மிகவும் அபிவிருத்தி அடைந்த மாவட்டமாக வவுனியாவை மாற்ற நடவடிக்கை: தினேஸ்
வவுனியா மாவட்டத்தை மிகவும் அபிவிருத்தி அடைந்த மாவட்டமாக மாற்றுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார்.
வவுனியா பேராற்றை மறித்து வவுனியா நகருக்கான குடிநீர்த்திட்டத்தை அமைக்கும் பணியில் பாதிப்படைந்துள்ள 15 விவசாயிகளுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை நஷ்டஈடு வழங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
'வவுனியா மாவட்டத்தில் குடிநீர்த்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டபோது, அங்கு விவசாய நிலத்தைக் கொண்டிருந்த மற்றும் அங்கு குடியிருந்த மக்களின் ஒத்துழைப்பு எமக்கு அதிகமாக தேவைப்பட்டது.
மஹிந்த சிந்தனையின் ஓர் அம்சமாக இந்தக் குடிநீர்த்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் அந்த இடத்தில் இந்தமுறை பயிர்ச்செய்கையை செய்து இலாபத்தை ஈட்டலாம் என எண்ணிக்கொண்டிருந்த அந்த மக்களுக்கு நஷ்டஈட்டை வழங்கி வைக்கும் இந்தச் சந்தர்ப்பத்தை நான் முக்கியமானதாக கருதுகின்றேன்.
இந்த அபிவிருத்திப் பணியின் பலன்கள் இந்த மாவட்டத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் உரியதாக உள்ளது. அந்த வகையில் இந்தத் திட்டத்திற்கு பங்களிப்புச் செய்த மக்கள் போலவே எமது அமைச்சும் மிக வேகமாக இந்தத் திட்டத்தை செய்து முடிப்பதற்கு முன்வருகின்றது என்பதனை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.
இந்த நீர்விநியோகத் திட்டத்தை வெறுமனே ஓர் திட்டத்தை உள்ளடக்கியதாக இல்லாது, குடிநீராகவும் விவசாயத் தேவைக்காகவும் மற்றும் நீரோடு சம்பந்தப்பட்ட தேவைகளுக்காகவும் சுகாதார தரம்மிக்க நீரை பெற்றுக்கொள்வதற்கு எமது அமைச்சு இதனை முன்னெடுக்கின்றது.
இந்த வகையில் ஜனாதிபதியால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களில் வவுனியா மாவட்டத்தில் மிகவும் சிறந்த அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவை மாவட்ட விவசாயிகளுக்கும் உற்பத்தியில் ஆர்வமும் ஆசையும் காட்டும் விவசாயிகளுக்கும் பெருவாரியான வளங்களை வழங்குவதற்கும் சேவைகளை வழங்கவும் இலகுவாகவுள்ளது' என்றார்.
மிகவும் அபிவிருத்தி அடைந்த மாவட்டமாக வவுனியாவை மாற்ற நடவடிக்கை: தினேஸ்
Reviewed by Admin
on
July 17, 2013
Rating:
Reviewed by Admin
on
July 17, 2013
Rating:


No comments:
Post a Comment