ஊடகக் கல்வியைக் கற்றுக்கொள்வதும், ஊடகங்கள் ஊடாக தொடர்ந்து தமது உரிமைகளுக்காக குரல் கொடுப்பதும் காலத்தின் கட்டாயத் தேவையாகும்-அருட்திரு. தமிழ் நேசன் அடிகள்-படங்கள் இணைப்பு,
மன்னார் நகரமண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடகக் கற்றைநெறி சான்றிதழ் வழங்கும் விழாவிற்கு தலைமைதாங்கி உரையாற்றும்போதே அடிகளார் இவ்வாறு தெரிவித்தார். மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு அருட்பணி மைய இயக்குனரும், மன்னா என்ற மாதாந்த கத்தோலிக்க பத்திரிகையின் ஆசிரியருமான அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் உரையாற்றும்போது தொடர்ந்து கூறியதாவது, ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்னர் தமது உரிமைகளை வென்றெடுக்க அகிம்சை வழியில் போராட நினைத்த தமிழ் மக்கள் இன்ற நம்பிக்கை இழந்த நிலையில் உள்ளனர்.
இழந்த உரிமைகளுக்காக போராடும்போது இருக்கின்ற உரிமைகளும் பறிக்கப்படுகின்ற ஒரு இக்கட்டான வரலாற்றுச் சூழ்நிலையே இன்று நிலவுகின்றது. இந்தியாவின் சுதந்திரத்தைப்பற்றி எழுதப்பட்ட கவிதை இன்று ஈழத்தமிழர்களுக்கும் எவ்வளவு பொருத்தமாக உள்ளது! 'பட்டு வேட்டி பற்றிய கனவில் இருந்தபோது கட்டியிருந்த கோவணமும் களவாடப்பட்டது என்ற நிலைதான் இன்று எமக்கும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்றைய இளம் தலைமுறையினர் ஊடகக் கல்வியைக் கற்றுக்கொள்வதும், ஊடகங்கள் ஊடாக தொடர்ந்து தமது உரிமைகளுக்காக குரல் கொடுப்பதும் காலத்தின் கட்டாயத் தேவையாகும். இது யுகம் 'ஊடக யுகம்' என்று அழைக்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இன்று ஊடகங்களே உலகை ஆட்சிசெய்கின்றன. 'கப்பல் வைத்திருந்தவன் 19ஆம் நூற்றாண்டை வெற்றிகொண்டான்.
விமானம் வைத்திருந்தவன் 20ஆம் நூற்றாண்டை வெற்றிகொண்டான். ஊடக வளமுள்ளவன் இந்த 21ஆம் நூற்றாண்டை வெற்றிகொள்கிறான்' என்று சொல்லப்படுகின்றது. இந்நிலையில் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க நாம் ஊடகங்களை சரியாகப் பயன்படுத்த வேண்டும். அதற்கு ஊடகக் கல்வி அவசியமாகும் என்றார்.
பெரிய குஞ்சுக்குளம் பங்குத்தந்தை அருட்திரு. லக்ஸ்ரன் டி சில்வா அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவிற்கு முதன்மை விருந்தினராக மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு. விக்ரர் சோசை அடிகளார் கலந்துகொண்டார். கொழும்மைப தளமாகக் கொண்டு இயங்கும் விழுதுகள் என்ற அமைப்பின் பணிப்பாளர் திருமதி சாந்தி சச்சிதானந்தம் விழுதுகள் அமைப்பின் ஊடக இணைப்பாளர் திரு. நிக்சன், அருட்திரு. அருள்ராஜ் மற்றும் அருள்திரு. நெவின்ஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வின்போது பெரிய குஞ்சுக்குளம் இளைஞர் ஒன்றியத்தின் முயற்சியில் உருவான 'இளவல்' என்ற நூல் வெளியீடும் இடம்பெற்றது.
ஊடகக் கல்வியைக் கற்றுக்கொள்வதும், ஊடகங்கள் ஊடாக தொடர்ந்து தமது உரிமைகளுக்காக குரல் கொடுப்பதும் காலத்தின் கட்டாயத் தேவையாகும்-அருட்திரு. தமிழ் நேசன் அடிகள்-படங்கள் இணைப்பு,
Reviewed by NEWMANNAR
on
November 16, 2012
Rating:
No comments:
Post a Comment