பேச்சுவார்த்தை முயற்சியில் இனியும் நாம் ஏமாறுவதற்கு தயாராக இல்லை: தென்னாபிரிக்கத் தூதுக்குழுவிடம் சம்பந்தன்
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இலங்கை வந்த தென்னாபிரிக்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் இப்ராஹிம் இப்ராஹிம் தலைமையிலான தூதுக்குழுவினர் நேற்று காலை இரண்டாவது தடவையாகவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். இந்தச் சந்திப்பின் போதே கூட்டமைப்பினர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளனர்.
தென்னாபிரிக்க பிரதி வௌிவிவகார அமைச்சர் தலைமையிலான குழுவினர் கடந்த திங்கட்கிழமை தமிழ் தேசியக்கூட்டமைப்பினரை சந்தித்து பேசியிருந்தனர். இதனை அடுத்து அன்றைய தினம் மாலையும் நேற்று முன்தினமும் அரசாங்கத்தரப்பினரை சந்தித்து இக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். வௌிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் , அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, அனுரபிரியதர்ஷன யாப்பா, பிரதி அமைச்சர் பைசல் முஸ்தபா பலரையும் இக்குழுவினர் சந்தித்து பேசியிருந்தனர். இதனையடுத்தே நேற்று காலை மீண்டும் கூட்டமைப்பினருடன் தென்னாபிரிக்கக் குழுவினர் சந்தித்து அரசாங்கத்தரப்பினரின் நிலைப்பாடு குறித்து எடுத்துக்கூறியுள்ளனர்.
இந்தச் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தென்னாபிரிக்காவின் சமாதான முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்க நாம் தயாராகவே உள்ளோம். ஆனால் பேச்சுவார்த்தை என்ற பெயரில் மீண்டும் ஏமாறுவதற்கு நாம் தயாராக இல்லை. நியாயமான நடைமுறைப்படுத்தக்கூடிய அரசியல் தீர்வினை நாம் உதாசீனம் செய்யமாட்டோம். தமிழ் மக்களுக்கு நீதியானதும், நியாயமான தீர்வொன்று அவசியமாகும். தமிழ் மக்களுக்கு விமோசனம் கிடைப்பதென்பது அவசியமாகும். இதற்காக நாம் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளோம் என்று கூறியுள்ளார்.
கூட்டமைப்பினருடனான சந்திப்பை அடுத்து தென்னாபிரிக்கக் குழுவினர் நேற்று மாலை நாடு திரும்பியுள்ளனர். தொடர்ந்தும் இருதரப்பினருடனும் தொடர்புகளைப் பேணுவதென்றும் இந்தியா, அமெரிக்கா உட்பட இலங்கைப்பிரச்சினையில் ஆர்வமுள்ள நாடுகளுடன் தொடர்பினைப் பேணி சமாதான முயற்சிக்கான சூழலை உருவாக்குவது என்றும் தென்னாபிரிக்கக் குழுவினர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேச்சுவார்த்தை முயற்சியில் இனியும் நாம் ஏமாறுவதற்கு தயாராக இல்லை: தென்னாபிரிக்கத் தூதுக்குழுவிடம் சம்பந்தன்
Reviewed by Admin
on
June 27, 2013
Rating:

No comments:
Post a Comment