சொந்தக் கட்சியின் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட திராணியற்று வெற்றிலைச் சின்னத்தில் சங்கமித்திருக்கும் அமைச்சர்கள் அரசாங்கம் கீறிய கோட்டை தாண்ட முடியாது உள்ளனர் -மன்னாரில் ரவூப் ஹக்கீம்.
அரசாங்கத்தின் எடுபிடியாகவோ, எடுப்பார் கைப் பிள்ளையாகவோ ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருந்து எவரது தாளத்திற்கும் ஏற்ப காவடி ஆட முடியாது எனக் குறிப்பிட்ட அக் கட்சியின் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம், தமது சொந்தக் கட்சியின் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட திராணியற்று வெற்றிலைச் சின்னத்தில் சங்கமித்திருக்கும் அமைச்சர்கள் அரசாங்கம் கீறிய கோட்டை தாண்ட முடியாதிருப்பதாகவும் கூறினார்.
வட மாகாண சபை தேர்தலை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் எருக்கலம்பிட்டியில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாபெரும் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
சூறாவளி தேர்தல் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டு மன்னார் மாவட்டத்தில் அமைச்சர் ஹக்கீம் தமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள் உடன் வியாழன், வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் பல பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அமைச்சர் ஹக்கீம் மன்னார் மூர் வீதி, அடம்பன், சாந்திபுரம், சொர்ணபுரி, பெரியமடு, காக்கையன்குளம், புதுக்குடியிருப்பு, எருக்கலம்பிட்டி பண்டாரவெளி, கூலாங்குளம், ரசூல் புதுவெளி, உட்பட பல கிராமங்களில் தேர்தல் கூட்டங்களில் உரையாற்றினார்.
அமைச்சர் ஹக்கீம் உரையாற்றும் போது மேலும் தெரிவித்தவையாவன,
வடக்கில் அரசாங்கம் கோடிக்கணக்கான பணத்தைச் செலவிட்டு பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்த போதிலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமது சுய கௌரவம், சுய நிர்ணயம் என்பவற்றைப் பொறுத்தவரை விடாப்பிடியாக தமது கொள்கையில் உறுதியாக உள்ளனர். சில முஸ்லிம் கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் சூடு சொரணையற்றவர்களாக சமூகத்தைப் பற்றிச் சிந்திக்காது தமது சொந்த அரசியல் இலாபத்திற்காக எல்லாவிதமான விட்டுக்கொடுப்புகளையும் செய்து விடுகின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்துவதோ, அரசாங்கத்தை பலவீனப்படுத்துவதோ எமது நோக்கமல்ல. எங்களது கட்சியை பாதுகாத்துக் கொள்வதற்காகவே நாங்கள் மரச் சின்னத்தில் தனித்துப் போட்டியிடுகின்றோம். யாரையும் பலப்படுத்தவோ, பலவீனப்படுத்தவோ எமக்கு அவசியமல்ல. எருக்கலம்பிட்டி மக்கள், மன்னார் மாவட்டத்தின் ஏனைய கிராமங்களைச் சேர்ந்த மக்களைப் போல, அரசாங்கத்திலிருக்கும் போது எங்களை ஆதரிப்பது போன்று நாம் எதிர்க் கட்சியிலிருந்த போதும் ஆதரவு வழங்கினீர்கள்.
சமூகங்களுக்கிடையிலான நிரந்தரப் பகையுணர்வை வளர்க்க வேண்டுமென சில அரசியல் கட்சிகள் நினைக்கின்றன. இந்த தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டுமென மேற்கொண்ட முடிவினால் அவை நிலைத் தடுமாறிப் போயுள்ளன.
வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை காரணமாக வைத்து யுத்தம் நடைபெற்ற காலப் பகுதியில் தமிழ், முஸ்லிம் உறவில் விரிசல்கள் ஏற்பட்டன. யுத்தம் முடிவடைந்துள்ள சூழ்நிலையிலும் இரு சிறுபான்தைச் சமூகங்களையும் பிரித்து வைப்பதற்கு சில சக்திகள் எத்தனிக்கின்றன. அதற்காக நாங்கள் வேதனைப்படுகின்றோம்.
சிறுபான்மைச் சமூகங்களில் மட்டுமல்ல, பெரும்பான்மை சிங்கள சமூகத்திலும் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். வெலிவேரிய சம்பவம் அதற்கு ஓர் உதாரணமாகும்.
இனங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஏற்பட வேண்டும். சகல சமூகத்தவரும் சக வாழ்வு வாழ்ந்து தமது நியாயபூர்வமான உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். அதற்கான காலம் கனிந்து வருகின்றது. இன ஐக்கியத்திற்காக எந்தவிதமான தியாகத்தையும் செய்வதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தயாராக இருக்கின்றது என்றார்.
இக் கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களான முத்தலீப் பாவா பாரூக், எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம், மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம். தவம், ஏ.எம். ஜெமீல், ஆர்.எம். அன்வர், கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவர் ஏ.எல்.அப்துல் மஜீத், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் முபீன், முதன்மை வேட்பாளர் எச். எம். ரயீஸ் உட்பட ஏனைய வேட்பாளர்களும் கட்சி முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.
டாக்டர். ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
சொந்தக் கட்சியின் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட திராணியற்று வெற்றிலைச் சின்னத்தில் சங்கமித்திருக்கும் அமைச்சர்கள் அரசாங்கம் கீறிய கோட்டை தாண்ட முடியாது உள்ளனர் -மன்னாரில் ரவூப் ஹக்கீம்.
Reviewed by Admin
on
September 08, 2013
Rating:

No comments:
Post a Comment