மன்னாரில் காலடி பதித்து 60 வது ஆண்டு வைரவிழாக் காணும் டிலாசால் அருட்சகோதரர்கள்.

கி.பி 17ம் நூற்றாண்டில் கல்விக் கட்டமைப்பில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியவரும் உலக ஆசிரியர்களின் தந்தையாக திகழ்பவருமான புனித யோண் பப்ரிஸ்ற் டிலாசால் அவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றும் டிலாசால் அருட்சகோதரர்கள் மன்னார் மாவட்டத்தில் ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை மாணவர்களின் கல்வியி;ல் ஆற்றிவரும் அரும்பணிகள் அனைவரும் அறிந்ததே.
இச் சகோதரர்கள் மன்னார் மாவட்டத்தில் காலடி பதித்து முதலில் மன் ஃ புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் தமது சேவையினை ஆரம்பித்து பல கல்வி மான்களையும், சமுதாய தலைவர்களையும் உருவாக்கி அப்பாடசாலையினை, மாவட்டத்தின் தேசிய பாடசாலைகளுள்; ஒன்றாக உயர் நிலைக்கு கொண்டுவந்தனர். இச் சகோதரர்களின் அர்ப்பணிப்புள்ள சேவையை கண்ணுற்ற ஏனைய ஊர்களில் உள்ள மக்களும் தமது பிள்ளைகளுக்கும் இவ் அருட்சகோதரர்களின் சேவை கிடைக்க வேண்டும் என ஆயர், பங்குத் தந்தையர்கள், கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக தமது விண்ணப்பங்களை அருட்சகோதரர்களின் முதல்வருக்கு அனுப்பினர்.
இவ்விண்ணப்பங்களுள் சில கருத்தில் எடுக்கப்பட்டு வங்காலை, நானாட்டான், அடம்பன் போன்ற பகுதிகளுக்கும் அருட்சகோதரர்களின் பணி விரிவுபடுத்தப்பட்டன. இப்பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளான புனித ஆனாள் ம.ம.வி, நானாட்டான் ம.வி, அடம்பன் ம.ம.வி, கருங்கண்டல் றோ.க.த.க பாடசாலை, பாப்பாமோட்டை றோ.க.த.க.பாடசாலை, சொர்ணபுரி அ.த.க.பாடசாலை போன்றவற்றில் இச் சகோதரர்கள் பணியாற்றி வருகின்றார்கள்.
அத்துடன் பலரின் வேண்டுகோளுக்கமைய அண்மையில் மன்னாரில் லசாலியன் ஆங்கில மொழி மூலமான பாடசாலையினையும் ஆரம்பித்து நடாத்துவதோடு, முன்பள்ளி பாடசாலைகள், விடுதிச்சாலைகள் போன்றவற்றையும் பராமரித்து வருகின்றனர்.
மன்னார் தீவில் விதைத்த லசாலியன்; வித்தானது ஆலமரமம் போல் ஏனைய இடங்களிலும் கிளை பரப்ப தொடங்கியுள்ளது. இவ்வாறு விருட்சமாக மாறிவரும் இவர்களது சேவை எம்மண்ணிலே 60 ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நேரத்தில் இச்சகோதரர்களுடன் இணைந்து மன்னார் வாழ் மக்களும், இவர்களின் மூலம் பயன் பெற்ற ஏனைய மாவட்ட மக்களும் கடவுளுக்கு நன்றி கூறி யூபிலி விழாவை கொண்டாடி வருகின்றார்கள். டிலாசால் பாடசாலைகளுக்கிடையில் பல பரிமாணங்களில் இதனை முன்னிட்டு பல நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

தொடக்க நிகழ்வுகள் கடந்த ஐப்பசி 13 அன்று பேராலயத்தில் திருப்பலியுடன் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து; சித்திரம், கட்டுரை, பேச்சு, பாடல் போன்ற போட்டிகளுடன், எதிர்வரும் வைகாசி 11 ம் திகதி அன்று இலங்கையில் உள்ள டிலாசால் அருட்சகோதரர்கள் பணியாற்றும் பாடசாலைகளுக்கிடையில் மாபெரும் விளையாட்டுப் போட்டியும் கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டியும் நடைபெறவுள்ளது.
மேலும் டிலாசால் தினமான மே மாதம் 15ம் திகதி புனித டிலாசாலின் திருச்சுருபம் டிலாசால் கல்வி வளாகத்தின் முன்பு ஆசீர்வதிக்கப்பட்டு திரை நீக்கம் செய்யப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து சாவற்கட்டுப் பகுதியில் டிலாசால் வீதியும் திறந்து வைக்கப்படவுள்ளது. இறுதி நாள் யூபிலி நிகழ்வுகள் யூன் 22 அன்று பேராலயத்தில் ஆயர் அவர்களின் தலைமையில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு கலை கலாச்சார நிகழ்வுகளுடன் நிறைவு பெறவுள்ளது.
இந்நிகழ்வில் இலங்கையில் உள்ள அனைத்து அருட்சகோதரர்களும், குருக்கள், துறவிகள் டிலாசால் பாடசாலைகளின் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் போன்றோரும் பங்குபற்றவுள்ளதுடன், பிரதம அதிதிகள், அரச அரசசார்பற்ற உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
கடந்த 60 வருட காலத்தில் இச்சகோதரர்களின் மூலம் எம் சமூகத்தில் உள்நாடுகளிலும், வெளி நாடுகளிலும் பல மட்டங்களிலும் பணியாற்றிவருகின்ற குருக்கள், துறவிகள் , வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், ஆசிரியர்கள், அரச அரசசார்பற்ற திணக்கள தலைவர்கள், ஊழியர்கள் எனப் பலர் உருவாக்கம் பெற்றுள்ளனர். எம்மை ஏற்றிவிட்ட ஏணிகளான இச்சகோதரர்களின் பணியை நாம் வாழ்த்துகின்றோம். இவர்களின் பணி இன்னும் பல கிராமங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகின்றோம்.
இவ் யூபிலி விழாவை நாம் மன மகிழ்வுடன் ஓர் குடும்பமாக கொண்டாடுவோம் இச்சகோதரர்களுக்கு நன்றியுடையவர்களாக என்றும் இருப்போம்.
இவ்விழாவை கொண்டாட இச் சகோதரர்களின் உருவாக்கத்தின் மூலம் மிளிர்ந்து கொண்டிருக்கும் பழைய மாணவர்கள் அனைவரையும் ஒன்றிணையுமாறு அன்புடன் கேட்டு நிற்கின்றோம்.
மன்னாரில் காலடி பதித்து 60 வது ஆண்டு வைரவிழாக் காணும் டிலாசால் அருட்சகோதரர்கள்.
Reviewed by NEWMANNAR
on
May 10, 2013
Rating:

No comments:
Post a Comment