முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் பொதுநோக்கு மண்டபம் அமைக்க காவல்துறை தடை!
முல்லைத்தீவு–புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் பொதுநோக்கு மண்டபம் அமைக்க காவல்துறையினர் தடைவிதித்துள்ளதுடன் கிராம அபிவிருத்திச் சங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் பொதுநோக்கு மண்டபம் அமைப்பதற்கென பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட காணியில் காவல்துறையினர் உட்புகுந்து அடாவடித்தனங்களில் ஈடுபட்டுள்ளதுடன் பொதுமண்டபம் அமைக்கும் பணிகளையும் தடுத்து நிறுத்தி கிராம அபிவிருத்திச் சங்க நிர்வாகத்தினரையும் அச்சுறுத்தியுள்ளதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவின் கீழுள்ள தேவிபுரம் கிராம அலுவலர் பிரிவில் மக்கள் மீள்குடியேறியுள்ள நிலையில் குறித்த கிராமத்தின் உட்கட்டுமான வேலைகள் பல்வேறு அரசசார்பற்ற நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் தேவிபுரம் கிராமத்தில் யு.என்.கபிராட் நிறுவனத்தினால் சுமார் இருபத்தி ஐந்து லட்சம் ரூபா செலவில் பொதுநோக்கு மண்டபம் ஒன்று அமைப்பதற்கான நிதி கிடைக்கப் பெற்றுள்ள நிலையில் அதற்கான காணியினை கிராம அபிவிருத்திச் சங்க நிர்வாகம் பிரதேச செயலகத்திடம் கோரியிருந்தது.
கடந்த 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிரதேச செயலர் அபிவிருத்திச் சங்கத்திற்கு அனுப்பியிருந்த கடிதத்தில் குறித்த காணியில் பொதுநோக்கு மண்டபம் அமைப்பதற்கான அனுமதியினை வழங்கியுள்ளார்.இதனையடுத்து கடந்த 30ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு பொதுமண்டபத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இதனையறிந்து அன்றிரவு அக்காணிக்குள் நுழைந்த காவல்துறையினர் அக்காணிக்குள் இருந்த நிகழ்வுக்குப் போடப்பட்டிருந்த தகரக் கொட்டகை மற்றும் கட்டடப் பொருட்களை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்துக்கு ஏற்றிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதி கிராம அபிவிருத்திச் சங்க நிர்வாகத்தினரையும் அச்சுறுத்தி குறித்த காணிக்குள் அபிவிருத்திகள் மேற்கொண்டால் கைது செய்து அடைக்கப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர் என கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் தெரிவித்துள்ளார்கள்.
முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் பொதுநோக்கு மண்டபம் அமைக்க காவல்துறை தடை!
Reviewed by Admin
on
October 07, 2013
Rating:

No comments:
Post a Comment