அண்மைய செய்திகள்

recent
-

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து மன்னார் முள்ளிக்குளத்தில் இருந்து இன்று நடைப்பவணி ஆரம்பம்.

இந்திய மீனவர்களின் அத்துமீறலால் மீன் வளம் அழிக்கப்படுவதை கண்டித்து போரினால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் அமைப்பின் சார்பில் நாளை மன்னார், முள்ளிக்குளத்தில் இருந்து முல்லைத்தீவு வரை கண்டனப் பேரணி நடத்தப்படவுள்ளதாக அவ்வமைப்பின் தலைவர் வி.சகாதேவன் தெரிவித்துள்ளார்.


 இது தொடர்பில் தகவல் வெளியிட்ட அவர் கூறுகையில், ’10.12.2012 அன்று யாழ்ப்பாணம் குருநகரில் சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. உண்ணாவிரதத்தின் 4ஆம் நாள் (13.12.2012) அரசாங்கத்தின் உத்தரவின் பேரிலும் வடமாகாண கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசங்களின் தலைவர்களின் அழைப்பின் பேரிலும் அங்கு வந்த யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கொடுத்த வாக்குறுதியை அடுத்து ஒரு மாத காலக்கெடு வழங்குவதாக முடிவு எடுக்கப்பட்டதுடன் சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டமும் முடித்து வைக்கப்பட்டது

இருந்த போதிலும் என்னாலும் வடமாகாண மீனவர் சங்க பிரதிநிதிகளாலும் அரசுக்கு கொடுத்த காலக்கெடு முடிவடைந்துள்ளது. ஆனால் எமது நோக்கம் இதுவரை காலமும் நிறைவேற்றப்படவில்லை. இருந்தபோதிலும் என்ன நோக்கத்தை முன்வைத்தோமோ அந்த நோக்கத்தை அடையும்வரை நாம் ஓய்வெடுக்க முடியாது. காட்டுப்பாடில்லாத இந்திய மீனவப் படகுகளின் அத்துமீறலால் எமது கடல்வளம் அழிக்கப்படுகின்றது.

 இது போதாதென்று எமது கடலில் மீன்பிடிக்க அனுமதி கோரி இந்திய மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். கடந்த 30 வருட காலமாக கடலுக்கு செல்லமுடியாமல் எமது மீனவர்கள் கால்வயிறு கஞ்சிக்கு போராடிக் கொண்டிருக்க இதுவரை காலமும் கள்ள மீன் பிடித்தவர்கள் இப்போது எங்கள் உலைப்பானைக்கே கை வைக்கப் பார்க்கிறார்கள். ஒரு ரூபாயல்ல இரண்டு ரூபாயல்ல வருடம் ஒன்றிற்கு இந்திய மீனவர் அத்துமீறலால் நாம் இழக்கும் மீன்வளம் இருபத்தோராயிரம் கோடிக்கு மேல்.

இது எமது மக்களின் சொத்து. எமது மக்களுக்குச் சேரவேண்டிய பணம். இது எமது மக்களுக்கு கிடைக்க பாடுபட வேண்டியது எமது பொறுப்பு. இதனை அரசாங்கத்திற்கும் இந்திய அரசுக்கும் சம்மந்தப்பட்ட சகலருக்கும் தெரியப்படுத்தி எமது மீனவ சமூகத்தை அழிவிலிருந்து மீட்டு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுப்பதற்காக இப்பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்துக்குட்பட்ட யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் உட்பட 04 மாவட்டங்களிலும் 225 மீனவர் சங்கங்களும் 16 சமாசங்களும் 60,000ற்கும் மேற்பட்ட அங்கத்தவர்களும் உள்ளனர்.

 இவைதவிர கரையோர கிராமங்களைச் சேர்ந்த மகளிர் அமைப்புக்கள் இளைஞர் கழகங்கள், விளையாட்டுக் கழகங்கள், பொது அமைப்புக்கள் என்பனவும் இதற்கு ஆதரவு தரவேண்டும். எமது மீனவ சமுகத்தின் வளமான எதிர்காலத்திற்காக அனைவரையும் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணையுமாறு அறைகூவல் விடுக்கின்றோம்;. மீனவர் அமைப்புக்கள் மடடுமல்லாது வடமாகாணத்தினைச் சேர்ந்த பொது அமைப்புக்களும் பேதங்களை மறந்து குரல்கொடுக்க முன்வர வேண்டும்.



 எனவே இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுத்து நிறுத்த வேண்டும், எமது கரையோர இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும், எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும் என கோரி நடைப்பயண பேரணி நாளை ஞாயிற்றுக்கிழமை மன்னார் மாவட்டம் முள்ளிக்குளம் கிராமத்தில் ஆரம்பித்து வடமாகாணம் முழுவதும் கரையோரமாக நகர்ந்து முல்லைத்தீவு, கொக்கிளாய் கிராமத்தில் முடிவுபெறும். பேரணியின் முடிவில் முல்லைத்தீவில் இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக மாபெரும் கண்டனக் கூட்டம் ஒன்று நடைபெறும். கூட்டம் நடைபெறும் திகதி பின்னர் அறியத்தரப்படும்’ என தெரிவித்தார்.
இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து மன்னார் முள்ளிக்குளத்தில் இருந்து இன்று நடைப்பவணி ஆரம்பம். Reviewed by Admin on January 27, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.