பட்டதாரிப் பயிலுனர் நியமனத்தில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஊழல்; அவர் அனுப்பிய பட்டியலில் இருந்த 50 பேருக்கு முல்லையில் திடீர் நேர்முகம்-உதயன்
பட்டதாரிப் பயிலுநர் நியமனத்தில் அரசியல் முறைகேடு, ஊழல் இடம்பெற்று வருவது அம்பலத்துக்கு வந்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் நிர்ப்பந்தம் காரணமாக நேற்றைய தினம் 50 பட்டதாரிகளுக்குத் தனியான நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டப் பட்டதாரிகளுக்கு நாளை திங்கட் கிழமையும் நாளை மறுதினம் செவ்வாய்க் கிழமையும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட இருந்த நிலையில் நேற்றைய தினம் 50 பட்டதாரிகளுக்கு இந்த ரகசிய நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டுள்ளது.
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் முல்லைத்தீவு அரச அதிபருக்கு வழங்கிய அழுத்தத்தின் பேரிலேயே இந்த நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது என்று உதயனுக்குத் தெரியவந்தது.
தான் அனுப்பும் பட்டியலில் உள்ளவர்களுக்கு உடனடியாக நேர்முகத் தேர்வு வைக்கும்படி முல்லை மாவட்ட அரச அதிபர் ந.வேதநாயகன் மிரட்டப்பட்டார் என்றும் உதயன் அறிந்தது.
நேற்றைய நேர்முகத் தேர்வுக்கு 50 பேர் அழைக்கப்பட்டிருந்த போதும் 40 பேர் வரையிலனோர் கலந்துகொண்டிருந்தனர். ஏனையோர் திடீர் அழைப்புக் காரணமாகப் பங்கேற்க முடியாமல் போய்விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
நாடளாவிய ரீதியில் இலங்கை அரச சேவைக்கு ஆள் சேர்க்கும் முகமாக வேலையற்ற பட்டதாரிகளுக்கு பட்டதாரிப் பயிலுநர் நியமனம் வழங்கபடுவதற்கான நேர்முகத் தேர்வு அந்தந்த மாவட்டச் செயலகங்களில் நடைபெற்று வருகின்றன.
இதன் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்ட பட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்வு நாளை திங்கட்கிழமையும், நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமையும் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெறவுள்ளதாக அரச அதிபர் ஊடாக சகல பட்டதாரிகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்றைய தினம் ஒரு தொகுதி பட்டதாரிகளுக்கு இரகசியமாக நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டதை அடுத்து ஏனைய பட்டதாரிகள் கதிகலங்கிப் போயினர். என்ன நடக்கிறது என்று அறிய அங்கும் இங்குமாக அலைந்து அந்தரப்பட்டனர்.
அமைச்சர் றிஷாத் பதியுதீனின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் எனக் கூறிக்கொள்ளும் விஜிதன் என்பவர் சில பட்டதாரிகளுக்கு தொலைபேசி மூலம் நேற்றுமுன்தினம் தொடர்பு கொண்டு "விசேடமாக உங்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளது'' என அறிவித்து அதன்படி நேற்றைய நேர்முகத் தேர்வுக்குச் சமுகமளிக்குமாறு கூறியிருந்தார்.
இந்தப் பட்டியலில் அடங்கியிருந்தவர்கள் மத சார்பு ரீதியில் தெரிவு செய்யப்பட்டிருந்தார்களா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. எனினும் ஏனைய பட்டதாரிகள் மத்தியில் அவ்வாறான பலத்த சந்தேகம் நிலவியது.
முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், ஒட்டுசுட்டான் பிரதேச செயலர், ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோர் நேர்முகத் தேர்வை நடத்தினர்.
அமைச்சர் றிஷாத் பதியுதீனால் வழங்கப்பட்ட 50 பேர் கொண்ட பெயர்ப் பட்டியலுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டுள்ளதாகவும், பட்டதாரிகளிடமிருந்து ஆவணங்களின் பிரதிகளை மட்டும் பெற்றுவிட்டு அவர்களைத் திருப்பி அனுப்பியதாகவும் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்ட பட்டதாரி ஒருவர் தெரிவித்தார்.
இதே போன்றே யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலும் பட்டதாரி பயிலுநர் நியமனங்களில் அரசியல் புகுந்து விளையாடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பட்டதாரி நியமனம் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு ஒரு தொகுதியினரின் பெயர்கள் அடங்கிய பட்டியல் ஒன்று யாழ்ப்பாணம் செயலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் உதயனுக்கு அறிய வந்தது.
பட்டதாரிப் பயிலுனர் நியமனத்தில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஊழல்; அவர் அனுப்பிய பட்டியலில் இருந்த 50 பேருக்கு முல்லையில் திடீர் நேர்முகம்-உதயன்
Reviewed by NEWMANNAR
on
June 11, 2012
Rating:

No comments:
Post a Comment