காணி அபகரிப்பில் வன இலாகா அதிகாரிகள் ஈடுபடுகின்றனர்: சிவசக்தி ஆனந்தன் எம்.பி
வன்னிப்பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் காணி அபகரிப்பு தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
'படையினருக்கான காணி அபகரிப்பு, திட்டமிட்ட குடியேற்றம் என்பவற்றுக்கு மேலாக வன இலாகாவுக்குச் சொந்தமான காணி எனக் கூறப்பட்டு பெருமளவு காணி பொதுமக்களிடமிருந்து அபகரிக்கப்படுகின்றது.
வன்னியில் பல பகுதிகளிலும் வன இலாகாவுக்குச் சொந்தமான காணிகள் அளக்கப்பட்டு அவற்றுக்கான எல்லைகளைப்போடும் நடவடிக்கைகள் வன இலாகா அதிகாரிகளால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதன்போது இப்பகுதியில் பல தலைமுறைகளாக வாழ்ந்துவரும் மக்களுடைய காணிகளும் வன இலாகாவுக்குச் சொந்தமான காணிகள் எனக் கூறப்பட்டு அபகரிக்கப்படுகின்றது.
இவ்வான முறைப்பாடுகள் தொடர்பில் எனக்கு கிடைக்கப்பறெ;றதன் அடிப்படையில் வன இலாகா அதிகாரிகளுடன் தான் தொடர்புகொண்டு கேட்டபோது, குறிப்பிட்ட காணி உரிமையாளர்கள் அவை தம்முடையவை என்பதை நிரூபிக்கும் வகையிலான ஆதாரங்களைக் கொண்டுவர வேண்டும் எனப் பதிலளிக்கப்பட்டுகின்றது.
ஆனால், கடந்த 30 வருடகாலமாக இடம்பெற்ற போரினால் அனைத்தையும் இழந்து இடம்பெயர்ந்த மக்களின் காணி உறுதிகள் காணாமல் போய்விட்டதன் அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராகவில்லை.
நீண்டகாலமாக புதிதாக காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கைகள் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படாததோடு, இடம்பெயர்ந்து இந்தியாவில் அகதிகளாக வாழ்வோரது காணிகளும் இவ்வகையில் அடங்குகின்றது.
இந்த நிலைமைகளைப் பயன்படுத்திக்கொண்டு அவர்களுடைய காணிகளை சட்டரீதியாக அபகரிப்பதை நோக்கமாகக் கொண்டே அரசாங்கம் செயற்படுவதாகத் தோன்றுகின்றது.
இராணுவ ஆக்கிரமிப்பு, சிங்கள - முஸ்லிம் குடியேற்றங்கள் என்பவற்றுக்கு மேலாக தமிழர்களுடைய காணிகளை அபகரிப்பதற்காக அரசாங்கம் வகுத்துள்ள ஒரு உபாயமாகவே இதனைக் கருதவேண்டியுள்ளது.
அண்மையில் வேலங்குளம், பூவரசங்குளம், உசன் புளியங்குளம் போன்ற பல இடங்களில் இவ்வாறு மக்களுடைய காணிகள் பெருமளவுக்கு அபகரிக்கப்பட்டுள்ளன. வன இலாகா அதிகாரிகள் இராணுவத்தினருடன் வந்தே இந்தக் காணிகளை அபகரிக்கின்றார்கள்.
இப்பகுதிகளில் நான்கு ஐந்து தலைமுறைகளாக இம்மக்கள் வாழ்ந்து வந்திருக்கின்றார்கள். போரால் பாதிக்கப்பட்டு அனைத்தையும் இழந்துள்ள மக்களின் ஒரே சொத்தாகவுள்ள அவர்களுடைய காணிகளையும் பிடுங்கிக்கொள்வதென்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். இவ்விடயத்தில் அரசாங்கம் தடுத்து நிறுத்த முன்வரவேண்டும் எனவும் தெரிவித்தார்.
காணி அபகரிப்பில் வன இலாகா அதிகாரிகள் ஈடுபடுகின்றனர்: சிவசக்தி ஆனந்தன் எம்.பி
Reviewed by Admin
on
July 01, 2013
Rating:

No comments:
Post a Comment