வடக்கு மாகாண சபையின் உத்தியோகபூர்வ வாகனங்களுக்கு மும்மொழிக் கொள்கை தேவை இல்லையா?
வடக்கு மாகாண சபையில் மும்மொழிக் கொள்கை திறம்பட நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் திருமதி ஆர் . விஜயலக்சுமி தெரிவித்துள்ள நிலையில் , வடக்கு மாகாண சபையின் உத்தியோகபூர்வ வாகனங்களில் தனிச் சிங்களத்தில் பெயர்ப் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன .
யாழ் . " ரில்கோ ' விடுதியில் வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வுக்கு வந்த வடமாகாண சபையின் வாகனங்களில் கூட சிங்களத்தில் மட்டும் பெயர்ப்பலகைகள் வைக்கப்பட்டிருந்தன .
வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கான அறிமுகச் செயலமர்வு யாழ் . ரில்கோ விடுதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது .
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி , முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் , மாகாண அமைச்சர்கள் , மாகாண சபையின் ஆளுங்கட்சி , எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் .
அத்துடன் உள்ளூராட்சி , மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் ரணவக்கவும் இதில் கலந்துகொண்டார் .
இந்த நிகழ்வில் வரவேற்புரை நிகழ்த்திய பிரதம செயலாளர் , திருமதி ஆர் . விஜயலக்சுமி , வடக்கு மாகாண சபையால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் விலாவாரியாக எடுத்துக் கூறினார் .
இதன்போது மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் அவர் தெரிவித்தார் . வடக்கு மாகாண சபையின் திணைக்களங்கள் எல்லாவற்றிலும் மும்மொழியிலான பெயர்ப்பலகை வைக்கப்பட்டிருப்பதுடன் , சகல இடங்களிலும் மும்மொழி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தனது உரையில் கூறினார் .
ஆயினும் இந்தச் செயலமர்வுக்கு வந்திருந்த வடக்கு மாகாண சபை அதிகாரிகளின் வாகனங்களில் தனிச் சிங்களத்தில் பெயர்ப்பலகைகள் வைக்கப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது .
இதுதானா மும்மொழிக் கொள்கையின் நடைமுறைப்படுத்தல் என அங்கு வந்தவர்கள் பேசிக் கொண்டனர் .
வடக்கு மாகாண சபையின் உத்தியோகபூர்வ வாகனங்களுக்கு மும்மொழிக் கொள்கை தேவை இல்லையா?
Reviewed by Admin
on
October 26, 2013
Rating:

No comments:
Post a Comment