அண்மைய செய்திகள்

recent
-

உண்ணக் கொடுத்துவிட்டு சிறுவனை சுட்டுக்கொல்வது மனிதாபிமானமா?; இனியும் சர்வதேசம் தாமதிக்கக் கூடாது என்கிறது கூட்டமைப்பு


"ஜெனிவா மாநாட்டில் இலங்கை அரசு புரிந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக ஒன்றரை மணித்தியாலங்கள் ஒளிபரப்பப்படவுள்ள காணொலியில் உள்ள ஒரு பகுதியே பாலச்சந்திரன் படுகொலை தொடர்பாகத் தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள். 


இதைவிட நெஞ்சைஉலுக்கும் கொடூரமான சம்பவங்களும் வெளிவரக்கூடும். எனவே, இந்தியா உட்பட உலக நாடுகள் தாமதிக்காது இலங்கை அரசு மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளைத்  துரிதப்படுத்தவேண்டும்.''

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய புதல்வர் பாலச்சந்திரனின் படுகொலை குறித்த புதிய ஆதாரமாக, அவர் வன்னியில் இறுதி யுத்தத்தில் இலங்கை இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்ட பின்னர் படுகொலைசெய்யப்பட்ட புதிய புகைப்படங்களை "சனல் 4' ஊடாகப் பெற்று லண்டனின் "த இன்டிபென்டென்ட்' நாளேடு மற்றும் இந்தியாவின் "த இந்து' நாளேடு என்பன வெளியிட்டுள்ளன.

"சாப்பாடு கொடுத்தபின் படுகொலை புலிகள் இயக்கத் தலைவரின் இளைய மகனின் இறுதிக் கணங்கள்' என்ற தலைப்பில் வெளியாகியுள்ள கட்டுரையிலேயே மேற்படி  புகைப்படங்கள்  வெளியாகியுள்ளன.

பிரபாகரனின் இளைய மகன் வன்னியில் இறுதி யுத்தத்தில் அகப்பட்டுப்  பலியாகினார் எனவும், தமது படையினர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த கடைசி  நிலப்பரப்பைக் கைப்பற்றியவேளை, முல்லைத்தீவு கடற்கரைப் பிரதேசத்தில் அவரின் உடலைக் கைப்பற்றியதாகவும் இலங்கை அரசு முன்னர் அறிவித்திருந்தது.

ஆனால், தற்போது வெளியாகியுள்ள புதிய புகைப்படங்கள், இலங்கை அரச தரப்பு இதுவரை கூறிவந்ததற்கு மாறாக பாலச்சந்திரன் உயிருடன் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டிருப்பதையும் பின்னர் அவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருப்பதையும் தெளிவாகவே காட்டுகின்றன என சர்வதேச ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள பாலச்சந்திரன் படுகொலை தொடர்பான புகைப்படங்கள் குறித்து "சுடர் ஒளி'யிடம் நேற்றுக் கருத்துத் தெரிவிக்கும்போதே  கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர்  சுரேஷ் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் தெரிவித்தவை வருமாறு:

"இலங்கை அரசானது தாம் வன்னியில் இறுதி யுத்தத்தில் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டோம் எனக் கூறிவருகின்றது. ஆனால், அவர்களின் மனிதாபிமான நடவடிக்கையின் விசித்திரம் இப்போது அம்பலமாகியுள்ளது. 

சரணடைந்த பச்சிளம் பாலகனுக்கு  சாப்பிட "பிஸ்கட்' வழங்கி சித்திரவதைசெய்து சுட்டுப் படுகொலைசெய்வதுதானா இலங்கை அரசின் மனிதாபிமானம்? வழமையான  பாணியில் இலங்கை அரசு பாலச்சந்திரன் படுகொலை தொடர்பாக வெளிவந்துள்ள புகைப்படங்களையும்  மற்றும் வெளிவரவுள்ள காணொளிகளையும் முற்றுமுழுதாக மறுக்கும். 

யாழ். தெல்லிப்பழையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் இராணுவப் புலனாய்வாளர்கள் காட்டிய காட்டுமிரண்டித்தனத்தைக் கூட இலங்கை மூடிமறைக்க முற்படுகின்றது. 

தமிழ், ஆங்கில, சிங்கள ஊடகங்களில் வெளிவந்த இராணுவப் புலனாய்வாளர்களின் படங்கள், காணொளிகளைக்கூட அதிநவீன தொழில்நுட்பத்தில்   திரிபுபடுத்தப்பட்டிருக்கலாம் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், பாலச்சந்திரன் படுகொலை தொடர்பாக வெளிவந்துள்ள புகைப்படங்கள் மற்றும் வெளிவரவுள்ள காணொளிகளையும் "தொழில்நுட்பத்தில்   திரிபுபடுத்தப்பட்டிருப்பவை' என்று இலங்கை அரசு கூறும்.

ஆனால், இந்தியா உட்பட உலக  நாடுகளின் கையில்தான் இலங்கை அரசின் இந்தக் கொடூர செயல்களுக்கான பதில்கள் தங்கியிருக்கின்றன. இந்தக் கொடூரக் காட்சிகளைப் பார்வையிட்ட பின்னர் அரசியலுக்காக அறிக்கைகளை வெளியிட்டுவிட்டு உலக நாடுகள் அமைதியாக இருக்கக்கூடாது.

இந்தியா உட்பட உலக நாடுகள் ஜெனிவா மாநாட்டில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணையை ஆதரிக்கவேண்டும். அத்துடன்,  தாமதிக்காது இலங்கை அரசு மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளைத்  துரிதப்படுத்தவேண்டும்.

இந்த விசாரணைகளின் ஊடாக தமிழ் மக்கள் படுகொலையுடன் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தண்டனை கிடைக்கவேண்டும். யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழருக்கு நீதி கிடைக்கவேண்டும்; தீர்வு கிடைக்கவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதையே வலியுறுத்தி நிற்கின்றது'' என்று தெரிவித்தார் சுரேஷ். 
உண்ணக் கொடுத்துவிட்டு சிறுவனை சுட்டுக்கொல்வது மனிதாபிமானமா?; இனியும் சர்வதேசம் தாமதிக்கக் கூடாது என்கிறது கூட்டமைப்பு Reviewed by NEWMANNAR on February 20, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.