அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இடம் பெற்ற உண்ணாவிரதப்போராட்டத்தை தொடர்ந் ஜனாதிபதி அவர்களுக்கு வழங்கும் முகமாக மன்னார் மாவட்ட செயலாளரிடம் கையளிக்கப்பட்ட மகஜர்

போர் அனர்த்தங்களுக்கு உள்ளாகி இடம்பெயர்ந்து வீடுகளையும் தொழில் துறைகளையும் இழந்து பின் மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட வன்னிப்பிரதேச மன்னார் மாவட்ட மக்களாகிய நாம் கௌரவ அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களது சுயநல அரசியல் நோக்கங்களுடனான அநீதியானதும் அர்த்தமற்றதுமான தலையீடு காரணமாக இந்திய வீட்டுத்திட்ட மற்றும் மீன்பிடி நிவாரண பயன்களை இழந்து நிற்கும் பரிதாப நிலையை தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டுவர வேண்டிய கட்டாயத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளோம்.
இவ்வீட்டுத்திட்டமும், மீன்பிடி தளபாட உதவித்திட்டமும் யுத்த காலத்தில் வீடுகளையும் தொழில் துறைகளையும், இழந்தவர்களை மையமாக கொண்டு இந்திய அரசால் வழங்கப்பட்டதாகும். இந்தியாவின் பிரிக்கமுடியாத அங்கமான தமிழ் நாட்டு மக்களின் எதிர்ப்பைப் புறந்தள்ளி இந்த யுத்தத்தில் இந்தியாவின் செயற்பாடு பற்றி தமிழராகிய எமக்கு கவலை தரும் விடயங்கள் நிறையவே உள்ளன. 

யுத்த முடிவில் இத்தமிழர்களின் ஆதங்கங்களையும் உணர்வகளையும், அத்துடன் தமிழக மக்களின் ஆத்திர உணர்வுடன்; கூடிய பகைமையுணர்வுகளையும் இந்திய அரசு உணர்ந்து கொண்டதால், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மாற்றுவழியாக இழப்பீடு செய்யும் வகையில் சில நிவாரணங்களை ஆலோசித்தது. கொதித்து போய் இருந்த தமிழ் நாட்டு மக்களையும் துன்பத்திற்குள்ளான இலங்கைத் தமிழர்களையும் சிறிது ஆசுவாசப்படுத்தவே இத்திட்டங்களை அறிவித்தது என்பதை நாம் அறிவோம். ஆகையினால் இவ்வுதவிகள் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்க்களுக்காகவே இவ்வீட்டுத்திட்டத்தை இந்தியா  அறிவித்தது என்றும் இந்தியாவின் நோக்கம் பாதிக்கப்பட்ட மக்களைத் தவிர வேறு எந்த தரப்பையும் உள்வாங்கும் நோக்கம் கொண்டதல்ல என்பதையும் நாம் வற்புறுத்தி கூறவேண்டிய தேவையில்லை. ஆகையினால் இவ்வீட்டுத்திட்டத்தை பெற உரிமை பெற்றவர்கள் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் மட்டுமே என்பது உண்மை. ஏனெனில் இந்த இறுதி யுத்தத்திதால் தமிழர்களைத் தவிர வேறு எந்த தரப்பையும்  சேர்ந்த ஒருவராவது பாதிக்கப்படவில்லை. 

இது மேலும் உறுதிப்படுத்துவது என்னவென்றால் இவ்விந்திய உதவிகள் யுத்த வலயமான வன்னிப்பிரதேசத்தில் வீடுகளையும், தொழில் துறைகளையும், பல்லாயிரக்கணக்கில் பெறுமதிமிக்க உயிர்களையும் உக்கிரமானதும் இரக்கமற்றதுமான எறிகணைத்தாக்குதல்களாலும் விமான குண்டுகளாலும் இழந்த தமிழ் மக்களுக்கே உரியது என்பதாகும். இந்த வகையில் எமது அழுத்தமான கருத்து என்னவென்றால் மன்னார் தீவிலுள்ள எந்த ஒரு நபரும்; கூட இந்த உதவிகளைப் பெற அருகதையற்றவர் என்பதேயாகும். ஏனெனில் 1990ம் ஆண்டு கார்த்திகை மாதம் மன்னார் தீவு படைத்தரப்பால் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பின் எந்தவிதமான எறிகணைத் தாக்குதலோ விமானத்தாக்குதலொ மன்னார் தீவில் இடம்பெறவில்லை.

ஆயினும் துரதிஷ்டவசமாக மன்னார் மாவட்டத்திலுள்ள ஐந்து பிரதேச செயலாளர் பிரிவிலும், தயாரிக்கப்பட்ட பயனாளிகள் விபரப்பட்டியல்களில் காணப்படும் மிக அதிகமான பெயர்கள் இறுதி யுத்தகாலத்தின்போது யுத்த வலயத்தில் வசிக்காதவர்களைக் கொண்டதாக காணப்படுகின்றன. ஊண்மையிலே இந்த யுத்தத்தில் பாதிக்கப்பட்டது வன்னியில் மன்னார், வவுனியா, யாழ்ப்பாண மாவட்டங்களின் சில பகுதிகளும் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களின் முழமையான பகுதிகளுமாகும். பாதிக்கப்பட்ட அனைவரும் தமிழர்களே. மேலும் இப்பயனாளிகள் தெரிவிற்கு சில குறிப்பிட்ட நிபந்தனைகள் அரசாங்கத்தில் வகுக்கப்பட்டுள்ளன. தெரிவுகள் யாவும் இச்சுற்று நிரும அறிவுறுத்தல்களும் முரணாகவே நடைபெற்றுள்ளன.

உதாரணமாக மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் எள்ளுப்பிட்டி, நாகதாழ்வு, பெரிய நாவற்குளம், சிறுநாவற்குளம், சிறுநீலாசேனை, பெரியநீலாசேனை, முள்ளிப்பள்ளம், திருக்கேதீஸ்வரம், ஆகிய கிராமங்கள் 1990ல் உயர் பாதுகாப்பு வலயமாகவும் மக்கள் நடமாட முடியாத பிரதேசமாகவும் பிரகடணப்படுத்தப்பட்டதுடன் இக்கிராமங்களில் வாழ்ந்த மக்கள் படையினரால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். இங்கிருந்த கட்டிடங்கள் யாவும் புல்டோசர் கொண்டு அழிக்கப்பட்டன. இப்படி வெளியேற்றப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை சுமார் 300க்கு மேற்பட்டதாகும். 2010ல் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படும் என்ற உறுதியும் வழங்கப்பட்டது. ஆயினும் மொத்தமாக சுமார் 138 குடும்பங்களுக்கே வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டிருக்கும் அதேவேளைகளில் மொத்தமாக மன்னார் பிரதேச செயலாளர் பிரிவிற்கு வழங்கப்பட்ட 2999 வீடுகளில் 2635 வீடுகள் எருக்கலம்பிட்டி என்ற தனியொரு முஸ்லீம் கிராமத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இக்கிராமம் எவ்விதத்திலும் இறுதி யுத்தத்தில் பாதிக்கப்படவில்லை. குறிப்பிட்ட இந்த அமைச்சரின் அரசியல் தலையீடு காரணமாக இவ்வுதவித்திட்ட தெரிவுகளில் ஏற்பட்டுள்ள நியாயமற்றதும் ஒழுங்கற்றதுமான ஏராளமான பலவிடயங்கள் உள்ளன. 

இதுபோன்ற ஏராளமான நியாயமற்ற பயனாளிகள் தெரிவு ஏனைய பிரதேச செயலாளர் பிரிவுகளும் நடைபெற்றுள்ளன. அவையாவும் குறிப்பிட்ட இந்த அமைச்சரின் அரசியல் செல்வாக்கின் மூலம் தெரிவு செய்யப்பட்டவையாகும்.

இதேபோல மீன்பிடி உபகரண உதவிகளை எடுத்துக்கொண்டால் மன்னாருக்கு ஒதுக்கப்பட்ட 175 படகுத் தொகுதியிலும் 135 படகுத் தொகுதிகள் முஸ்லீம்களுக்கும் மீதி 40 படகுத்தொகுதிகள் மட்டுமே தமிழருக்கும் வழங்கப்பட்டுள்ளன. உதவிகள் வழங்கப்பட்ட முஸ்லீம்களில் ஏராளமானோர் மீனவர்கள் அல்ல என்பதுடன்  இறுதி யுத்தத்தில் பாதிக்கப்படவர்களும அல்ல.

1990ம் ஆண்டு ஒக்டோபரில் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்களுக்கு எந்த விதமான நிவாரணங்களும் வழங்கப்படுவதற்கு நாம் எதிராளிகள் அல்ல. இந்த மனிதாபிமானமற்ற செயலை தமிழர்களாகிய நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. பலதடவைகளில் நாம் எமது கவலைகளையும், அனுதாபங்களையும், இவர்களுக்கு தெரிவித்துள்ளோம். இந்த முஸ்லீம்களின்  மீள்வருகையையோ, அல்லது சொந்த இடங்களில் மீள்குடியேற்றத்தையோ, நாம் எப்போதும் எதிர்க்கவில்லை.  ஆனால் அதிகமானவர்கள் மீளத் திரும்பி முழமையாக மீள்குடியேற விரும்புவதில்லை. ஏனெனில் புத்தளத்திலும் தெற்கின் ஏனைய பகுதிகளிலும் அவர்கள் நிரந்தரமாக குடியமர்ந்து விட்டதுடன் அப்பகுதிகளில் வளமான தொழில்களையும் அமைத்துக்கொண்டுள்ளனர். இந்த முஸ்லீம்களில் பலர் எம்மிடம் தமது இந்த இடப்பெயர்வு, அவர்களின் கூற்றுப்படி அவர்கள் தாம் மிக அமைதியான வாழ்வை மேற்கொண்டதாகவும், தமது பிள்ளைகள் தெற்கில் சிறந்த பாடசாலைகளில் கல்வி கற்றாலும் மன்னாருக்குரிய இட ஒதுக்கீட்டில் உயர் கல்வி வாய்ப்பை பெற்றுக்கொண்டதாகவும் தமது பிள்ளைகள் உயர் வேலைவாய்ப்புக்களை பெற முடிந்ததாகவும் கூறியுள்ளனர். அவர்கள் 'எருக்கலம்பிட்டி' என்ற பெயரில் புத்தளம் பாலாவிக்கருகில் புத்தளம் கொழும்பு வீதியில் அழகிய முறையில் வடிவமைத்து அதில் அனைவரும் சொந்த நிரந்தர வீடுகளைப் பெற்றிருப்பதாகவும் கூறியுள்ளார். இதே மக்களுக்குத்தான் ஜனாதிபதி செயலணி ஆணைக்குழுவின் செயலாளரின் சுற்று நிருபங்களுக்கு எதிரான முறையில் மிகத்தேவையுள்ள மக்களை வஞ்சித்து வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது. 

இப்பாராபட்ச உதவித்திட்டப் பகிர்வை ஏழையான பீற்றரிடம் அபகரித்து வசதியான போலுக்கு வழங்கிய  ஓர் திட்டமிட்ட வழிப்பறி பகல் கொள்ளையாக நாம் கருதுகிறோம். மேலும் இவர் தனது சொந்த மக்களுக்கு முன்னுரிமையளித்து வழங்கிய செயலாக மட்டுமன்றி தமிழ் மக்களை அவர்களுடைய அரசியல் அபிலாசைகளுக்கு எதிராக வஞ்சித்து பழிவாங்கியுள்ள செயலாகவும் நாம் கருதுகிறோம். 

மேலும் முசலிப்பகுதியில் இடம்பெயர்ந்த அரிப்பு, முள்ளிக்குளம் கிராமங்களின் விடயத்தை பார்ப்போமாயின், இவர்கள் அண்மைக்காலம் வரை மீள்குடியமர்த்த அனுமதிக்கப்படவில்லை. இவர்களில் 90மூ மாணவர்கள் , மீனவர்கள். இவர்கள் யுத்த ஆரம்பமான 2007 ல் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட போது அனைத்தையும் இழந்தவர்கள். இவர்களில் முள்ளிக்குள மக்கள் தங்கள் சொந்த வீட்டுக்காணிகளில் மீளக்குடியமர அனுமதிக்கப்படவில்லை. ஒரு பட்டினிச் சாவுகூட இக்கிராமத்தில் ஏற்பட்டிருந்தது. இம்மக்கள் மீன்பிடி உபகரணங்கள் இல்லாமையால் தங்கள் சொந்த தொழிலான மீன்பிடித் தொழிலுக்கு திரும்ப முடியவில்லை. மிகத் தேவையுள்ள இந்த மக்களை உதாசீனப்படுத்திவிட்டு அமைச்சரின் சொல்வாக்கை அதிகாரிகள் மீது பிரயோகித்து மீன்பிடி உதவிகள் பெறும் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அரசாங்கத்தை  மக்கள் மத்தியில் செல்வாக்கை இழக்க செய்யும் இந்த அமைச்சரின் முரண்பாடான பற்பல நடவடிக்கைகளையிட்டு அதி மேன்மை தங்கிய தாங்கள் இவரது நடவடிக்கைகளை பரிசோதித்து ஆராய முற்படுவீர்களானால் மிக அதிகமான அநீதியானதும்  பொருத்தமற்றதும் ஜனநாயக விரோதமானதுமான பல சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வரும் விபரிப்பதனால் இதன் விரிவாக்கம் அதிகரிக்கும்.


அதி மேன்மையானவரே இந்த அமைச்சரினால் தங்கள் அரசிற்கு அபகீர்த்தியை கொண்டுவரும் இனங்களுக்கிடையே பிரிவுகளையும் மோதல்களையும் ஏற்படுத்தி சகவாழ்வுக்கும் அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் அதிகரிக்கின்றன.
எனவே அதிமேன்மையான தங்களிடம் யுத்த பாதிப்பினால் அவலத்திற்குள்ளளாகிய நாங்கள் தங்களிடம் மன்றாட்டமாகவும், தாழ்மையாகவும் வேண்டிக்கொள்வது என்னவென்றால் இந்த அமைச்சரின் அத்துமீறல்களில் தலையிட்டு துரதிஷ்டத்திற்குள்ளாகி யுத்தத்தினால் பாதிப்படைந்த எமக்காக வழங்கப்படும் நிவாரணங்களை எவ்வித இடைநிலை ஊடுருவல் தலையீடு இன்றி கிடைக்கும்படி உதவவேண்டம் என்பதுதான் .என குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னாரில் இடம் பெற்ற உண்ணாவிரதப்போராட்டத்தை தொடர்ந் ஜனாதிபதி அவர்களுக்கு வழங்கும் முகமாக மன்னார் மாவட்ட செயலாளரிடம் கையளிக்கப்பட்ட மகஜர் Reviewed by NEWMANNAR on December 04, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.