அண்மைய செய்திகள்

recent
-

வடமாகாண சபை தேர்தல் வெற்றி என்பது விடிவல்ல, அது எமது அரசியல் பாதையில் ஒளிக்கீற்று மட்டுமே! வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினருடனான சந்திப்பில் மாவை.சேனாதிராசா தெரிவிப்பு.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசாவுக்கும், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினருக்குமிடையில் இன்று காலை  இந்திரன்ஸ் விருந்தினர் விடுதியில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.


பிரஜைகள் குழுவை சேர்ந்த கி.தேவராசா தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பில்;, வவுனியா முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழுக்களின் காப்பாளரும், மனித உரிமை ஆர்வலருமான சண் மாஸ்டர், மற்றும் பிரஜைகள் குழுவின் வரையறுக்கப்பட்ட தலைமைக்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

சமகால அரசியல் விடயங்கள் தொடர்பாகவும், தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் தொடர்பாகவும், வடமாகாண சபையில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் தெரிவின்போது அவர்களின் ஆளுமைகள் தொடர்பிலும், தேர்தல் விஞ்ஞாபனத்தில் எதிரொலிக்க வேண்டிய தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பாகவும் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

வடமாகாண சபையில் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை தெரிவு செய்யும் போது, அரசியல் உரிமைகளையும்,  அபிவிருத்தியையும் இரு கண்களாக கருதி பணியாற்றும் ஆளுமைமிக்க மனிதர்களையே வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும் என பிரஜைகள் குழுவினர் அழுத்தமாக வலியுறுத்தினர்.

கட்சிக்காக உழைத்தவர்களுக்கு வாய்ப்பளிக்கும் அதேநேரம் அவர்கள் இன்று இயங்கும் பிற்புலங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டு வேட்பாளர்கள் நியமனம் இடம்பெறும் அதேவேளை கட்சிக்கு வெளியேயும் பல்துறை ஆளுமைமிக்க வல்லுநர்களையும் ஒருங்கிணைத்து, குறிப்பாக தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக தெருவுக்கு வந்து போராடக்கூடிய மனவலிமை கொண்டவர்களை உள்ளடக்கி வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் போது, கூட்டமைப்பு இமாலய வெற்றியை அடைய முடியும், இம்முறை இல்லாவிட்டாலும் இனிவரும் தேர்தல்களில் விண்ணப்பங்கள் கோரப்பட்டு வேட்பாளர்களுக்கான நேர்முகத்தேர்வுடன் வேட்பாளர்களை தெரிவு செய்யும் ஜனநாயக நடைமுறைகளை வகுத்துக்கொள்ள வேண்டும்.

தெரிவு செய்த வேட்பாளர்களின் பொது வாழ்வியல் நடத்தைகள், சமுகத்தில் அவர்களுக்கு உள்ள கௌரவம், அவர்களின் சமுக சேவைத்தன்மை, தமிழ் மக்களின் அரசியல் உரிமை போராட்டத்தில் அவர்களின் பங்கெடுப்பின் காலஅளவு, சேவை மனப்பான்மை பற்றிய கருத்துகள் மற்றும் மதிப்பீடுகளை சிவில் சமுக அமைப்புகளிடம் பெற்றால் அதுவே மிகச்சிறந்த வேட்பாளர் தெரிவாக அமையும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

பிரஜைகள் குழுவினரின் கோரிக்கைகளை ஏற்று பதிலுரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா தனது உரையில், வடமாகாண சபை தேர்தலின் ஆரம்ப செயல்பாடுகள் எனக்கு கற்றுத்தந்த பாடம், தமிழ் மக்கள் என் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதை கணிப்பதற்கான வாய்ப்பாக அமைந்தது எனலாம். உலகமே என்னோடு நிற்பதான உணர்வை அது எனக்குத்தருகிறது. ஆயுத போராட்டத்தில் நாம் தோற்கடிக்கப்பட்டாலும், தேர்தல் எனும் ஜனநாயக போராட்டத்தில் நாம் கடந்து வந்த ஒவ்வொரு தேர்தலிலும் எம் மக்கள் சிறீலங்கா அரசை படுமோசமாக தோற்கடித்திருக்கிறார்கள்.

 இன்று தமக்கான ஒரு சந்தர்ப்பத்தை தருமாறு அரசாங்கம் வாய்ப்பு கேட்பது, மாகாண சபைக்கென வழங்கப்பட்ட அதிகாரங்களிலும் கைவைத்துக்கொண்டு மறுபுறம் நில ஆக்கிரமிப்புகளையும் செய்து கொண்டு, எந்த முகத்தோடு எம் தமிழ் மக்களிடம் இந்த கோரிக்கையை அரசு விடுக்கின்றது. கடந்த கால தேர்தல் வெற்றிகள் மக்கள் அரசியல் தீர்வு விடயங்களில் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகின்றன. அந்த நம்பிக்கையும் தெளிவும் வடமாகாண சபை தேர்தலிலும் வெளிப்பட வேண்டும்.

வடமாகாண சபை தேர்தல் வெற்றி என்பது விடியல் அல்ல, எமது அரசியல் பாதையில் ஒளிக்கீற்று மட்டுமே. நாம் அரசியலில் முழுமையான இலக்கை அடைவதற்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்பதை தமிழர்கள் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும். தேர்தலுக்கு அப்பால் எமது மக்களின் வாழ்வியலை அனைத்து திசைகளிலும் உரிமையுடன் முன்னகர்த்தி செல்வதற்கு நாம் நிறைய உழைக்க வேண்டும்.

நாளுக்கு நாள் எமது மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அநீதிகளை வெற்றி கொள்வதற்காக நாம் ஆற்ற வேண்டிய கடமைகள் நீண்டுகொண்டே செல்கின்றன. நில ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்துதல், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்துதல், விதவைகளின் வாழ்வியல் மேம்பாடு, அவர்களின் பொருளாதார முன்னேற்றங்கள், மறுவாழ்வு, எமக்கே உரித்தான கலாசார மதரீதியான விழுமியங்களை பாதுகாத்தல், வடகிழக்கு இணைப்புக்கான செயல்திட்டங்களை முன்நகர்த்தல், யுத்தத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட பெற்றோரை இழந்த பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு பங்காற்றல், முன்னாள் போராளிகளின் தொழில் முயற்சிகளுக்கு உந்துசக்தியளித்தல், என்று எண்ணற்ற பணிகள் வடமாகாண சபை வெற்றியின் பின்னுள்ள கடமைகளாக இருக்கின்றன.  

தமிழ் மக்களினுடைய அரசியல் அபிலாசைகளையும், சமுக பொருளாதார அபிவிருத்தி நடைமுறைகளையும் உள்ளடக்கி தயாரிக்கப்படும் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களின் உரிமைக்காக அர்ப்பணிப்புடன் குரல் கொடுக்கும் சிவில் சமுகத்தினதும் மாவட்ட பிரஜைகள் குழுக்களினதும் கருத்துகள் ஆலோசனைகள் முழுமையாக உள்ளீர்க்கப்படும்.

இவ்விடயம் தொடர்பாக  கூட்டமைப்பில்     உள்ள  ஏனைய பங்காளிக்கட்சிகளுடனும் நான் கலந்துரையாடவுள்ளேன் என அவர் பிரஜைகள் குழுவினரிடம் தெரிவித்தார்.








வடமாகாண சபை தேர்தல் வெற்றி என்பது விடிவல்ல, அது எமது அரசியல் பாதையில் ஒளிக்கீற்று மட்டுமே! வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினருடனான சந்திப்பில் மாவை.சேனாதிராசா தெரிவிப்பு. Reviewed by Admin on July 17, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.