போரினால் பாதிக்கப்பட்ட மன்னார் ஈச்சலவக்கை கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் சோகக் கதை

மன்னார் பள்ளமடு சந்தியில் இருந்து பெரியமடு செல்லும் வீதியில் சுமார் பத்து கிலோ மீற்றர் தொலைவில் இந்தக் கிராமம் இருக்கின்றது. காடடர்ந்து கைவிடப்பட்ட நிலையில் உள்ள இந்தக் கிராமத்தில் மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் தொழில் வாய்ப்பின்றி கஸ்டமடைந்திருக்கிறார்கள். அந்தப் பகுதியில் கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்படாததன் காரணமாக அங்குள்ளவர்கள் தமது காணிகளில் தோட்டச் செய்கையில் ஈடுபட முடியாத நிலையில் இருக்கிறார்கள் என அந்தப் பகுதிக்குச் சென்று அங்குள்ள நிலைமைகளை நேரடியாகப் பார்த்துவிட்டுத் திரும்பியுள்ள வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
இந்தக் கிராமத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் இருக்கின்றார்கள். ஆனாலும் முருகவேள் குடும்பத்தினர் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இடப்பெயர்வின்போது இந்தக் குடும்பம் புதுமாத்தளனில் தஞ்சமடைந்திருந்தபோது, முருகவேள் ஷெல் தாக்குதலில் இறந்து போனார். அவரது ஆறு பிள்ளைகளில் ஒருவராகிய நிசாந்தன் இரு கைகளையும் கண்களையும் இழந்துள்ளார். இப்போது அவர் அவரது தாயாரின் பராமரிப்பில் வாழ்ந்து வருகின்றார்.
இந்தக் குடும்பத்தில் மற்றுமொரு மகனாகிய முருகவேள் ரசூல் 34 வயது. இவருக்கு ஒரு கால் இல்லை. ஷெல் தாக்குதல் காரணமாக ஒரு மகள் வலது காலிலும் இடது கையிலும் படு காயமடைந்துள்ளார். ஊன்று கோலின்றி அவரால் நடக்க முடியாது.
இந்தக் குடும்பத்தினர் தமது சோகக்கதையை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் கூறி, தமக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
இந்தக் குடும்பத்தில் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பவர் முருகவேற் நிசாந்தன் என்ற 19 இளைஞன். அவர் தனது நிலைமை பற்றி கூறியதாவது.
“எனது பெயர் முருகவேள் நிசாந்தன். வயது 19. முன்னார் பெரியமடு ஈச்சலவாக்கைதான் எனது சொந்தக் கிராமம். அங்கிருந்து இடம்பெயர்ந்து சென்றபோது, புதுமாத்தளனில் 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஷெல்லடியில் மோசம் போய்விட்டார். குடும்பத்தில் 6 பேர் அண்ணாவுக்கு கால் இல்லை. இரண்டாவது அக்கா மணம் முடித்துவிட்டார். அவருக்கும் கால் ஏலாது. அடுத்தது அக்கா. அதற்கு அடுத்தது நான். அடுத்த இரண்டுபேரும் தம்பிமார். ஒரு தம்பியும் ஷெல்லடியில காயமடைந்தார்.
“இடம் பெயர்ந்து சென்று புதுமாத்தளனில் நாங்கள் வீட்டிற்குள் இருந்தபோது சுற்றிலும் ஷெல்கள் வந்து விழுந்து கொண்டிருந்தன. திடீரென்று ஷெல் ஒன்று, எங்கள் வீட்டில் வந்து வீழ்ந்தது. அதில் அப்பா மோசம் போய்விட்டார். எனக்கு காயம் பட்டது. நான் மயங்கிவிட்டேன். வைத்தியாசலையில் எனக்கு நினைவு வந்தபோது எனக்கு இரண்டு கைகளும் இல்லை. ஒரு கண் இல்லை. மற்ற கண்ணும் பார்வை இல்லை. காயமடைந்து ஒன்றரை மாதம் வைத்தியசாலையில் இருந்து சுகமாகியபின்னர், வீட்டுக்குச் சென்றேன். ஒரே ஷெல்லடி இடத்திற்கு இடம் இடம் பெபயர்ந்து சென்றுகொண்டிருந்தோம் கண்தெரியாதபடியால் எங்கே இருந்தோம், என்ன செய்தோம் என்பது தெரியாது.
“போன போன இடங்களில் எல்லாம் கடும் சண்டை. கணக்கு வழக்கு இல்லாமல் ரவுண்ஸ் வரும் ஒரே ஷெல்லடி. கூடுதலான நேரம் பங்கருக்குள்ளே தான் இருப்பது வழக்கம். ஆட்களோடு ஆட்களாக நாங்களும் இடம் இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்தோம். சாப்பாட்டுக்குக் கூட வழியில்லை. இந்த நிலையில்தான் முள்ளிவாய்க்காலில் இருந்து இராணுவ கட்டுப்பாட்டினுள் வந்தோம். எங்களை மனிக்பாம் முகாம் வலயம் நாலில் கொண்டு போய் விட்டார்கள். அங்கிருந்து பின்னர், எங்களை மன்னார் ஜீவநகர் முhகமிற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கிருந்து இந்த வருடம் மார்ச்மாதம் 4 ஆம் திகதி ஈச்சலவாக்கை எங்களுடைய காணிக்குக் கொண்டு வந்து மிள்குடியேற்றத்தில் விட்டுள்ளார்கள்.
“என்னை முழுமையாக அம்மாதான் பார்க்கிறா. அப்பாவும் இல்லை. நிவாரணத்தை நம்பிதான் வாழ்க்கை ஓடுகிறது. தொழில் எதுவும் கிடையாது. கஸ்டத்திற்கு மத்தியில்தான் நாங்கள் வாழ்கிறோம். எனக்கு கை இரண்டும் இல்லை. கண்பார்வையும் இல்லை. எதிர்காலத்தில் என்ன செய்வது என்பதைப் பற்றி சிந்திக்கக் கூட முடியாத நிலையில் நான் இருக்கிறேன். ஒரு கண்ணை எடுத்து விட்டார்கள். இருக்கிற கண்ணில் வெளிச்சம் மட்டும் தெரியும். உருவங்கள் எதுவுமே தெரியாது. ஒப்பரேஷன் செய்து, இந்தக் கண்ணை சுகப்படுத்தலாம் என வைத்தியசாலையில் தெரிவித்தார்கள். பார்வை கிடைத்தால் ஓரளவு எனக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். அம்மா என்னை நன்றாகக் கவனித்துக் கொள்கிறா. 54 வயதாகியிருக்கிற அம்மாவை நான் பார்;த்து பராமரிக்க வேண்டிய நேரத்தில அவ எல்லா விதத்திலும் என்னைப் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. இதை நினைக்கும் போது மனதுக்கு சரியான கஷ்டமாக இருக்கிறது. இந்த நிலையில் நாங்கள் என்ன செய்யப்போகிறோம். ஏதிர்காலத்தை எப்படி எதிர்கொள்ளப் போகின்றோம் என்பதை நினைக்கவே பெரும் கஷ்டமாக இருக்கின்றது.”
நிசாந்தனின் சகோதரி தனது நிலைமைபற்றி தெரிவித்ததாவது:
“எனது பெயர் ரொபர்ட் கிருஷ்ணம்மா. 35 வயது. எனக்கு நான்கு பிள்ளைகள். நிசாந்தன் எனது கூடப்பிறந்த தம்பி. தம்பிக்கு முதல் ஷெல் பட்டது. எனக்கு பிறகு பட்டது. எனக்கும் புதுமாத்தனிலதான் 2009 ஆம் ஆண்டு ஏப்பரல் 4 ஆம் திகதி ஷெல் பட்டு காயமடைந்தேன். திரிபோஷா மா நிவாரணம் கொடுத்தார்கள். நிறைய பேர் வரிசையில நின்று கொண்டிருந்தார்கள். அப்போது நான் திரிபோஷா மாவை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தபோது, நிவாரணம் வங்குவதற்கு நின்றவர்கள் மீது ஷெல் விழுந்ததில் கிட்டத்தட்ட 300 பேர் செத்துப்போனார்கள். இது நடந்து பத்து நிமிடத்திற்குப் பின்னர் எங்களது வீட்டைச் சுற்றி ஷெல் வந்து விழுந்தது. அதில ஒரு ஷெல்லிலதான் எனக்கு காயம் பட்டது. எனது மாமிக்கும் மச்சாளுக்கும் காயம்பட்டது. எனது கணவருக்கு ஒரு கண் இல்லை. இரண்டு கைவிரல்களும் இல்லை. எனது கணவருடைய சித்தியின் பிள்ளைகள் இரண்டுபேர் இறந்து போனார்கள். பக்கத்து வீட்டில் இருந்த 9 பேர் எல்லாருமே செத்துப் போனார்கள். ஒருவருமே மிஞ்சவில்லை. இந்தச் சம்பவத்தில்தான் எனக்கும் காயம் ஏற்பட்டது.
“எனக்கு வலது காலிலும் இடது கையிலும் காயம். தொடையிலும் காயம் ஏற்பட்டது. அது பெரிய காயமில்லை. இடது கையில் இரண்டு விலல்கள் இயங்காது, கால் நடக்க முடியாது. சரியான கஸ்டமாக இருக்கிறது. ஊன்றுகோல் இல்லாமல் என்னால் நடக்க ஏலாது. இப்போ நான் எனது அம்மாவுடனும் தம்பியுடனும் தான் இருக்கிறேன்.
“தம்பியை அம்மாதான் முழுமையாகப் பார்த்துக்கொள்வார். அம்மா எங்கேயும் போனால் மட்டும் நாங்கள் அவரைப்பார்ப்போம். அவருக்கு கண் மட்டும் தெரிந்தால் போதும். அவரது நிலையால் எங்கள் எல்லேர்ருக்கும் சரியான வேதனையாக இருக்கிறது. எப்படி இந்தப் பெடியன்மாரோடு சந்தோசமாகத் திரிந்தார்;. இப்போது அவர் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றார். தமிழருக்கு இனிமேல் இப்படியொரு நிலைமை ஏற்படக்கூடாது. எத்தனையோ பேர் கைகால்களை இழந்து ஏலாத நிலையில் இருக்கிறார்கள். ஒருவரிடமிருந்தும் எந்த உதவியும் கிடையாது. நிவாரணம் மட்டும்தான் தருகின்றார்கள். மாதத்திற்கு ஒருதடவை அரிசி, பருப்பு, மாவையும் மட்டும் தருகின்றார்கள். அதுமட்டும் போதுமா? அதிலையும் தனி நபருக்கு எந்த நிவாரணமும் கிடையாது. தனிநபர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒன்றும் கிடையாது என்கிறார்கள். அப்படி நிலையிலதான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
“இங்கு ஒரு வேலை கிடையாது. எங்கேயும் போக ஏலாது. மைன்ஸ் இருக்கு எனக்கூறி, எங்கேயும் போகவிடுகிறார்கள் இல்லை. குடிக்கத் தண்ணீர் கிடையாது. தண்ணீர் கொண்டு வந்து தருகிறார்களில்லை. தண்ணீர் பிரச்சினைதான் முக்கிய பிரச்சினையாக இருக்கின்றது. ஆஸ்பத்திரி வசதி கிடையாது. பத்து கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள பள்ளமடுவுக்குத்தான் போகவேண்டும்.
“எங்களுடைய கஸ்டங்களை யாரிடம் செல்வது? யார் எங்களுக்கு உதவப் போகின்றார்கள்.? எங்களுக்கு எதிர்காலம் என்பதே இல்லை என்றுதான் நாங்கள் இருக்கிறோம்.”
இப்படி எத்தனையோ பேர் இந்தப் போரினால் பாதிக்கப்பட்டு இன்று ஓர் அவல வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களது கதைகள் வெளிச்சத்திற்கு வரவில்லை. வாழக்கையில் நடைப்பிணமாக, எதிர்காலம் பற்றிய தாங்க முயாத சோகத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
இவர்களது இந்த அவல நிலையில் இருந்து மீட்டெடுத்து வாழ்க்கையில் நம்பிக்கையோடு வாழச் செய்ய வேண்டிய பொறுப்பு தமிழராகவுள்ள அனைவருக்கும் இருக்கின்றது.
முருகவேள் நிசாந்தனின் கண் வைத்திய செலவிற்காகப் பெரும் தொகைப் பணம் தேவையாக இருக்கின்றது. அவரை எப்படியும் இந்தியாவுக்கு அனுப்பி அவரது ஒரு கண்ணின் பார்வையையாவது பெற்றுக் கொடுக்க வேண்டும். இதற்கு தாராள மனம் கொண்ட எமது உறவுகள் குறிப்பாக புலம் பெயர்ந்த உறவுகள் உதவ முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவரது தொலைபேசி இலக்கம்: 0777760795





போரினால் பாதிக்கப்பட்ட மன்னார் ஈச்சலவக்கை கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் சோகக் கதை
Reviewed by NEWMANNAR
on
November 18, 2009
Rating:

No comments:
Post a Comment