மருத்துவத் துறைக்கு தெரிவான மாணவன் நீரில் மூழ்கி பரிதாபமாக பலி
காரைதீவைச் சேர்ந்த மாணவன் எஸ்.அக்சயன் (வயது-20) இன்று (14) காலை லாகுகலை பிரதேசத்திற்குட்பட்ட நீலகிரி ஆற்றில் நீராடுகையில் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
சிவகரன் ஜீவரஞ்சனி தம்பதியினரின் ஒரேயொரு பிள்ளை அக்சயன் ஆவார். காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் இம்முறை மருத்துவத் துறைக்கு தெரிவான இரண்டு மாணவர்களுள் அக்சயன் ஒருவராவார்.
இவர் அண்மையில் வெளியான G.C.E A/L 2023 (2024) பரீட்சையில் சித்திபெற்று மாவட்டத்தில் 23 வது இடத்தில் மருத்துவ துறைக்கு தெரிவாகியிருந்தார்.
அவர் தனது குடும்பத்தோடு மூன்று நாட்களுக்கு முன்பு உகந்த மலை முருகன் ஆலயத்துக்கு சென்று அங்கு தரித்துவிட்டு இன்று (14) காலை திரும்பி வரும்பொழுது பொத்துவில் மற்றும் லாகுகலைக்கிடையிலுள்ள நீலகிரி ஆற்றிலே நீராடிய போது மூழ்கி உயிரிழந்துள்ளார்.
அவரது பூதவுடல் மேலதிக விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைக்காக லாகுகலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மருத்துவதுறைக்கு தெரிவான எஸ்.அக்சயன் நீரில் மூழ்கி உயிரிழந்த செய்தி காட்டுதீ போல் பரவிய நிலையில், முழுக் காரைதீவு பிரதேசமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
அம்மாணவனின் சடலம் லாகுகலை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
-
Reviewed by Author
on
June 15, 2024
Rating:


No comments:
Post a Comment