரவ சு10சைதாசன் அவர்களுக்கு வரவேற்பு விழாவொன்று ஒழுங்குபடுத்தி முழு இரவுக்கலை நிகழ்வுகள் நடாத்தினோம் அதில் நான்
  • வீரமங்கை நாட்டுக்கூத்து
  • விசப்பரீட்சை-(வில்லியம் தெல் கதை)
  • இன்பபுரி இளவரசன் சரித்திர நாடகம் போன்றவற்றை அரங்கேற்றம் செய்தேன் 02 ஆண்டுகட்டு பின்னர் மீண்டும் மோர் கலைவிழாவில் நாடகம் நடாத்தி
  • வீர வேந்தன்-கரிகாலச்சோழனின் சரிதை ஒரு பகுதி-நாட்டுக்கூத்து
  • யாருக்கு வெற்றி-புராண நாடகம்
  • பாட்டு வாத்தியாரும் மோட்டுவேலைக்காரனும்-நகைச்சுவை நாடகம் போன்றவற்றினை எழுதி மேடையேற்றினேன் இதனால் என்னுடன் இணைந்து முன்னைய கிராம அலுவலரான முருங்கன் பிட்டி திருவாளர்.புஸ்பராஜா என்பவர் நாமும் சில நிகழ்வுகள் செய்வோம் என்றார் அதற்கமைய அல்லோல கல்லோலம் என்ற நகைச்சுவையுடன் கலந்த சமூகசீர்திருத்த நாடகத்தினை உருவாக்கி முருங்கன் சிலாவத்துறை பண்டிவிரிச்சான் மன்னார் அடம்பன் போன்ற இடங்களில் மேடையேற்றம் அதில் எனக்கு எமனின் கட்டளையாளர் சித்திரப்புத்தன் பாத்திரம் கிடைத்தது.

தாங்கள் எழுதி இயக்கி நடித்த நாடகங்கள் பற்றி---
  • 1981ம் ஆண்டு திருமணமாகி நானாட்டான் வந்த பின்னர் நானாட்டான் பிரதேச கலாச்சார நாடக விழாப்போட்டியில் புதுயுகம் படைப்போம் என்ற பெண்விடுதலை தொடர்பான நாடகத்தில் 2ம் கிடைத்தது .
  • முருங்கன் சனசமூக நிலையம் நடாத்திய நாட்டுக்கூத்து போட்டியில் எனது படைப்பான வீரவேந்தன் கூத்திற்கு 03ம் இடம் கிடைத்தது.
தொடர்ந்து  சமகால நிகழ்வுகளை சித்தரிக்கும் வகையில் பலதரப்பட்ட கூத்துக்கள் நாடகங்கள் பலவற்றினை மேடையேற்றினேன் எமது கிராம அந்தோனியார் திருவிழாக்களின் போது கலை நிகழ்வுகள் நடாத்தி வந்தோம்.
  • பாஞ்சாலி சபதம்-பாண்டவரின் சரிதை நாட்டுக்கூத்து
  • உயிர் மீட்ட உத்தமி-சத்தியவான் சாவித்திரி சரிதை
  • யாரப்பா இவர்கள்-நகைச்சுவை நாடகம்
  • மாமியாரா...சாமியாரா-நகைச்சுவை நாடகம்
  • பஞ்சவடிவக்காவலன்-இராமாயனப்பகுதி நாட்டுக்கூத்து
  • அப்பா டாட்டா -நகைச்சுவை நாடகம்
  • செங்குருதி-திருமுழுக்கு அருளப்பர் சரிதை நாட்டுக்கூத்து
  • அன்பே பெரிது-வில்லிசை
மேலும் நாட்டார் பாடல் கும்மி வில்லிசை போன்றவை எழுதி அரங்கேற்றம் செய்தேன்.
நான் நடிகனாக பங்கேற்ற சில ஏட்டுச்சுவடி நாடகங்கள்....
  • புனித தோமையார் வாசாப்பு-(சாம்புவன்-வர்த்தகன்-குடிசெனர்-கந்துப்பூர் அரசனின் தம்பி மங்களம்)
  • புனித சந்தியோகுமையோர் நாடகம்-3இரவுகள் சாம்புவன்-மந்திரவாதியின் சீடன் காப்புலி-1ம் தருக்க மன்னன் 2ம் தருக்க மன்னன் இவ்நிகழ்வுகழில் நாடககுழுவில் செயலாளராகப்பணியாற்றினேன்.

ஓப்பனைக்கலை நெறியாள்கை பற்றி---
  • மோட்டைக்கடை பாடசாலையில் தமிழ்தினப்போட்டிக்காக காத்தவராயன் சிந்துநடைக்கூத்து 05தடவைகள் மாவட்ட மட்டம் 1ம்இடம் மாகாண மட்டம்-02ம்இடம்
  • உயித்தராசன் குளம் பாடசாலையில் தமிழ்தினப்போட்டிக்காக காத்தவராயன் சிந்துநடைக்கூத்து  மாவட்ட மட்டம் 1ம்இடம் மாகாண மட்டம்-சென்றது.
  • முருங்கன் ம.வி –பலகூத்துக்கள் நாடகங்கள் தமிழ்த்தினப்போட்டிக்கு மாவட்ட மட்டத்தில் பரிசில்கள் பெற்றது.
  • புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் தமிழ்தினப்போட்டிக்காக வாலிவதம் வடமோடிக்கூத்து மாவட்ட மட்டம் 1ம்இடம் வடகிழக்கு மாகாண மட்டம்-02ம்இடம்
  • செஞ்சோற்றுக்கடன் வடமோடிக்கூத்து மாவட்ட மட்டம் 1ம்இடம் வட மாகாண மட்டம்-01ம்இடம்.
  • மன்.கருங்கண்டல் பாடசாலையில் காத்தவராயன் வலைய மட்டம் இத்துடன் அவ்நிகழ்வானது மாவட்ட மட்டம் 1ம்இடம் காத்தவராயன் சவேரியார் கல்லூரியின் பரிசளிப்பு நிகழ்விற்காக சிறப்பு றிகழ்வு மேடையேற்றப்பட்டது.
  • இரணை இலுப்பைக்குளம் காத்தவராயன்-இராசேந்திர குளம்
  • நேரியகுளம் இலுப்பைக்குளம் தமிழ்தினப்போட்டிக்காக வவுனியா மாவட்டம் நீதிக்குப்பின் பாசம்  மாவட்டம்-1ம் இடம் மாகாண 2ம் இடம்
  • மன்னார் அம்பாள்புரக்கிராமம் அறநெறிப்பாடசாலை போட்டி நிகழ்வில் காரைகால் அம்மையார் நாடகம் 1ம் இடம்
  • கருங்கண்டல் துக்கையம்மன் கலாமன்றம்- காத்தவராயன்-5தடவை மேடையேற்றம்.
  • முருங்கன் மெதடிஸ் திருச்சபை நிகழ்வு-"தாவீது முதல் சாலமன் வரை" கூத்திற்கு

ஓலைச்சுவடிகள் நாடக ஒப்பனைகள்
  • தோமையார் வாசாப்பு-பண்டிவிரிச்சான் கல்னாட்டி களிமோட்டை பள்ளக்கமம் பிடாரி குளம் உயிர்த்தராசன்குளம் இலுப்பைக்குளம் இரண்டு தடவைகளும் முத்தரிப்பு துறை மாதாகிராமம் மூன்று தடவைகளும்
  • சற்பசாத வாசாப்பு-கற்கிடந்தகுளம்
  • மூவிராசாக்கள் வாசாப்பு-நெச்சிக்குளம் 
  • சந்தியோகுமையோர் நாடகம்-முருங்கன் மூன்று இரவுகள் இரண்டு தடவை
  • எம்பரதோர் நாடகம் சிறுத்தோப்பு-இரண்டு இரவு
  • அந்தோனியார் நாடகம்-(தேவன்பிட்டி பள்ளிமுனை)- இரண்டு இரவு
  • சந்த லூசியா நாடகம் பள்ளிமுனை-இரண்டு இரவு
  • சந்திரகாசன் நாடகம் சுண்டுக்குழி -மூன்று இரவு
  • திருச்செல்வர் நாடகம் புதுக்கமம் -மூன்று இரவு
  • இராயப்பர் நாடகம் வஞ்சியன்குளம் -இரண்டு இரவு
  • சவுல் பவுல் நானாட்டான் -இரண்டு தடவை
  • யோசப்வாஸ் வாசாப்பு பரிகாரிகண்டல் இவற்றுடன் கோயில் விழாக்கள் கிறிஸ்மஸ் ஒளிவிழாக்கள் பலவற்றிற்கு ஒப்பனை நெறியாள்கை செய்துள்ளேன் மற்றும் கட்டிடக்கலை மரச்சிற்பக்கலைகளுக்கு அரசசான்றிதழ்களும் பெற்றுள்ளேன். சித்திரக்கலையிலும் அனுபவம் உண்டு அரசர் மந்திரகளுக்களுக்கான கிறீடங்கள் போன்ற பலவிடையங்களை நான் வரைந்து உருவங்கள் செய்வேன்.

போட்டி நிகழ்வில் ஏற்பட்ட பிரச்சினைகள் ஏதும்----
ஓன்று இரண்டு அல்ல பலதடவை கள் பிரச்சினைகள் இடையூறுகள் சந்தித்து சாதித்துள்ளோம் அதில் ஒரதடவை நான் ஒப்பனை நெறியாள்கை செய்து மன்.புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலைக்காக வடகிழ்க்கு மாகாண போட்டிக்காக திருகோணமலை சென்றபோது எமது வாலிவதை கூத்தினை வடமோடியாகவே தயாரித்தோம் அதனைப்பார்வையிட்ட பின்பு பேராசிரியர் மௌனகுரு அவர்கள் எமது கூத்தானது நன்றாகவும் கேட்பதற்கு இனிமையாகவும் நடிப்பும் சிறப்பாகவுள்ளது என்றார்.
 ஆனால் எம்மால் தயாரித்த வடமோடி விதிகட்கு அமைவாக இல்லை என்றார். நாமும் எமது மாவட்டத்தில் இதுவே வடமோடியாக உள்ளது என்றோம் சில கருத்துப்பரிமாற்றத்தின் பின் நிங்கள் உஙக்ள பிரதேசத்திற்கு அமைவாக பிரதேசக்கூத்து என வரையறைப்படுத்தி கொள்ளுங்கள் என்று தீர்பளித்தார். ஆத்துடன் முருங்கன் முத்தமிழ்க்கலாமன்ற நிகழ்வுகட்கும் பலவற்றிற்கு ஒப்பனை செய்துள்ளேன் சிறப்பாக முன்னைய வடமாகாண ஆளுநர் கௌரவ சந்திரசிறி அவர்களால் முன்னெடுக்கப்பட்ட போட்டி நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றபோது கூத்துவழி நடனத்திற்கு ஒப்பனை செய்து பாராட்டப்பட்டேன்.

தங்களின் பொதுச்சேவைகள் பற்றி----
  • செயலாளர்-முருங்கன் மகாவித்தியாலய பாடசாலையின் 3ம்தடவையாக
  • செயலாளர்-முருங்கன் கிராம அபிவிருத்திசங்கத்தின் மற்றும் சனசமூகநிலையத்தில் தொடர்ந்து 7வருடங்கள்
  • செயலாளர்-முருங்கன் விவசாய அமைப்பில் நீர்ப்பாசன சேவையாளர்
  • கல்னாட்டி கோவில் தலைவர் பின்னர் பொருலாளர்
  • தலைவர்-முருங்கன் உதயஜோதி விளையாட்டு கழகத்தினை உருவாக்கினேன்
  • தலைவர்-பெருச்சார் கட்டு சனசமூகத்தினை உருவாக்கினேன்
  • செயலாளர்-சேவாலங்கா சங்கத்தை எமது கிராமத்திற்குள் உள்வாங்கி
  • காங்கேசன்துறை சீமெந்துக்கூட்டுத்தாபன ஊழியராக இருந்தபோதுபொழுதுபோக்கு கழக பகுதித்தலைவர்
  • நலன்புரிச்ங்க இணைச்செயலாளர்.
  • 2002ம் ஆண்டு மன்னார் முருங்கன் சேகர மெதடிஸ்திருச்சபையில் உருவாகிய நானாட்டான் பிரதேச மட்ட கலைஞர் அவையின் தலைவராக பணியாற்றினேன்.
    வடமாகாண கலாச்சார அவையின் மன்னார் மாவட்ட 05 உறுப்பினர்களில் நானும் ஒருவன்.
மூத்த கலைஞர்கள் சந்திப்பு பற்றி---
காங்கேசன்துறையில் பணிபுரிந்த காலத்தில் மிகவும் மூத்த கலைஞரான திரு.வி.வி.வைரமுத்து அவர்களின் சினேகம் கிடைத்தது அவரது இசைநாடகமான அரிச்சந்திர மாயாணகாண்டத்தில் எனக்கும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அவரின் மூலமாக கலைஞர் பூந்தான் யோசேப்பு அவர்களின் நட்பும் கிடைத்தது நல்ல அருமையான பல கலைஞர்களோடு சேர்ந்து பணியாற்றியுள்ளேன்.

விளையாட்டுத்துறை பற்றி---
பாடசாலைக்காலத்திலும் கரப்பந்தாட்டம் உதைபந்தாட்டம் போன்றவற்றின் குழுத்தலைவராக இருந்து செயற்பட்டமை இதே போல் சீமெந்துகூட்டுத்தாபனத்திலும் கரப்பந்தாட்டம் உதைபந்தாட்டம் போன்றவற்றின் குழுத்தலைவராக இருந்து செயற்பட்டமை. 1989ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை சீமெந்துகூட்டுத்தாபனங்கட்கு இடையிலான ரதைபந்தாட்டப்போட்டி சுகததாச விளையாட்டரங்கில் நடந்தது எமது குழு முதல்இடம்பெற்று 08பவுணிலான தங்கக்கோப்பையை வென்றது.

தங்களது கலைச்சேவையை பாரட்டி தந்த விருதுகள் பட்டங்கள் பற்றி---
  • "கலைஞர்"-30-09-2000ம் ஆண்டு முருங்கன் கிராம அபிவிருத்திச்சங்கத்தின் 51ம்ஆண்டு நிறைவு விழாவில் பிரதேச செயலாளர் உயர் திரு.அ.பத்திநாதன் அவர்களினால் வழங்கப்பட்டது.
  • "கலைச்சின்னம்"-04-06-2011மன்.நானாட்டான் மகாவித்தியாலய கலைவிழாவின்போது கலைப்பணிக்காக வழங்கப்பட்டது.
  • "செழுங்கலை வித்தகர்" 31-05-2013 நானாட்டான் கலாச்சாரப்பேரவையால் கலாச்சார விழாவில் வழங்கப்பட்டது.
  • இத்துடன் "கலாபூஷணம்" "ஜனாதிபதி" "முதலமைச்சர்" விருதுகளிற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் இலங்கை இந்திய திரைப்படக்கூட்டுததாபனமான மாஸ் திரைப்படக்கலலூரியால் விருதும் பெறவுள்ளேன்.

தங்களின் அனுபவத்தில் இருந்து இளைஞர் யுவதிகளுக்கு…..
எமது பண்பாடுகளை வெளிக்கொணர்வது கலைவடிவங்களே ஆகும் பண்டையகால விழுமியங்களை சித்தரித்து காட்டுவதும் நாடகம் சித்திரம் போன்றவைதான் இதை பேணிக்காப்பது உங்களின் பொறுப்பாகும் தற்போது தொலைக்காட்சியினைப்பார்த்தோமானால் குறிப்பாக இந்திய தொலைக்காட்சிகளில் அந்நாட்டு கலைகலாச்சாரங்களே அதை நேரம் தவறாது அலைவரிசைகளை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி மாற்றிப்பார்க்கின்றோம்.
எமது நாட்டின் தொலைக்காட்சியில் பெரும்பான்மை பக்கமே சார்ந்துள்ளது ஒருசில தமிழ் அலைவரிசைகளே அதிலும் இந்திய நிகழ்வுகளே பெரும்பான்மையாகவுள்ளது அதை நாம் பார்ப்பது இரசிப்பதும் தவறல்ல நாமும் ஏன் இவ்வாறு எமது நிகழ்ச்சிகளைசெய்யக்கூடாது என்றுகேட்டால் அது உங்களால் முடியும் எமது இயல்பிற்கு ஏற்ப  பாரம்பரிய கலை ஏற்பாடுகளை கட்டிக்காக்க நீங்கள் தான் முன்வரவேண்டும்.
எனது வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.

 சில வருடங்களின் முன்பு நான் முருங்கனின் அபிவிருத்தி சங்கத்தின் செயலாளராக இருந்த நேரம் உயர்தரமாணவர்களை சுற்றுலா கூட்டிச்சென்றோம் அப்போது இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்திற்கும் செல்ல நேர்ந்தது. ஓவ்வொரு கலையகமாகப்பார்வையிட்டோம் ஒலிபரப்பு பதிவாகும் பிரிவிற்கு வந்த போது சிறுவர் நிகழ்வை பதிவு செய்துகொண்டு இருந்தார் மூத்த அறிவிப்பாளர் திரு.மயில்வாகனம் சர்வானந்த அவர்கள் நாம் மன்னாரில் இருந்து வந்த பாடசாலை எனக்கேட்டதும் வெளியே வந்து எம்மை வரவேற்றார். அவர் மன்னார் மண்ணின் பாரம்பரியக்கலைகளை மிகவும் இரசிப்பவர். உடனே எம்மை கலையகத்திற்கு அழைத்துச்சென்று சில நிகழ்வுகளை நடாத்திக்காட்டுமாறு கேட்டார் அதற்கமைய நான் தோமையார் உள்ள பாடலும் எமது கிராமவைபவங்களில் பாடப்படும் பாடலான "வளமுற்றெழுந்த" என்னும் பாடலைப்பாட அதற்கான பொருள் விளக்கத்தினையும் கொடுத்தேன் அதனை அவர் ஒலிப்பதிவாக்கி அன்று மாலை 7-30 மணிக்கு வானொலியில் ஒலிக்கவிட்டார்.

அப்போது ஒரு வார்த்தை வெளியிட்டார் "பாரம்பரியம் அழியாத மாதோட்டம்" என்று நினைக்கவே எவ்வளவு பெருமையாகவுள்ளது. எனவே எமது பாரம்பரியமான கலைகலாச்சார பண்பாடுகளை காப்பீர்கள் காக்கவேண்டும் கடமையும் கூட... உங்களை நம்பியே நாம்.

மன்னார் கலைஞர்களின் நண்பனாக செயல்படும் நியூமன்னார் இணையம் பற்றி---
எமது நாட்டில்செயற்படும் ஊடகங்கள் முதலில் இலைமறை காயாக எமது கலைஞர்களை வெளிக்கொணரவேண்டும் பலவகையிலும் திறமையுள்ளவர்களாக இருக்கின்றார்கள் அவர்களின் ஆற்றலைப்பதிவாக்கி சிறப்பிக்க வேண்டுகின்றேன்.இந்தியா தொலைக்காட்சி அலைவரிசையான சீ-தமிழ் எவ்வாறு திறமையானவர்களை வெளிக்கொணர்கின்றதோ அதே போல நியூமன்னார் இணையமும் தொடர்ந்து செயலாற்ற வேண்டும். இயலுமானவரை எமது கலைகலையும் கலைஞர்களையும் சிறப்பான முறையில் வெளிப்படுத்தி காக்க வேண்டும் எனவேண்டுகின்றேன்.
“இசையால் அகிலமெல்லாம் அசையும் கலை வழி தனிவழியே”

நியூமன்னார் இணையத்திற்காக
சந்திப்பு- கவிஞர் வை.கஜேந்திரன்





































எமது பண்பாடுகளை வெளிக்கொணர்வது கலைவடிவங்களே-செழுங்கலை வித்தகர் கஸ்ப்பார் ஜேம்ஸ் Reviewed by Author on August 11, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.