மன்னார் மாவட்ட சித்த ஆயுர்வேத பாதுகாப்புச் சபையின் 11ஆவது வருடாந்த பொதுக் கூட்டம்

"மக்களோடு மக்களாக இருந்து சேவையாற்றுபவர்கள்தான் சித்த ஆயுர்வேத வைத்தியர்கள். எனது சேவைக் காலத்தில் மன்னார் மாவட்ட ஆயுர்வேத வைத்தியர்களைப் பற்றி எந்தவித முறைப்பாடுகளும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என்பதைக் கூறிக்கொள்வதில் பெருமை அடைகின்றேன்" எனத் தெரிவித்தார் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.நீக்கிலாப்பிள்ளை.
மன்னார் மாவட்ட சித்த ஆயுர்வேத பாதுகாப்புச் சபையின் 11ஆவது வருடாந்த பெதுக் கூட்டம் அதன் தலைவர் வைத்திய கலாநிதி ஏ.அரசக்கோன் தலைமையில் மன்னார் மாவட்ட செயலக் கேட்போர் கூடத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மன்னார் அரசாங்க அதிபர் ஏ.நீக்கிலாப்பிள்ளை தொடர்ந்து பேசுகையில்,
"இந்த மாவட்டத்தில் சேவை செய்வது கடமை மட்டுமல்ல, மாறாக பணியும் கூட. எமது பணியின் மூலம் பிணியை தீர்ப்பதே கல்வியின் நோக்கமாகும். நாம்; எந்தக் கல்வியைப் பெற்றாலும் அது ஒவ்வொருவரின் பிரச்சினையைத் தீர்க்க உதவ வேண்டும்.
கடந்த காலங்களில் எமது மாவட்டம் மிகவும் பாதிப்படைந்திருந்தது. ஆனால் அரசு பல திட்டங்கள் மூலம், இங்கு அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்கின்றது. கல்வியின் முக்கிய நோக்கம் மக்களின் குறைகளை நீக்குவதாகும். அது பொருளாதாரமாக இருக்கலாம் அல்லது மருத்துவமாகவும் இருக்கலாம்.
மன்னாரில் டெங்கு நோய் பரவும் அபாயம் இருப்பதாக சுகாதார வட்டாரம் எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் வைத்தியசாலை சுற்றாடலைப் பார்த்தால் அங்குதான் டெங்கு பரவும் அபாயம் இருப்பதாக பலரும் முறைப்பாடு தெரிவிக்கின்றனர்.
நாம் எந்த பணியில் இருந்தாலும் அர்பணிப்புடன் சேவையாற்ற வேண்டும். இதை எமது மாவட்ட ஆயுர்வேத வைத்தியர்கள் கடைப்பிடிக்கிறார்கள்.
ஆயுர்வேத வைத்தியர்கள் நேர்மையுடன் செயலாற்றுவதனால்தான் இவர்களுக்கெதிராக எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கப்பெறவில்லை. மன்னார் மாவட்டத்தில் ஆயுர்வேத மருத்துவத்துறையின் முன்னேற்றம் எப்படி இருக்கின்றது? இதை எவ்வாறு முன்னேற்றலாம் என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.
பிரதேச செயலாளர் உரை
மன்னார் பிரதேச செயலாளர் திருமதி. ஸ்ரணி டீமெல் பேசுகையில்,
மன்னார் பகுதியில் இருதய சிகிச்சைக்குட்படுவோரின் தொகை காலத்துக்கு காலம் அதிகரித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காக எமது மக்கள் பெருந்தொகை பணத்தைச் செலவழித்து வருகின்றனர். ஆகவே இதிலிருந்து இவர்கள் விடுபட ஆயுர்வேத வைத்தியர்கள் கைகொடுத்து உதவ வேண்டும்.
எமக்கு வறுமையிலும் வாழத்தெரியும் வசதியிலும் வாழத்தெரியும். நாங்கள் வறுமையில்தான் வாழ்கின்றோம் என்பதை எடுத்துக்காட்டுபவர்கள்தான் மன்னார் மாவட்ட சித்த ஆயுர்வேத வைத்தியர்கள்.
இன்று பலர் பலவிதமான நோய்களுக்குள்ளாகி வருவதை நாம் காண்கின்றோம். இவற்றிலிருந்து இவர்கள் நலம் பெறவேண்டுமானால் சித்த மற்றும் ஆங்கில வைத்தியர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதவசியம்" என்றார்.
நானாட்டான் பிரதேச செயலாளர் சந்திரஜயாவும் அங்கு உரையாற்றினார்.
மன்னார் மாவட்ட சித்த ஆயுர்வேத பாதுகாப்புச் சபையின் 11ஆவது வருடாந்த பொதுக் கூட்டம்
Reviewed by NEWMANNAR
on
December 26, 2009
Rating:

No comments:
Post a Comment