மன்னாரில் பல்வேறு சுமைகளையும் துன்பங்களையும் மனதில் சுமந்து வாழும் வயோதிபர்களை மகிழ்விக்க முன்னெடுக்கப்பட்ட ஒளி விழா
மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஏற்பாடு செய்த ஒளி விழா நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை (22) மாலை மன்னார் பட்டி தோட்டத்தில் அமைந்துள்ள வயோதிபர் இல்லத்தில் இடம்பெற்றது.
மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஒஸ்மன் டெனி தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ கலந்து கொண்டார்.
-ஓய்வு நிலை ஆயர் தலைமையில் குறித்த வயோதிபர் இல்லத்தில் விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து ஒளி விழா நிகழ்வுகள் இடம் பெற்றது.மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அலுவலகர்கள் இணைந்து ஒளி விழா நிகழ்வை முன்னெடுத்தனர்.குறித்த வயோதிபர் இல்லத்தில் உள்ள வயோதிபர்களை மகிழ்விக்கும் வகையில் கரோல் பாடல்களும் இசைக்கப்பட்டது.
இதன் போது குறித்த வயோதிபர் இல்லத்தில் உள்ள வயோதிபர்கள் ஆடல்,பாடல்களில் ஈடுபட்டனர்.இதனை தொடர்ந்து வயோதிபர்களுக்கு ஓய்வு நிலை ஆயர் மற்றும் எழுத்தூர் பங்குத்தந்தை லோரன்ஸ் அடிகளார் ஆகியோர் இணைந்து அன்பளிப்பு பொருட்களையும் வழங்கி வைத்தனர்.
நாடு பூராகவும் அண்மையில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மக்கள் மிகவும் பாதிப்பு அடைந்துள்ள நிலையில் இவ்வருடம் மன்னார் மறைமாவட்ட பங்குகளில் ஒளி விழாவை நடத்தாது அதற்கான செலவுகளை பாதிப்புக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு பகிர்ந்து அளிக்குமாறு மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை அறிவுறுத்தி உள்ளார்.
இந்த நிலையில் பல்வேறு சுமைகளையும் துன்பங்களையும் மனதில் சுமந்த நிலையில் குறித்த வயோதிபர் இல்லத்தில் வசித்து வருகின்ற வயோதிபர்களை மகிழ்விக்கும் வகையில் மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை குறித்த ஒளி விழா நிகழ்வை முன்னெடுத்தமை சிறப்புக்குறிய விடயமாகும்.
Reviewed by Vijithan
on
December 22, 2025
Rating:


No comments:
Post a Comment