மன்னார் ஆயர் தலைமையிலான குழு தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்தது!
மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை புதிய மகசின் சிறைச்சாலைக்கு விஜயம் செய்து தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். அவருடன் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தனவும் சென்றுள்ளார்.இவர்கள் இருவரும், கைதிகளின் நலன்கள், அவர்களின் வழக்கு விசாரணை நிலைமைகள் என்பன குறித்து; கேட்டறிந்து கொண்டுள்ளனர்.
அத்துடன் புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும் அல்லது விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள தியாகராஜா பிரபாகரன் என்ற கைதியையும் அவர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இவர்களின் விஜயம் குறித்து பிபிசி வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் ஐந்து பிரிவுகளை உள்ளடக்கியவர்களாக இருக்கின்றோம்.
1. கைது செய்யப்பட்டு விசாரணைகளின்றி விளக்கமறியலில் நீண்டகாலமாக வைக்கப்பட்டிருப்பவர்கள்.
2. வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள போதிலும், நீண்டகாலமாக நீதிமன்ற விசாரணைகள் இழுத்தடிக்கப்படும் நிலையில் உள்ளவர்கள்.
3. விசாரணைகளின் பின்னர் தண்டனை பெற்றுள்ளவர்கள்.
4. இராணுவத்திடம் சரணடைந்ததன் பின்னர் விசாரணைகளோ விடுதலையோ இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள்.
5. புனர்வாழ்வுப் பயிற்சி வழங்கி, சமூகத்தில் இணைக்கப்பட்டதன் பின்னர் கைது செய்யப்படடுள்ளவர்கள்.
ஆகிய ஐந்து பிரிவுகளாகவே நாம் இருக்கின்றோம் தங்களை புனர்வாழ்வக்கு உட்படுத்த வேண்டும் அல்லது விடுதலை செய்ய வேண்டும் என்றும் இதற்கு ஆயரும், நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தனவும் நடவடிக்கை எடுத்து உதவி புரிய வேண்டும் எனவும் கோரியிருக்கின்றனர்.
நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து தங்களை விடுதலை செய்வதென்பது நடைபெறாத காரியம் என்பதுடன், அது நீண்டகாலம் எடுக்கும் என்பதால், பொது மன்னிப்பின் கீழ் உடனடியாக விடுதலை செய்யப்படுவதை அல்லது புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படுவதையே தாங்கள் விரும்புவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக அரசாங்கம் பல தடவைகளில் உறுதிமொழிகளை வழங்கியிருக்கின்ற போதிலும் இன்னும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதேபோன்று தாங்கள், தமது விடுதலையைக் கோரி, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளை, அதனைக் கைவிடுமாறும் தமது விடுதலைக்கு தம்மால் இயன்ற நடவடிக்கைகளை எடுப்பதாக நீங்கள் இருவரும் உறுதியளித்திருந்த போதிலும் அதனால் பயன் ஏதும் கிடைக்கவில்லை என்றும் அரசியல் கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மன்னார் ஆயர் தலைமையிலான குழு தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்தது!
Reviewed by Admin
on
February 28, 2013
Rating:

No comments:
Post a Comment