பதவிகளுக்காக முஸ்லிம் தலைமைகள் தனது இனத்தையே அரசாங்கத்திடம் அடகு வைத்துள்ளனர்!- பிரசன்னா இந்திரகுமார்
கொழும்பு கிரான்ட்பாஸ் பள்ளிவாசல் மீதான தாக்குதல் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்!
கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ், முஸ்லிம் சிறுபான்மையின மக்களுக்கு இடையே வன்முறைகளை தோற்றுவித்து பிரித்தாளும் தந்திரங்களை கையாண்ட அரசாங்கம். விடுதலைப் புலிகளின் அழிவுக்குப் பின்னர் தற்போது முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதலை வெளிப்படையாகவே ஆரம்பித்துள்ளது என்பதையே கொழும்பு கிரான்ட்பாஸ் பள்ளிவாசல் மீதான தாக்குதல் வெளிப்படுத்தியுள்ளது.
முஸ்லிம் மக்கள் தமிழர்களின் போராட்டத்தை ஆதரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படாததன் விளைவே இன்று இலங்கையில் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட இனமாக முஸ்லிம் இனமக்கள் வாழவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஏனெனில் அன்று எவ்வாறு தமிழ் மக்கள் மீது வன்முறை திணிக்கப்பட்டதோ அதேபோன்று தான் இன்று முஸ்லீம் மக்கள் மீது திட்டமிட்டு வன்முறைகள் திணிக்கப்படுகின்றது.
தம்புள்ளை பள்ளிவாசல் மீதான தாக்குதல் தொடங்கி இன்று கொழும்பு கிரான்ட்பாஸ் பள்ளிவாசல் மீதான தாக்குதல் வரைக்கும் முஸ்லிம் கட்சிகள் உட்பட அனைத்து முஸ்லிம் தலைமைகளும் கையாலாகாதவர்களாகவே உள்ளனர்.
ஏனெனில் முஸ்லிம் தலைமைகள் அனைத்தும் பதவிகளுக்காகவும், சலுகைகளுக்காகவும் முஸ்லிம் இனத்தின் தனித்துவத்தையும், பாதுகாப்பையும் அரசாங்கத்திடம் அடகு வைத்திருக்கின்றார்கள்.
எனவே என்னதான் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு வெளிப்படையாக தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டாலும் முஸ்லிம் தலைமைகள் பதவிகளை துறப்பதற்கோ, அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதற்கோ மனமின்றி மௌனம் சாதித்து வருகின்றனர்.
எங்களை பொறுத்தவரை பாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம் சிறுபான்மையின மக்கள் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டிய காலம் மீண்டுமொருமுறை ஏற்பட்டுள்ளது. இதனை முஸ்லிம் தலைமைகள் புரிந்து கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதற்கு முன்வரவேண்டும்.
அதை விடுத்து முஸ்லிம் தலைமைகள் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்தை நம்பிச் சென்று மீண்டுமொறு வரலாற்றுத் தவறை செய்வார்களானால் முஸ்லிம்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த முடியாத துர்ப்பாக்கிய நிலை மீண்டும் முஸ்லிம் தலைமைகளுக்கு ஏற்படும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என மேலும் தெரிவித்தார்.
பதவிகளுக்காக முஸ்லிம் தலைமைகள் தனது இனத்தையே அரசாங்கத்திடம் அடகு வைத்துள்ளனர்!- பிரசன்னா இந்திரகுமார்
Reviewed by Admin
on
August 12, 2013
Rating:

No comments:
Post a Comment