60 ஆண்டு போராட்டதின் பலன் தனி தெலுங்கானா; வெடித்தது கலவரம்: பஸ், ஆட்டோ ஓடவில்லை
காங்கிரஸ் காரிய கமிட்டியும் நேற்று மாலை கூடி, தெலுங்கானாவுக்கு ஒப்புதல் அளித்தது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று நடக்கும் மத்திய அமைச்சரவை கூட்டத்திலும் இதற்கு ஒப்புதல் பெறப்படுகிறது. தனி தெலுங்கானா மாநிலம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் வெற்றி கொண்டாட்டம் நடத்தினர்.
இதற்கிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க ஆந்திரா முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தெலுங்கானா மாநிலத்துக்கு காங்கிரஸ் காரிய கமிட்டி ஒப்புதல் அளித்ததை கண்டித்து கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளில் இன்று பந்த் நடத்த ஒருங்கிணைப்பு கூட்டு குழு மற்றும் மாணவர் சங்கத்தினர் அழைப்பு விடுத்தனர்.
அதன்படி, நேற்றிரவு முதலே கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டது. பஸ், ஆட்டோகள் ஓடவில்லை. சித்தூரில் எம்எல்ஏ சி.கே.பாபு தலைமையில் நள்ளிரவு வரை காந்தி சிலை அருகே மறியல் போராட்டம் நடந்தது. நெல்லூரில் மட்டும் 48 மணி நேர பந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அறிவிக்கப்பட்டபடி, ஒருங்கிணைந்த ஆந்திரா பகுதிகளில் இன்று பந்த் நடந்தது. அதிகாலை முதல் அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. ஆட்டோ, லாரி, வேன் உள்ளிட்ட எந்த வாகனங்களும் ஓடவில்லை.
வணிக வளாகம், கடைகள், அரசு மற்றும் தனியார் அலுவலகம், வங்கிகள், ஏடிஎம் மையங்கள், சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. திருப்பதியில் இருந்து திருமலைக்கு மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் அரசு பஸ்கள் இயக்கப்பட்டது. ரயில்கள் வழக்கம்போல் ஓடின. இதனால் ரயில்களில் கூட்டம் அலைமோதியது. மாணவர் அமைப்பினரும் ராயலசீமா, கடலோர ஆந்திரா ஒருங்கிணைப்பு கூட்டு குழுவினரும் பல இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பதியில் தெலுங்கு தாய் சிலைக்கு பாலாபிஷேகம் செய்தனர். இதேபோல் நெல்லூரில் உள்ள பொட்டி ஸ்ரீராமுலு சிலைக்கும் பாலாபிஷேகம் செய்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
பந்த்தையொட்டி கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளில் 25 துணை ராணுவப்படை குவிக்கப்பட்டுள்ளது. மேலும் 15 கம்பெனி துணை ராணுவமும் கூடுதலாக வரவழைக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம், விஜயவாடா, குண்டூர், பிரகாசம், கிழக்கு, மேற்கு கோதாவரி, நெல்லூர், கடப்பா, அனந்தப்பூர், திருப்பதி ஆகிய முக்கிய நகரங்களில் சுமார் 8 ஆயிரம் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
60 ஆண்டு போராட்டதின் பலன் தனி தெலுங்கானா; வெடித்தது கலவரம்: பஸ், ஆட்டோ ஓடவில்லை
Reviewed by Admin
on
July 31, 2013
Rating:

No comments:
Post a Comment