மன்னாரில் 'வானவில் இசைக்குழு' அங்குரார்ப்பணம்
மன்னார் தமிழ்ச் சங்கத் தலைவரும் மன்னார் 'கலையருவி' அமைப்பின் இயக்குனருமான தமிழ் நேசன் அடிகளாரை போசகராகக் கொண்டு இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கலைக்குழுவின் தலைவராக திரு. ஜே. ஆர். மயூறன் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இம்மாதம் 10ஆம் (10.06.2012) திகதி மன்னாரில் உள்ள 'கலையருவி' எனப்படும் மன்னார் மறைமாவட்ட சமூகத்தொடர்பு அருட்பணி மையத்தில் காலை 10.00 மணிக்கு இந்த வானவில் இசைக்குழுவின் அங்குரார்ப்பணக் கூட்டம் இடம்பெற்றது. எதிர்காலத்தில் பலவித இசை நிகழ்ச்சிகளை நடத்த இந்தக் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது.
இசை என்பது மனிதர் அனைவருக்குமான ஓர் பொது மொழி
தமிழ் நேசன் அடிகளார்
உலகத்திலே 6000ற்கும் மேற்பட்ட மொழிகள் உண்டு. ஆனால் எல்லாருக்கும் எல்லா மொழிகளும் தெரிய வாய்ப்பு இல்லை. ஆனால் எல்லோரும் புரிந்துகொள்கின்ற ஒரு பொதுவான மொழி உண்டு. இந்த உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் புரிந்துகொள்ளக்கூடிய பொதுவான ஒரு மொழி உண்டு என்றால் அதுதான் இசை என்னும் மொழி. பாஷை தெரியாதவனும் புரிந்துகொள்கின்ற ஒரே மொழி இசைதான். ஆதனால்தான் இசையை உலகப் பொது மொழி என்கின்றார்கள். இவ்வாறு மன்னார் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும், மன்னா பத்திரிகை ஆசிரியருமான அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் குறிப்பிட்டார்.
'வானவில் இசைக்குழு' அங்குரார்ப்பணக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அடிகளார் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்து உரை நிகழ்த்துகையில் கூறியதாவது,
'செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்று மகாகவி பாரதி கூறிய வார்த்தைகளை மேலோட்டமாக பார்த்தால் முரண்பாடகவே தெரியும். அது எப்படி செந்தமிழ் நாடு என்று சொல்லும்போது தேன் வந்து காதில் பாயமுடியும்? தேன் நாவில் பாய்ந்தால்தானே அதன் சுவையை அனுபவிக்க முடியும்? என்று நாம் கேட்கலாம். இனிய வார்த்தை நமது காதுகளுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்துகின்றது. ஆம் இசைகூட நம் காதுகளில் தேன் பாய்கின்ற அனுபவத்தை தருகின்றது. 'இசைகேட்டாடல் புவி அசைந்தாடும் இறைவன் அருளாலே!' என்றும் 'இசையால் வசமாகா இதயமுண்டோ?' என்றும் கவிஞர் பெருமுக்கள் பாடியுள்ள வார்த்தைகள் இசையின் ஆற்றலை, சக்தியை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
வானவில் இசைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெறவேண்டும். இந்த மண்ணில் இலைமறைகாய்களாக இருக்கும் கலைஞர்களின் ஆற்றல் திறமைகள் வெளிக்கொண்டுவரப்படவேண்டும்.
எனக்கு வாய்பு இல்லை, சந்தர்ப்பம் தருகின்றார்கள் இல்லை என்று சொல்லிக்கொண்டிருக்காமல் நாம்தான் வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். 'காற்றும் கடலலையும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை' என்பதை நாம் உணரவேண்டும். அதுபோல் நாமும் வாய்ப்புக்களை உருவாக்கி தொடர்ந்து பயணிப்போம்.
படங்களுக்கான விளக்கம்
வானவில் இசைக்குழுவின் தலைவர் திரு. மயூறன், இசைக்குழுவின் போசகர் தமிழ் நேசன் அடிகளார், அவுஸ்ரேலியா டயஸ்போறா அமைப்பைச் சேர்ந்த திரு. ஜெரோமி, ஊடகவியலாளர் மக்கள் காதர், கலைஞர் திரு. ஜேம்ஸ் ஆகியோர் உரை நிகழ்த்துவதையும், அங்குரார்ப்பணக் கூட்டத்திற்கு வந்திருந்த கலைகுஞர்களில் ஒருசிலரையும், மன்னாரின் பாடகிகளுள் ஒருவராகிய பள்ளிமுனையைச் சேர்ந்த அனோஜா அவர்கள் பாடல் பாடுவதையும் படங்களில் காணலாம்.
மன்னாரில் 'வானவில் இசைக்குழு' அங்குரார்ப்பணம்
Reviewed by NEWMANNAR
on
June 18, 2012
Rating:
No comments:
Post a Comment