அண்மைய செய்திகள்

recent
-

அரசாங்கம் நல்லிணக்கத்தை உண்மையில் விரும்பியிருந்தால் முல்லைத்தீவில் தமிழரின் வாடிகள் எரிக்கப்பட்டிருக்காது! ரவிகரன்.



இலங்கை ஆட்சியாளர்கள் உண்மையிலேயே இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை விரும்புபவர்களாக இருந்திருந்தால் முல்லைத்தீவில் நேற்று முன்தினம் தமிழ் மக்களுடைய வாடிகள் கொழுத்தப்பட்டிருக்காது. தென்னிலங்கை மீனவர்கள் அட்டகாசம் செய்திருக்க முடியாது.

மேற்கண்டவாறு வடமாகாணசபை உறுப்பினர்  துரைராசா - ரவிகரன் தெரிவித்துள்ளார். நாயாறு பகுதியில் தமிழ் மீனவர்களின் வாடிகள் எரிக்கப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

சட்டவிரோத தொழில்களை செய்யும் மீனவர்கள் தொடர்பாக காவற்றுறையினருக்கும், கடற்படையினருக்கும் தெரியப்படுத்துங்கள் என கடற்றொழில் அமைச்சர் கூறியிருந்தமைக்கு அமைவாக தமிழ் மீனவர்கள் நடந்து கொண்டார்கள்.
அதுவும் அமைதியாகவே நடந்து கொண்டார்கள். அதற்காக நேற்று முன்தினம் இரவு அவர்களுடைய வாடிகள் கொழுத்தப்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு அரசாங்கமே காரணம்.

இந்த அரசாங்கம் நல்லிணக்கத்தை அல்லது இனங்களுக்கிடையில் நல்லுறவை விரும்புமாக இருந்தால் இன்று இந்த சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை. பிலியந்தலையிலும், வென்னப்புவவிலும் தமிழ் மீனவர்கள் எந்த அனுமதியும் பெறாமல் வாடிகளை அமைக்க முடியுமா?

100 வீதம் அதற்கு வாய்ப்பில்லை. அப்படியிருக்க முல்லைத்தீவில் மட்டும் எந்த அனுமதியும் இல்லாமல் எங்களுடைய மக்களின் வாழ்வாதாரத்தை அழித்துக்கொண்டு எல்லோரும் வரலாம் போகலாம் என்பது என்ன நீதி?

மேலும் எங்களுடைய சொந்த மண்ணில் வந்து அடாத்தாக இருந்து கொண்டு எங்களுடைய வாடிகளையே கொழுத்தும் அளவுக்கு சிங்கள மீனவர்களுக்கு தைரியம் கொடுப்பது அரசாங்கம். எதனை செய்தாலும் நாங்கள் தப்பிக்கலாம் என்ற நம்பிக்கை கொடுப்பது அரசாங்கம். இதற்கு நல்ல உதாரணம் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு தமிழ் மீனவர்களின் வாடிகள் கொழுத்தப்பட்டன. அரசாங்கம் அல்லது காவற்றுறையினர் நினைத்திருந்தால் நேற்று முன்தினம் இரவே குற்றவாளிகளை கைது செய்திருக்கலாம்.

ஆனால் நேற்று மதியம் வரை இந்த விடயத்தை சமாளிப்பதற்கே காவற்றுறையினர் முயற்சித்தார்கள். அவர்கள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை குறித்து சிறிதளவும் சிந்திக்கவேயில்லை. அதேவேளை தமிழ் மக்கள் நலிவடைந்து விட்டார்கள். என்ன செய்தாலும் காவல் நிலையத்தில் சென்று நிற்பார்கள் அங்கு பார்த்துக்கொள்ளலாம். என அரசாங்கம் அல்லது சிங்கள மீனவர்கள் நினைக்ககூடாது. நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு வாடிகள் கொழுத்தப்பட்டதை தொடர்ந்து நான் உட்பட சிலர் அந்த இடத்தில் இருந்திருக்காவிட்டால் முல்லைத்தீவில் குந்தியிருக்கும் சிங்கள மீனவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்பதை யாருக்கும் கூறவேண்டியதிருக்காது. ஆனால் அதனை செய்திருந்தால் நாயாறு கிராமத்தை சேர்ந்த குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் தொடக்கம் எல்லோரும் நேற்று இரவே சிறையில் இருந்திருப்போம். சிறையில் இருப்பதற்கு மக்கள் அஞ்சவில்லை. ஆனாலும் இனமோதல் ஒன்று உருவாக கூடாது என்பதில் நாங்கள் திடமாக இருந்தோம்.

அதற்கு அர்த்தம் எமது மீனவர்களுக்கு ஒன்றும் செய்ய தெரியாது என்பதல்ல. எமது மீனவர்கள் சரியான ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்புக்குள் வாழ்ந்தவர்கள். இன்றும் இந்த சட்ட வரையறைக்குள் வாழ்கிறார்கள்.
அதனை எவரும் தவறாக அர்த்தப்படுத்த கூடாது என்றார்.

அரசாங்கம் நல்லிணக்கத்தை உண்மையில் விரும்பியிருந்தால் முல்லைத்தீவில் தமிழரின் வாடிகள் எரிக்கப்பட்டிருக்காது! ரவிகரன். Reviewed by Author on August 15, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.