அண்மைய செய்திகள்

recent
-

தேர்தலில் தமிழ்பேசும் மக்கள் வெளிப்படுத்திய ஒட்டுமொத்த தீர்மானம் பெரும் வெற்றியாகும்: யாழ் ஆயர் -


இலங்கை நாட்டின் புதிய ஜனாதிபதிக்கான தேர்தலின் முடிவுகள் தமிழ்பேசும் மக்களின் பெரும் கனவொன்று உடைந்துபோனது போன்ற ஓர் ஏமாற்ற உணர்வை உண்டுபண்ணுவதாகவே தெரிகிறது. நாம் ஒரு போதும் உடைந்து போகவோ சோர்ந்து போகவோ கூடாது என யாழ். ஆயர் மேதகு கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
கிறிஸ்து பிறப்பு விழாவிற்கு ஆயத்தம் செய்யும் காலமான திருவருகைக் காலம் பற்றி இறைமக்களுக்கு விடுத்துள்ள திருவருகைக்கால சுற்றுமடலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். ஆயர் மேதகு கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை 2019 ஆம் ஆண்டு கிறிஸ்து பிறப்பு விழாவிற்கு ஆயத்தம் செய்யும் காலமான திருவருகைக் காலம் பற்றி இறைமக்களுக்கு விடுத்துள்ள திருவருகைக்கால சுற்றுமடலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2019ஆம் ஆண்டு கொண்டாடப்படும் கிறிஸ்து பிறப்பு விழாவிற்கு ஆயத்தம் செய்யும் காலமான திருவருகைக்காலம் டிசெம்;பர் மாதம் 01ஆம் திகதி திருவருகைக்கால முதலாம் ஞாயிறு முதல் டிசெம்பர் மாதம் 22ஆம் திகதி திருவருகைக்கால நான்காம் ஞாயிறு வரை உள்ள 01 - 08 - 15 - 22 ஆகிய ஞாயிறு தினங்களை உள்ளடக்கும்.

இந்த வகையில் 2019ஆம் ஆண்டு கொண்டாடப்படும் கிறிஸ்து பிறப்பு விழாவிற்கு ஆயத்தம் செய்யும் காலமான திருவருகைக் காலத்திற்கு ஆயர் வெளியிட்டுள்ள சுற்றுமடல் இறை இரக்கத்தாலும் திரு ஆட்சிப் பீடத்தின் பணிப்பினாலும் யாழ் மறைமாவட்ட ஆயரான யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆகிய நாம் குருக்கள் துறவியர் பொதுநிலையினர் ஆகிய இறைமக்களுக்கு விடுக்கும் திருவருகைக்கால சுற்றுமடல் என ஆரம்பிக்கிறது.

பிறக்க இருக்கும் பாலக இயேசு எம்மை வழிநடத்துவாராக அன்னை மரியின் பரிந்துரை எமது அனைத்து பணிகளிலும் துணையிருப்பதாக என 2019ஆம் ஆண்டு கொண்டாடப்படும் கிறிஸ்து பிறப்பு விழாவிற்கு ஆயத்தம் செய்யும் காலமான திருவருகைக் காலத்திற்குரிய சுற்றுமடலை கிறிஸ்துவிலும் மரி அன்னையிலும் பக்தியுள்ள மேதகு கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை யாழ் ஆயர் என நிறைவு செய்கிறார்.
முழுமையாக வாழப்படும் மனிதமே தெய்வீகம்
இறை அருளுடன் மீண்டுமொரு திருவருகைக் காலத்தோடு புதியதொரு திருவழிபாட்டு ஆண்டை ஆரம்பிக்கின்றோம். ஆண்டவர் இயேசுவில் இறைவன் வெளிப்படுத்திய மீட்பின் உன்னதமான மறைபொருளை ஒவ்வொரு திருவழிபாட்டு ஆண்டிலும் முழுமையாக வாழ்கிறோம்.
நாம் ஆரம்பிக்கும் இப்புதிய திருவழிபாட்டு ஆண்டு வெறும் சடங்குகளுக்குள்ளும் அர்த்தமற்ற ஆடம்பரங்களுக்குள்ளும் சிக்குண்டு அதன் உயிர்ப்பொருளை இழந்து போகாமல், ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விற்கும் பொருள் தருகின்ற மீட்பின் செயல் முறையில் முழுமையாக நாம் பங்கெடுக்க எம்மைத் தூண்டுவதாக இருத்தல் வேண்டும்.

மாபெரும் மீட்புத் திட்டத்தின் தொடக்க நிகழ்வாகிய இயேசுக் கிறிஸ்துவின் பிறப்பிற்காக ஆண்டவராகிய இயேசுவே வாரும் என பெரும் எதிர்பார்ப்புக்களோடு காத்திருக்கும் வேளையில் முன்மதியுள்ள மனிதர்களாக எண்ணெய் நிறைந்த விளக்குகளோடு திருமண வீட்டுக்குப் பொருத்தமான ஆடைகளோடு எம்மைத் தயார் செய்ய இக்காலம் எம்மை அழைக்கின்றது. கோணலானவற்றை நேராக்கவும் கரடுமுரடானவற்றை சமதளமாக்கவும் காலத்தின் குரல் எம் செவியருகே நின்று சத்தமாகத் தட்டிச் சொல்லிக் கொண்டே இருக்கின்றது.

கடவுள் மனிதனானார் நம்மிடையே குடிகொண்டார் - ஆண்டவர் இயேசுவின் மனுவுரு ஏற்பின் நோக்கம் மனிதன் மனிதனாக முழுமையான வாழ்வை வாழ்வதானூடாகப் படைப்பின் நோக்கத்தை நிறைவு செய்யமுடியும் என்பதை வாழ்ந்து காட்டுவதற்கானதே. மானிடப் பிறப்பு என்பது மகத்துவமானது. படைப்பின் உச்சம் கடவுள் மனிதனானதும் மானிடர் வாழும் குழுமங்களில் வாழ்வை நிறைவாக வாழ்ந்து முடித்ததும் எல்லாம் நிறைவேறிற்று என்று சொல்லத்தக்க முழுமனித நிறைவையே சாத்தியமாக்கி நிற்கிறது.
இறைவார்த்தையின் ஞாயிறு பிரகடனம்.

வார்த்தை மனுவுருவாகி நம்மிடையே குடிகொண்டார் என்னும் ஆழமான தெய்வீக இரகசியத்தை வாழ்வில் மிக நெருக்கமாகப் புரிந்துகொள்ள வேண்டியது காலத்தின் தேவையாக எழுந்து நிற்கிறது. அதிருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வருகிற 2020ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் நான்காவது ஞாயிறு தினத்தை இறைவார்த்தையின் ஞாயிறாகப் பிரகடனப்படுத்தியுள்ளார்.
அறிவிப்பதைக் கேட்டால்தான் நம்பிக்கை உண்டாகும். கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி அறிவிக்கப்பட்டால் தான் அதைக் கேட்க வாய்புண்டு (உரோ.10:17). இறைமக்களுடைய நம்பிக்கைக்கும் இறைவார்த்தைக்குமிடையிலான மிக நெருக்கமான தொடர்பு காலம்பூராகவும் வாழ்வைப் பொருள் நிறைந்ததாக்கி வருகிறது.

ஆண்டவர் இயேசுவின் காலடிகளில் அமர்ந்திருந்து அவர் சொல்வதை முழுமையாகக் கேட்ட மரியாவின் மனது கொண்டு இறைவார்த்தையைத் திருப்பலியிலும் தனிப்பட்ட செபவழிபாடுகளிலும் கேட்பதும் தியானிப்பதும் மிக அவசியமானது என்பதை நாம் நன்கு உணர்ந்து இறைவார்த்தையின் வழியில் நம் வாழ்வை வாழ வேண்டும்.
எனவே அடுத்த ஆண்டில் கூடுதலாக எமது வழிபாடுகளிலும் தியானங்க ளிலும் இறைவார்த்தையை மையப்படுத்தி அனுசரிக்குமாறு வேண்டுகின்றோம்.

அழைத்தல் ஆண்டு
நடப்பாண்டை அழைத்தல் ஆண்டாகப் பிரகடனம் செய்திருந்தோம். இந்த ஆண்டில் விசேடமாக பொதுநிலையினரின் அழைத்தல் வாழ்வு குறித்து மேற்கொண்ட முயற்சிகளை இத்தோடு முடித்துக் கொள்ளுதல் என்பது பொருளல்ல.
திருச்சபை ஆட்சியாளர்களோடு கூட எங்கு உண்மையான பொதுநிலையினர் உடனிருந்து உழைக்கவில்லையோ அங்கு திருச்சபை உண்மையாகவே நிறுவப்படவுமில்லை முழுமையாக வாழப்படவுமில்லை மனிதர் நடுவே கிறிஸ்துவின் அடையாளமாகத் துலங்கவுமில்லை எனச் சொல்லலாம் எனத் திருச்சபையின் நற்செய்திப் பணி எனும் சங்க ஏடு குறிப்பிடுவதை உணர்ந்து தொடர்ந்தும் பொதுநிலையினரின் அழைத்தலை முழு உற்சாகத்தோடு ஊக்குவித்தல் அவசியமானது. இவ்வாண்டைப் பொதுநிலையினருக்குப் பயனுள்ளதாக ஆக்கிட சிறந்த திட்டங்களோடு உழைத்த அனைவருக்கும் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
துயருறுவோர் ஆண்டு - 2020
யாழ். மறைமாவட்டத்தில் 2020ஆம் ஆண்டைத் துயருறுவோர் ஆண்டாகப் பிரகடனம் செய்கின்றோம். இறைவனின் அளவு கடந்த இரக்கம் துயருறும் மனிதர் நடுவே இறங்கி அவர்களில் அது முழுமை அடைகிறது. தொலைந்துபோன ஆடுகளாக இருள் சூழ்ந்த பள்ளத்தாக்குகள் நடுவே - உயிர் எடுக்கும் முட்கள் நடுவே - மரணத்தின் பயங்கர விழிம்புகளில் வலிகளோடு துடித்துக் கொண்டிருக்கும் மனிதர்களை நோக்கிக் கடவுளின் இரக்கத்தின் கால்கள் நடந்து கொண்டே இருக்கின்றன.

எனக்கு அடுத்திருப்பவனில் துன்புறும் இறைவனைக் காணுதல் என்பது காலத்தின் தேவையாக முளைத்து நிற்கின்றது. பாராமுகமாக அடுத்தவனைக் கடந்து போதல் எனும் கலாசாரம் எம்மைச் சூழ வலை பின்னிவருகிறது. நான் - எனது என்ற சின்ன வட்டங்களுக்குள் சிக்கிக் கொள்கிற சமூகப் பிராணிகளாக நவீன வாழ்வியல் எம்மை உந்தித் தள்ளிவருகிறது. இச்சின்னஞ்சிறிய சகோதர சகோதரிகளுள் ஒருவருக்கு எதையெல்லாம் செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள் (மத்தேயு 25:40) என்ற கடவுளின் குரல் நல்ல சமாரியன்களாக வாழ்ந்திட எம்மைக் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

எம் மீட்பிற்கான திறவுகோல் கசக்கி எறிந்த காகிதத்தைப்போலக் கணக்கிலெடுக்காது - பணக்காரன் வீட்டு வாசலில் நாய்கள் நக்கிய புண்களோடு கிடந்த இலாசரைப்போல எம்முன் இருக்க நாம் அதைப் பாராமுகமாகக் கடந்து போனால் எம் மீட்பைத் தொலைத்து விடுவோம்.
வாழ்வை நம்பிக்கையோடு அடுத்த தளத்தை நோக்கி நகர்த்திச் செல்வோம்
ஒரு பெரும் போர் முடிந்த நிலையில்; எம் இருப்பை மீண்டும் தக்க வைத்துக்கொள்ளப்பாடுபடும் ஓர் இனத்தின் எச்சங்களாக நின்று பயணித்துக் கொண்டிருக்கின்றோம். எம் காயங்களும் வலிகளும் நிஜமானவை. ஆனால் எம் வாழ்வை நம்பிக்கையோடு அடுத்த தளத்தை நோக்கி நகர்த்திச் செல்வதற்கு முயற்சிப்பது மிக அவசியமானது. உன் சகோதரன் ஆபேல் எங்கே? (தொடக்க நூல் 4:9) என இறைவன் கேட்கிறபோது எம் சகோதரர்களின் காவலாளிகள் நாம் என்பதையும் பொறுப்புக் கூறலுக்குரியவர்கள் நாம் என்பதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும்.

உடல் ரீதியாக மட்டுமன்றி உளத்தாக்கங்களால் தனிமைப்படுத்தல்களால்; சமுதாயப் புறக்கணிப்புக்களால் ஆடம்பர ஆசைகளுக்கு அடிமைப்பட்டு நிம்மதி இன்மைகளால் தொடரும் வன்முறைப் போதைக் கலாசாரங்களின் அதீத வளர்ச்சியினால், வறுமையினால் எனப் பலநிலைகளில் துயருறும் எம் சக மனிதர்களோடு உடனிருக்கவும் நாளைக்கான புதிய நம்பிக்கையை ஊட்டவும் இக்காலம் எம்மை அழைக்கின்றது.
எல்லோருமே ஏதோ ஒரு வகையில் துயருறுபவர்களாக இருந்தாலும் வயிற்றில் தாங்கிய கருவோடு எலிசபெத்து வீடு வரை நடந்து சென்ற அன்னை மரியாவின் மனதோடு காயப்பட்ட மருத்துவனாக தன்னை வெளிப்படுத்தும் இயேசுவின் உண்மைச் சீடர்களாக துயருறுவோரின் நம்பிக்கையாக விளங்கிட இவ்வாண்டு எம்மை அழைத்து நிற்கின்றது. எம் பங்குகளில் பல்வேறு பக்திச் சபைகளூடாக நல்ல பல திட்டங்களைத் தீட்டித் துயறுருவோரின் நல்வாழ்வுக்காக உழைக்க உங்களைப் பணிக்கின்றோம்.

நாம் ஒரு போதும் உடைந்து போகவோ சோர்ந்து போகவோ கூடாது
இலங்கை நாட்டின் புதிய ஜனாதிபதிக்கான தேர்தலின் முடிவுகள் தமிழ்பேசும் மக்களின் பெரும் கனவொன்று உடைந்துபோனது போன்ற ஓர் ஏமாற்ற உணர்வை உண்டுபண்ணுவதாகவே தெரிகிறது. நாம் ஒரு போதும் உடைந்து போகவோ சோர்ந்து போகவோ கூடாது. கடவுள் கோணலான கோடுகள் நடுவே அழகான சித்திரங்களை வரைய வல்லவர் என நம்புவோம். கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை (லூக்காஸ் 1:37) என்பது தான் காலங்களையெல்லாம் தாண்டிய நம்பிக்கையின் செய்தியாக எமக்குத் தரப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

இந்தத் தேர்தலில் தமிழ்பேசும் மக்கள் வெளிப்படுத்திய ஒட்டுமொத்தத் தீர்மானம் ஒரு பெரும் வெற்றியாகும். இந்த ஒற்றுமையின் பலம் ஒரு தேசிய இனமாக ஜனநாயகத்தின் தளத்தில் நாம் நிலைகொள்ள மிகத் தேவையானதும் ஆகும். இறைவன் நல்லவர் நன்மையையே எம் நாட்டுக்குச் செய்வார் என்பதே எமது நம்பிக்கை ஆகவேண்டும்.
அடுத்த தேர்தலுக்கான களங்கள்
அடுத்த தேர்தலுக்கான களங்கள் வரும் நிலையில் நம்பிக்கையோடு தொடர்ந்தும் எமது சரியான தெரிவுகளை மேற்கொண்டு அமைதியான வளர்ச்சி நோக்கி மேலெழுகின்ற தேசமாக எம் நாட்டை எம் வாழ்வைக் கட்டியெழுப்ப உழைப்பதும் செபிப்பதும் எமது கடமையாகும்.
இறை இயேசுவில் ஆழமான நம்பிக்கை கொண்ட இறைமக்களாக மணல் மீது கட்டப்பட்ட வீடுகளைப் போல் அல்லாது மலைகளின் மீது கட்டப்பட்ட வீடுகளாக எமது மனங்களை விசுவாசத்தில் ஆழப்படுத்தி பிறர் அன்பில் நிலைத்திருந்து துயருறுவோருக்கு ஆறுதல் கொடுப்பவர்களாக எமது வாழ்க்கைப் பாதையை வளப்படுத்துவோம்.
பிறக்க இருக்கும் பாலன் இயேசு எம்மை வழிநடத்துவாராக. அன்னை மரியின் பரிந்துரை எமது அனைத்துப் பணிகளிலும் துணையிருப்பதாக. என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தலில் தமிழ்பேசும் மக்கள் வெளிப்படுத்திய ஒட்டுமொத்த தீர்மானம் பெரும் வெற்றியாகும்: யாழ் ஆயர் - Reviewed by Author on December 09, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.