அண்மைய செய்திகள்

recent
-

பொதுபல சேனாவின் ஹலாலும் முஸ்லிம் அரசியலின் ஹராமும்- ஏ.எச்.சித்தீக் காரியப்பர்


இந்நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகம் இன்று பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. இலங்கையின் முதலாவது சிறுபான்மையின தமிழ்ச் சமூகம் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்த, முகங்கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையிலேயே இரண்டாவது  சிறுபான்மையின முஸ்லிம் சமூகமும் இன்று பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது.
 தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அடுத்த இனரீதியான அடக்குமுறை முஸ்லிம்களுக்கே என்பது பலராலும் அன்று எதிர்வு கூறப்பட்டிருந்த நிலையில் அது இன்று நிறைவேறத் தொடங்கி விட்டது.
 விடுதலைப் புலிகள் தோற்கடிக்கபட்ட பின்னர் இலங்கையில் இனி இனவாதம், மதவாதம் ஒன்றுமே இல்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  அடிக்கடி கூறிக் கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் கூறிக் கொண்டிருக்கும் போதே இன்று முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் தெற்கிலிருந்து தோற்றம் பெற்றுள்ளது.
தென்னிலங்கை சிங்கள பௌத்த கடுங்கோட்பாட்டுக் கொள்கையைக் கொண்ட சகல தரப்பினரினதும் மொத்த இனவாத தீ நாக்கானது முதலில் தம்புள்ளை வரை மட்டுமே நோக்கி நீண்டிருந்தது. இன்று அது நாடளாவிய ரீதியில் வளைந்து சென்று கொண்டிருக்கிறது. பள்ளிவாசல்கள், ஹலால் உணவுகள், முஸ்லிம் பெண்களின் பர்தாக்கள் என அனைத்தினையும் வெறுப்புடன் பகிரங்கமாகப் பயமின்றி விமர்சித்து அவற்றுக்கு எதிராகச் செயற்படும் நிலை உருவாகியுள்ளது. இதன் இறுதி உச்சத்தின் ஒரு கட்டமாக முஸ்லிம் வர்த்தக நிலையங்களில் பொருட்களைக் கொள்வனவு செய்யக் கூடாது என்ற பகிரங்க அறிவித்தலும் இந்த பௌத்த சிங்கள கடுங்கோட்பாளர்களால் விடுக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, முஸ்லிம் பெயர் கொண்ட வீதிப் பெயர் பலகைகளும் நிறம் பூசி அழிக்கப்பட்டு அவை சிங்கள பெயர்களப் பெயர்களாக மாற்றப்படும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது. சித்திலெப்பை வீதி இன்று சித்தார்த்த வீதியாகிப் போயுள்ளது.
இன்னுமொன்றைக் கூறப் போனால், எண்பது சத வீத சிங்கள பௌத்தர்களைக் கொண்ட இந்த நாட்டில் எட்டு வீதமான முஸ்லிம்களின் ஹலால் உணவு எதற்கு? அதனை சிங்களவர்கள் பயன்படுத்த வேண்டிய தேவையில்லை என்ற அளவுக்கு இனவாதம் இன்று சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு அவர்களது உணர்வுகளும் உசிப்பி விடப்பட்டுள்ளன. இதனை முஸ்லிம்களுக்கு எதிரான நாடளாவிய ரீதியிலான கலவரம் ஒன்றின் கட்டியம் என்று கூறினாலும் மிகையாகாது.
 கிராமம் கிராமாகச் சென்று முஸ்லிம்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன. பெரும்பான்மைக்குள் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் இன்று அச்ச உணர்வுடனேயே ஒவ்வொரு நாளையும் எதிர்நோக்கின்றனர்.
 இந்த நாட்டின் சிங்கள அமைச்சர்களில் ஒருவரான பாட்டாலி சம்பிக்க ரணவக்க அண்மையில் தெரிவித்திருந்த கருத்துகள் கூட அவரது மட்டகரமான சிந்தனையை வெளிப்படுத்தியிருந்தன. ‘தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அன்று ஆயுதங்களின் மூலம் செய்ய நினைத்தவற்றை இன்று அகில இலங்கை ஜமயத்துல் உலமா சபை ஹலால் மூலம் செய்ய முயற்சிக்கின்றது. முழுநாட்டையும் உற்பத்திகளையும் இஸ்லாமிய மயப்படுத்த முயற்சிக்கின்றனர்.” என்றெல்லாம் நரம்பில்லாத நாக்கினால் வரம்பின்றி அபாண்டங்களை கட்டவிழ்த்து விட்டிருந்தார்.
 ஆனால், இவையெல்லாம் ஒரு புறமிருக்க, இந்த வியடம் தொடர்பில் பெரும்பாலான முஸ்லிம் அரசியல் தலைமைகளின் நிலைப்பாட்டை நோக்கும் போது வெட்கித் தலைகுனிந்து வேதனைப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
 1. மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி ஆக்கினால் முஸ்லிம் பள்ளிவாசல்களில் பாங்கு சொல்ல அனுமதிக்கமாட்டார் என்று புத்தளத்தில் ஒலித்த குரல்…..
2. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊடாக எமது கட்சி இந்தத் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் நான் வெட்கித் தலைகுனிய வேண்டியிருந்திருக்கும். இன்று எத்தனையோ பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டு விட்டன என்று கிழக்கில் ஒலித்த குரல்…
3. மஹிந்தவை ஜனாதிபதி ஆக்கினால் முஸ்லிம்களின் நிலை மோசமாகி விடும் என கண்டியில் ஆரூடம் தெரிவித்த அரசியல் குரல்கள்.. என அடுக்கிக் கொண்டே போகலாம்.
குறித்த முஸ்லிம் அரசியல்வாதிகளால் இப்படியெல்லாம் அன்று கூறியவைகள் என்னவோ இன்று நடந்தேறி வருகின்றனதான். ஆனால், இவற்றுக்கெல்லாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காரணம்  அல்ல என்று கூறினாலும் ஜனாதிபதி மஹிந்த மீதே இவை அனைத்துக்குமான குற்றத்தை அந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் அன்று சுமத்தியதன் காரணமாக முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீதே அதிருப்தி கொள்ளும் நிலையும் உருவாகியுள்ளது.

 இவ்வாறெல்லாம் கூறி அன்று ஜனாதிபதிக்கும் அவரது அரசுக்கும் எதிராகப் குரல் கொடுத்து இந்த நாட்டு முஸ்லிம்களின் உணர்வுகளை உசுப்பி விட்டு அவர்களைப் பகடைக்காய்களாக மாற்றிய அதே நபர்கள், அதே முஸ்லிம் அரசியல் பிரமுகர்களே இன்று முஸ்லிம்களுக்கு ஒன்றுமில்லை. அவர்கள் இந்த நாட்டில் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ்கிறார்கள். ஜனாதிபதி கடவுள் போன்றவர். அவர் முஸ்லிம்களைப் பாதுகாப்பார் என்று கூறுமளவுக்கு வெட்கம் கெட்டுப் போய் உள்ளனர்.

 தங்களது அரசியல் இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காக சமூகத்தை ஏலத்தில் விட்டு இன்று அரசுடன் இணைந்து, ஆதரவு வழங்கி அரசுக்கு சந்தனம் பூசி, சாமரம் வீசும் அளவுக்கு படியிறங்கிப் போன முஸ்லிம் அரசியல்வாதிகளால் முஸ்லிம் சமூகம் நாதியற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
 1 பொது பல சேனா போன்ற இயக்கங்கள் இனவாதத்தையும் மத வாதத்தையும் ஊக்குவித்து நாட்டை மற்றுமொரு அழிவை நோக்கி வழிநடத்துவதாக தென் மாகாண சபை அரச தரப்பு உறுப்பினர் பதேகம சமித்த தேரர் ஒரு  புறத்தில் எச்சரிக்கிறார்…
 2. மறுபுறத்தில்… முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கிறார் சுமந்திரன் எம்.பி.
 இவ்வாறு கூட்டணியின் பத்தேக சமித்த தேரரும் கூட்மைப்பின் சுமந்திரன் எம்.பியும் முஸ்லிம்களுக்காகப் பரிந்து பேச, அதனைக் கூட ஜீரணிக்க முடியாத சில முஸ்லிம் அரசியல்வாதிகள் எதிர் அறிக்கை விடும் அளவுக்கு நிர்வாண அரசியல் நடத்துவது வெட்கக் கேடானது. முஜிபுரும் முஸ்ஸமிலும் முஸ்லிம்களுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்தாலும் அதற்கும் பதில் அறிக்கை தயாரிப்பதும் அதே முஸ்லிம் அரசியல்வாதிகளே. இவ்வாறெல்லாம் இவர்கள் செயற்படுவது யாரைத் திருப்திபடுத்திக் கொள்ளவோ, எதனைப் பெற்றுக் கொள்ளவோ?
இன்னுமொரு விடயத்தையும் இங்கு குறிப்பிட வேண்டும் கடந்த செவ்வாய்க்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், அந்தக் கட்சியின் மாகாணசபை உறுப்பினர்கள்,முக்கிய பிரமுகர்கள், மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சிலைச் சேர்ந்த பிரமுகர்கள் போன்றோர் பொது பலசேன அமைப்பின் தலைமைகளை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் சந்தித்த போது, முஸ்லிம்கள் தரப்பில் சில கருத்துகள் முன்வைக்கப்பட்டிருந்தன. முஸ்லிம் சமூகம் சனத்தொகையைப் பெருக்கி வருகிறது என்ற குற்றச்சாட்டுக்கும் அங்கு பதிலளிக்கப்பட்டிருந்தது.
 ஆனால், முஸ்லிம் சனத் தொகை அதிகரிப்பு தொடர்பான பொது பல சேனாவின் இதே குற்றச்சாட்டுக்கு  முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் முன்னர் இவ்வாறானதொரு கருத்தைத் தெரிவித்திருந்தார்.
 அதாவது, முஸ்லிம் பெண்களின் திருமண வயது எல்லையை மாற்றுவது தொடர்பில் ஆலோசிக்கப்படவுள்ளதாக அவர் கூறியிருந்தார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இதன் மூலம் பொது பல சேனாவின் குற்றச்சாட்டை அவர் ஏற்றுக் கொண்டு அதற்கேற்ப சட்டத் திருத்தம் செய்யவும் அவர் விரும்புகிறார் என்பதே இதன் மூலம் புலப்படுகிறது. தன் வீட்டுக்கு வெளிச்சம் வரவேண்டும் என்பதற்காக பக்கத்தான் வீட்டுக் கூரையைக் கூட எரிக்கத் தயங்காத இவ்வாறான அரசியல்வாதிகள் தொடர்பில் இந்நாட்டு முஸ்லிம்கள் பொதுபல சேன தொடர்பில் காட்டும் கவனத்தை விட அதிக அவதானம் செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.
 முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் அண்மையில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் எழுந்திருந்தன. ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முஸ்லிம்கள் தொடர்பில் ஆதரவாகப் பேசியிருந்தார். அப்போது அவரது உரைக்கு எதிர்ப்புகள் எந்தத் தரப்பிலிருந்து அதிகளவில் வந்தன என்பது அனைவரும் அறிந்த விடயமே. 

அதே போன்று அரச தரப்பு அமைச்சர் ஒருவர் ரணிலின் கூற்றை மறுத்துப் பேசிய போது கைதட்டி ஆரவாரம் செய்து பக்கப்பாட்டு பாடியவர்கள் எந்தத் தரப்பினர் என்பதும் அப்பட்டமாகத் தெரிந்த விடயமே. அரசு தரப்பு அறிக்கையானது, தனது கருத்துக் கேட்டே தயாரிக்கப்பட்டதாகக் கூறிய அமைச்சர் ரவூப் ஹக்கீம், பின்னர் தான் அப்படிக் கூறவில்லை என்றும் ஊடகங்கள் தனது உரையைத் தவறாகப் புரிந்து கொண்டன என்றும் வழமையான அறிக்கையை விட்டதனையும் யாரும் அறியாமல் இல்லை.

முஸ்லிம் பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டதாகத் தேர்தல் கால பிரசாரம் செய்தோர் தேர்தலின் பின்னர் அரசுடன் ஒட்டிக் கொண்டு, இன்று அப்படி ஒன்றுமே நடக்கவில்லை என்ற அரச தரப்பாரின் கூற்றுக் கூற்றுக்கு நற்சான்றிதழ் வழங்கும் சூடு சொரணையற்ற நிலையிலேயே இன்று முஸ்லிம் அரசியலில் கோலோச்சுகிறது.
பொதுபல சேனா என்பது பௌத்த, சிங்கள கடுங்கோட்பாடு கொண்டதொரு அமைப்பு. அந்த அமைப்பைச் சேர்ந்தோர் நிச்சயமாக இனவாதிகளாகவே இருப்பர். இதில் பெரிதாக ஆச்சரியப்படத் தேவையில்லை. ஆனால், இந்த விடயத்தில்  இன்றைய முஸ்லிம் அரசியல்வாதிகளில் பலரின் நடவடினக்கைள் அதனை விட மிக மோசமாக, ஹராமாக அமைந்துள்ளன என்பதனை நாட்டின் ஒவ்வாரு முஸ்லிம்மும் உணர வேண்டியதும் இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.
இதேவேளை, தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக எழுந்துள்ள நிலைமைகள் தொடர்பில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்களான ஏ.எச்.எம். பௌஸி, ரவூப் ஹக்கீம், ஏ.எல்.எம். அதாவுல்லாஹ், றிஷாத் பதியுதீன் ஆகியோர் ஒன்றுபட்டுக் குரல் கொடுத்து கருத்துத் தெரிவித்தாகச் செய்திகள் வெளிவந்தன. அங்கு  ஒரு சிங்கள அமைச்சரால் முஸ்லிம்களுக்கு எதிராக கருத்துகள் முன்வைக்கப்பட்ட போது அதற்கெதிராக இந்த நான்கு முஸ்லிம்களும் கிளர்ந்தெழுந்தனர் என்றும் கூறப்படுகிறது. வரவேற்கப்பட வேண்டும். இதன் பிரதிபலிப்புகள் எவ்வாறு அமையப் போகின்றன என்பதனையும் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். ஏனெனில் முஸ்லிம் மக்கள் இன்று முஸ்லிம் அரசியலில் நம்பிக்கையற்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பதே இதற்கான காணரமாகும். எதனையும் அவர்கள் ஸ்திரமாக நம்ப மறுக்கும் ஒரு நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர் என்பதும் உண்மையே.
பொதுபல சேனாவின் ஹலாலும் முஸ்லிம் அரசியலின் ஹராமும்- ஏ.எச்.சித்தீக் காரியப்பர் Reviewed by Admin on February 23, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.