அண்மைய செய்திகள்

recent
-

உரிமைகளுக்காக ஜனநாயக வழியில் போராட முடியாத ஓர் நிலையையே அரசாங்கம் தோற்றுவித்திருக்கின்றது. -எஸ்.வினோ நோகராதலிங்கம் எம்.பி-

மக்கள் தமது மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக ஜனநாயக வழியில் கூட போராட முடியாத ஓர் நிலையையே இந்த அரசாங்கம் தோற்றுவித்திருக்கின்றது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்திருக்கின்றார். அதேவேளை நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை கண்டித்து முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை குழப்பும் முகமாக கழிவுப்பொருட்களை வீசியிருக்கின்றமையானது மனித நாகரிகமற்ற ஓர் செயல் எனவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.


 முல்லைத்தீவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமைதி வழிப்போராட்டம் குழப்பியடிக்கப்பட்டிருப்பது தொடர்பில் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, நாட்டின் வடக்கு கிழக்கு பிரதேசங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் அரசாங்கத்தினால் திட்டமிட்ட நிலஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் அரசாங்கத்தின் குறித்த நடவடிக்கைகளை கண்டித்து நாட்டின் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இது போன்ற சாத்வீக போராட்டங்கள் அண்மைய நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக நாட்டின் வடக்கு கிழக்கு பகுதிகளான யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அழைப்பின் பெயரில் அண்மையில் நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றிருந்தது.

 இதனை அடுத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி (21.09.2012) ஏற்பாடு செய்திருந்த நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கெதிரான சாத்வீக கவனயீர்ப்புப் போராட்டம் முல்லைத்தீவு அரசதிபர் பணிமணைக்கு முன் இடம்பெற்றிருந்தது. இதன்போது குறித்த ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவர்களை இலக்கு வைத்து கழிவுப்பொருட்களை வீசி எறிந்திருக்கின்றனர். மக்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கின்ற ஜனநாயக ரீதியான போராட்டங்களைக்கூட நடாத்த முடியாத சூழ்நிலையே இன்று இந்நாட்டில் ஏற்பட்டிருக்கின்றது.

 தமது மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக ஜனநாயக வழியில் போராடக்கூட முடியாத ஓர் நிலையையே இந்த அரசாங்கம் தோற்றுவித்திருக்கின்றது, அண்மையில் நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபைத்தேர்தலிலும் இவ்வாறான அச்சுறுத்தல்கள், அடாவடிகள், குழப்பியடிப்புக்கள், இடம்பெற்றிருக்கின்றது என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கின்றது. முல்லைத்தீவு, மாவட்டத்தில் அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் நில ஆக்கிரமிப்பைக் கண்டித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த இக்கவனவீர்ப்புப் போராட்டம் நண்பகல் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களே கழிவுப்பொருட்களை கொண்டு தாக்குதலை நடாத்திவிட்டு தப்பிச் சென்றிருப்பதாகவும், இதன் காரணமாக குறித்த பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் சிறிதுநேரம் அச்சமானதொரு சூழலுக்குள் தள்ளப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 மன்னார் நகர நிருபர்
உரிமைகளுக்காக ஜனநாயக வழியில் போராட முடியாத ஓர் நிலையையே அரசாங்கம் தோற்றுவித்திருக்கின்றது. -எஸ்.வினோ நோகராதலிங்கம் எம்.பி- Reviewed by NEWMANNAR on September 22, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.