அண்மைய செய்திகள்

recent
-

உதயன் மீதான தாக்குதல் நாட்டில் பாதுகாப்பு இல்லை என்பதை உறுதிப்படுத்தும் மற்றுமொரு அத்தியாயம்: த.தே.கூ.

உதயன் பத்திரிகையின் அலுவலகம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவமானது இலங்கையில் பத்திரிகைச் சுதந்தரம் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளதையும் பத்திரிகையாளர்களுக்கு இந்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்பதையும் உறுதிப்படுத்தும் மற்றுமொரு அத்தியாயம் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


 இன்று அதிகாலை உதயன் பத்திரிகையின் கிளிநொச்சி அலுவலகம் மீது இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது “இன்று புதன்கிழமை அதிகாலை 4.50 மணி அளவில் முகம்மூடி அணிந்த ஆறுபேரும், முடிமூடி அணியாத ஒருவருமான ஏழு பேர் சேர்ந்து திடீரென உதயன் பத்திரிகை அலுவலகத்தில் புகுந்து அதன் முகாமையாளர், உத்தியோகத்தர், ஊழியர்கள் உட்பட்டோரை பொல்லுகளாலும், இருப்புகளாலும் பலமாக தாக்கியதுடன் அலுவலக உபகரணங்களையும், வாகனங்களையும் உடைத்த காட்டுமிராண்டித் தனமான செயலாகும்.

 தற்போதைய அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதும், அவர்களது அலுவலகங்கள், தொழில் நிலையங்கள், ஊடகத்துறைகள் மீதும் மறைமுகமாக தாக்கும் செயற்பாட்டை கொண்டுள்ளது என்பதை இச்செயற்பாடு காட்டியுள்ளது. அரசாங்கத்தின் பூரண பாதுகாப்புக்கு மத்தியில் உள்ள கிளிநொச்சி நகரத்தின் மத்தியில் கரடிபோக்கு சந்தியில் உள்ள உதயன் பத்திரிகை ஊடகத்தின் அலுவலகம் மீது அதிகாலையில் தாக்குதல் மேற்கொண்டிருப்பதை பார்க்கும் போது இத்தாக்குதலுக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டிய அவசியம் உள்ளதை தெளிவாக காட்டி உள்ளது.

 குறிப்பாக இங்கு தாக்குவதற்கு வருகை தந்தவர்கள் முன்பு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் கூட்டத்திற்கு தாக்க வந்தவர்கள் சிங்களம் பேசி வந்தது போன்று ஏழு பேரும் சிங்களம் பேசிக் கொண்டே வந்துள்ளனர். இவர்கள் ஆரம்பத்தில் பத்திரிகை விநியோகத்திற்காக பத்திரிகைகளை கொண்டு செல்ல இருந்த சாரதியை தாக்கிய விட்டு பின் உள்ளே புகுந்து நித்திரையில் இருந்த பத்திரிகை முகாமையாளரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். அங்கு தொழில் புரியும் 25 வயதான இளைஞர் ஒருவரும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

 அதுமட்டுமின்றி அங்கிருந்த கணணிகள், போட்டோ பிரதி இயந்திரங்கள், மோட்டார் வாகனங்கள் மற்றும் ஏனைய வாகனங்கள் என்பவற்றை தாக்கியுள்ளனர். அதன்பின் ஓடி விட்டனர். அதிகாலை வேளைளயில் நடைபெற்ற இத்தாக்குதலால் பாதிக்கப்பட்ட அலுவலக உத்தியோகத்தர் மூவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 தற்போதைய ஆட்சியில் ஊடகங்களுக்கும் சுதந்திரம், பாதுகாப்பு இல்லை என்பதை இந்நடவடிக்கைகள் எடுத்துக் காட்டியுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் என்பவருக்கு இவ்நிறுவனம் சொந்தமானது என்பதனாலேயே இது தாக்கப்பட்டுள்ளது. இந்நாட்டில் தற்போதைய ஆட்சியில் ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்படுவதையே இச்செயற்பாடுகள் எடுத்துக் காட்டுகின்றன.

 எனவே இனியும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஊமையாக இருக்க முடியாது. எமது மக்களின் ஜனநாயக செயற்பாடு ஒடுக்கப்படுவதை ஏற்கமுடியாது. எனவே இதற்கான முடிவையும் எங்கள் தமிழ் மக்களின் பாதுகாப்பையும் சர்வதேசம் உறுதிப்படுத்த அவசரமாக செயற்பட வேண்டிய அவசியம் இந்நாட்டில் ஏற்பட்டுள்ளது. சர்வதேச சமூகத்துக்கு தெரிவிக்கின்றோம். ஜனநாயகம் மற்றும் உள்நாட்டு பிரச்சனை பற்றியும், சர்வதேசத்தின் கவனத்துக்கு கொண்டு வந்து தமிழர் உரிமைகளுக்கு குந்தகம் விளைவிக்க திட்டமிடும் இவ்வரசாங்கம் தற்போது ஊடகங்கள் தாக்கப்படுவதையும் அரசியல் கட்சிகளின் ஒன்றுகூடல் தாக்கப்படுவதையும், எவ்வாறு சர்வதேசத்துக்கு எடுத்துக்கூறி பேய்க்காட்ட முடியும்.

 எனவே அரசாங்கம் இத்தாக்குதல் சார்பாக நடவடிக்கையை மேற்கொண்டு குற்றவாளிகளை வெளிக்கொண்டு சட்டத்தின் முன் நிறுத்துவதுடன் ஜனநாயகத்தை பாதுகாக்க முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுகின்றேன்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உதயன் மீதான தாக்குதல் நாட்டில் பாதுகாப்பு இல்லை என்பதை உறுதிப்படுத்தும் மற்றுமொரு அத்தியாயம்: த.தே.கூ. Reviewed by Admin on April 03, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.