ஒவ்வொரு அமைச்சர்களும் ஒரு துறைசார் சிந்தனைக் குழாமை உருவாக்குவது காலத்தில் கட்டாயம்: பேராசிரியர் இரா.சிவச்சந்திரன்
மாகாண சபை முதன் முதலாக வடக்கில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தமிழ் மக்களுக்கென அபிவிருத்திக்கான ஓர் நிறுவனத்தினை எமக்கு அளித்துள்ளது. இம் முறைமையில் எமக்கான அபிவிருத்தியை நாமே தீர்மானிக்கக் கூடிய அபிவிருத்தியை வழி வகை ஒன்றை நாம் பெற்றிருக்கின்றோம்.
இதில், அதிகாரங்கள் தொடர்பில் குறை நிறைகள் இருக்கலாம். ஆனாலும் இச் சந்தர்ப்பத்தினை எமது மக்களின் அபிவிருத்திக்குப் பயன்படுத்த முடியும் என்பதே எமது வாதம்.
தமிழர்கள் மத்தியில் பொதுவாக அரசியல் உரிமையின் பின்னர் தான் அபிவிருத்தி என்ற கருத்துருவாக்கம் புரையோடிப்போயுள்ளது. இதனை நாம் எதிர்வருங் காலத்திலாவது மாற்றங்களுக்கு உள்ளாக்கி பயணிக்க வேண்டியுள்ளது.
அதாவது, அரசியல் உரிமையினையும் அபிவிருத்தியையும் ஒரு வண்டிலை இழுக்கும் மாடுகள் போல் சமமான அந்தஸ்தளித்து இழுத்துச் செல்லவேண்டிய கடப்பாடு எமக்குள்ளது. எந்த அரசியலுக்கும், அதன் மக்களின் அபிவிருத்தியும் சுபீட்சமும் இன்றியமையாததாகும்.
இந்த இடத்தில் அபிவிருத்தி என்றால் என்ன என்ற கேள்வியினை நாம் எழுப்பவேண்டியுள்ளது. எம்மைச் சூழவுள்ள பௌதீக வளங்களை மனித வளங்களின் ஊடாகவே நாம் மேம்படுத்த செய்யமுடியும். மனிதன் வளமாக மாறுவதற்கு கல்வி அறிவும் தெழில் நுட்ப அறிவும் கொண்டவனாக இருத்தல் வேண்டும்.
எனவே தான் அறிவை மையமாகக் கொண்ட மனிதனை நாம் உருவாக்க வேண்டும். தகவல் தொழில்நுட்ப யுகத்தில் அதனைப் பெற்று அறிவையும் நுட்பத்தினையும் வளர்த்து அறிவுமைய மனித வளத்தினை உருவாக்க வேண்டிய தேவை போரின் பின்பான நிலையில் தமிழர்களுக்கு அவசியமாகவுள்ளது.
அதாவது, தமிழ் இனம் எதிர்கொண்டுள்ள அரசியல் சூழ்நிலைகளிடையே பாதிப்புக்களில் இருந்து மீள்வதற்கும் தென்படைவதற்கும் அவர்கள் காலாகால சொத்தாகக் கொண்டிருந்த அறிவுசார் எழுச்சியொன்று அவசியமாகவுள்ளது என்பது எனது எதிர்பார்க்கையாகும்.
தமிழ் மக்களின் அரசியலிலும் ஏனைய சமூக பொருளாதார விடயங்களிலும் இன்று மிகவும் அவசியப்படும் விடயமாக அறிவினை நான் பார்க்கின்றேன். இந்த அறிவு தனியே கல்வி நிறுவனங்களால் ஏற்படுத்தப்படுவதென நான் அடையாளப்படுத்தவில்லை.
மாறாக அது முறைசார்ந்த கல்வியால் பெற்ற அறிவாகவோ அல்லது முறைசார முறைமைகளினுடாகப் பெற்ற அறிவாகவோ இருக்கலாம். எதுவாக இருந்தாலும் உணர்ச்சிவசப்படுதலுக்கு அப்பாற்பட்டு அறிவு ரீதியாக அணுகவேண்டிய யதார்த்தம் ஒன்று காலத்தின் அவசியமாக உள்ளது.
கடந்த காலத்தில் நம் எதிர்கொண்ட துர்ப்பாக்கிய நிலைமைகள் எம்மை அனேகமாக உணர்ச்சிமைய செயற்பாடுகளுக்குள்ளும் கருத்தாடல்களுக்கும் முடக்கியே வைத்துள்ளது.
இவ்வாறான நிலைமைகளில் இருந்து கொண்டு புதிதாக அமையப் பெற்றுள்ள வட மாகாண சபையினை நாம் எவ்வாறு கையாளப் போகின்றோம் என்பதனை வலியுறுத்துவதற்கும் எதிர்பார்க்கைகளை வெளியிடுவதற்குமாகவே நான் மேற்குறிப்பிட்ட விடயங்களை குறிப்பிட்டிருந்தோம்.
சமகால சூழ்நிலைகளிடையே அறிவுசார் நிலைமைகளையும் செயற்திறனையும் ஒருங்கிணைத்து மக்கள் பிரதிநிதிகள் சிந்திக்க வேண்டியுள்ளது. இந்த நிலையில் அமையப் பெற்றுள்ள வட மாகாண சபை பற்றி தமிழ் பேசும் மக்கள் திருப்தியடைய வேண்டிய தருணங்களும் சமிக்ஞைகளும் மாகாண சபைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள மக்கள் பிரதிநிகள் இடத்தில் நான் அதிகமாகக் காண்கின்றேன்.
வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் சட்டத்துறையில் நிபுணத்துவம் பெற்ற முன்னாள் நீதியரசராவார். மேலும், தெரிவு செய்யப்பட்டுள்ள நான்கு அமைச்சர்களும் அவர்களின் அமைச்சுப் பதவிகளுக்கு துறைசார் நிபுணத்துவம் கொண்ட மிகப் பொருத்தமானவர்களாகவே உள்ளனர்.
ஏனைய சபை உறுப்பினர்களும் இளைஞர் மற்றும் பெண்கள் என குறை கூறுவதற்கு இடமின்றியவர்களாகவுள்ளனர். இவ்வாறானதோர் நிலைமையில் வடமாகாண சபையானது நாம் எதிர்பார்க்கும் அறிவுமைய அரசியலையும் உள்வாங்கி தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு ஏற்றால்போலான அவையாக அமையும் என நம்புகின்றோம்.
எனினும் அரச நிர்வாகத்திற்கு வட மாகாண சபை புதிது என்ற காரணத்தினாலும் மக்களின் எதிர்பார்க்கை மிக்க தளத்தில் அது உள்ளமையினாலும் மாகாண சபையை எமது மக்கள் அரசியலின் ஆரம்பப் புள்ளியாகக் கொள்கின்றனர் என்பதனாலும் இச் சபைக்கான பொறுப்புச் சொல்லும் நிலைமைகள் அதிகமாகவே உள்ளன.
இந்த இடத்தில் நாம், சபைக்குத் தெரிவு செய்யப்பட்டவர்கள் எதையாவது பார்த்துக்கொள்ளட்டும் எனவும் தேர்தலில் வாக்களித்ததுடன் நமது பொறுப்பு நீங்கிவிட்டதெனவும் செயற்பட முடியாது.
எனவே சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட பிரநிதிகளுடன் அவர்களுக்கான பின்னூட்டமாக புத்திஜீவிகள், சமூக செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகத்தினர் என சகலருமே இணைந்து வழிநடாத்தவும் பணியாற்றவும் வேண்டிய பொறுப்பு சகலருக்கும் உள்ளது.
இதனிடையே ஊடகங்களுக்கும் பெரும் பொறுப்புள்ளது. தேர்தல் காலத்தில் தமிழ் ஊடகங்கள் தமிழ் மக்களின் வாக்குகள் சிதைவுறாது நடந்துகொள்ளும் பொறுப்பினையும் பிரதானமாகக் கொண்டிருந்தன. ஆனால் இன்று தேர்தல் முடிவடைந்து விட்டது.
ஆகவே மக்கள் பிரநிதிகளை பாரபட்சங்களுக்கு அப்பால் கண்காணிக்கவும் விமர்சிக்கவும் சரியான வழியில் இட்டுச் செல்லவும் ஊடகங்களுக்கு என தார்மிகப் பொறுப்பொன்றுள்ளது. இந்தவகையில் ஊடகங்கள் அறிவுசார் அரசியலுக்கும் மக்கள் பிரதிநிதிகள் அரசியலுக்கும் இடையில் தொடர்பினையும் சமநிலையினையும் ஏற்படுத்தி பயணிக்க வேண்டியுள்ளது.
அப் பணி தேர்தலின் பின்பாக புத்திஜீவிகளுடனான கருத்துக்கணிப்பு போன்றவற்றினை ஆரம்பித்ததன் வாயிலாக ஊடகங்கள் நிறைவேற்றத் தொடங்கியுள்ளன. வட மாகாண சபை உடனடியாக மக்களின் பொருளாதார சமூக அபிவிருத்தி ரீதியான விடயங்களை முன்னெடுக்க வேண்டும்.
அதனூடாக மக்களின் உடனடித் தேவைகள் பூர்த்தி செய்யப்படவேண்டும். மக்கள் எதிர்கொள்ளும் மனிதாபிமானப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் பற்றிச் சிந்தித்துச் சபை செயற்படவேண்டியுள்ளது. அபிவிருத்தியினை நிலைத்து நிற்கும் அபிவிருத்தியாக முன்னெடுத்துச் செல்லதல் வேண்டும்.
மக்களின் அடிப்படைத் தேவைகளைப்பூர்த்தி செய்தல், சமனான வருமானப் பங்கீட்டை ஏற்படுத்துதல், அனைவருக்கும் வேலைவாய்ப்பினை வழங்குதல் என்பவற்றினை விவசாயம் கைத்தொழில் வேலைத் துறைகளுக்குள்ளாகக் கொண்டுசெல்ல வேண்டும்.
அமைச்சரவை என்று வருகையில் விவசாய அமைச்சராக சூழலியலாளர் ஐங்கரநேசன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அவர் தலைமையிலான அமைச்சு, கால்நடை மற்றும் சூழலியல் அபிவிருத்தி ஊடாக யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாணத்தின் விவசாயத்தினையும் வன்னி விவசாயத்தினையும் நிலப்பயன்பாட்டின் அடிப்படையில் பாகுபடுத்தி திட்டங்களை வகுத்துச் செயற்படவேண்டும்.
யாழ் மாவட்டத்தினைப் பொறுத்தளவில் வரையறுக்கப்பட்ட நிலவளம் காணப்படுவதனால் சிறிய நிலப்பரப்புக்குள் செறிவான வர்த்தகப் பயிர்ச்செய்கையே சிறந்தது. அதேவேளை விவசாய உற்பத்திகளை அவ்வாறே சந்தைப்படுத்தாமல் கைத்தொழில் மயப்படுத்தப்பட்ட விவசயம் சார் உற்பத்திகளாக மாற்றி பெரு நன்மைகளை அடைய முடியும்.
வன்னியில் நெற் செய்கை போன்றவற்றிற்கான வசதிகளை மேம்படுத்த வேண்டியுள்ளது. காணி அற்ற கமத்தொழிலாளர்களுக்கு விவசாய குடியேற்றத் திட்டங்களை ஏற்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் பற்றி ஆராயும் பொறுப்பும் இன்றைய நிலையில் முக்கியமானதாகும். கால்நடை மூலமான வருவாய்களை அதிகரிப்பதற்கான வசதி வாய்ப்புக்கள் ஏற்படுத்தவேண்டும்.
உள்ளுர் சுற்றலாத்துறையினை சூழல் நட்பார்ந்த சுற்றுலாத்துறையாக வளர்த்தெடுத்து மக்களின் வருமானத்தினை, அதிலும் ஓர் பகுதியாக நாம் அதிகரிக்கலாம். சுகாதாரத்தினைப் பொறுத்தளவில் அமைச்சராக வைத்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதனை அடிப்படையாகக் கொண்டு சுகாதாரத்தினை ஆரோக்கியமான மனித வளத்தினை பேணுவதற்கும் மேம்படுத்துவதற்குமான திட்டங்கள் தொடர்பில் நாம் கவனம் செலுத்தவேண்டியுள்ளது. கல்வி அமைச்சராக் துறையில் முதுமை வாய்ந்தவர் தெரிவாகியுள்ளார்.
மாகாண சபைகள்; உயர் கல்வி நிறுவனங்களைத் தாபிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும். உள்ளராட்சியை மையமாகக் நிறுவனங்கள் மக்களுக்கு நெருக்கமான சேவைகளை வழங்கும் நிறுவனங்களாக உள்ளன என்ற நிலையில் உள்ளுராட்சி நிறுவன மக்கள் பிரதிநிதிகளுக்கு மாகாணசபை முன்னுதாரணமாக செயற்பட வேண்டியுள்ளதுடன் பயிற்சிச் செயலமர்வுகள் வாயிலாக மக்களுக்கு சிறந்த தராதரமுறைடய சேவையினை பெற்;றுக்கொடுக்க வேண்டியும் உள்ளது.
இவ்வாறான திட்டங்களை உருவாக்குவதற்கு துறைசார்ந்த ஆய்வுகள் அவசியம். வட மாகாணத்தினைப் பொறுத்தளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் எல்லாத்துறைகளிலும் பல ஆய்வுகளை அதாவது பட்டதாரிகள்,முதுமாணி கலாநிதி பட்ட ஆய்வுகளை கொண்டுள்ளது. அவை வெளியிடப்படாமல் துறைகளிலும் நுலகங்களிலும் கிடப்பில் இருக்கின்றன.
இவற்றில் அனேகமானவை அதாவது 80 வீதமானவை வட மாகாணம் சார்ந்ததாக இருக்கின்றன. இதனை நான் எனது கல்வித்துறை அனுபவங்களில் இருந்தும் முன்னாள் அப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடாதிபதி என்ற அனுபவத்தில் இருந்தும் கூறுகின்றோர்.
இவ் ஆய்வுகள் சகலதும் விவசாயம் மருத்துவம் அபிவிருத்தி போன்றவற்றில் சிறந்த ஆராய்ச்சிகளாக உள்ளன. அவற்றினை வேறு அரசாங்கங்கள் பயன்படுத்தப் போவதில்லை. மகா சபையே பயன்படுத்தவதற்கான தேவையும் சந்தர்ப்பமும் உள்ளது.
மேலும் தமிழர் விடயங்களை ஆவணப்படுத்தல் என்பதும் எமக்கு மிகவும் தேவையாகவுள்ளன. சகல துறைசார்ந்த விடயங்களிலும் வடமாகாண சபை ஆய்வுக்கான ஓர் நிலையத்தினையும் தரவு சேகரிப்பினையும் அவை பற்றிய பகுப்பாய்வு, தகவல் மையமாக ஓர் பதிவுசெய்யப்பட்ட நிறுவனத்தினைக் கொண்டு இயங்க வேண்டும்.
ஒவ்வொரு அமைச்சர்களும் ஒரு சிந்தனைக் குழாமை ஆலோசகர்களாக வைத்துக்கொள்ளவேண்டும். ஒவ்வொரு விமர்சன ரீதியான விடயங்களையும் கலந்துரையாடி முடிவுக்கு வரும் கலாசாரத்தினை மாகாண சபைக்கு உள்ளேயும் வெளியேயும் நாம் ஏற்படுத்தவேண்டும்.
இலங்கையில் உள்ள ஏனைய மாகாணங்களைக் காட்டிலும் வட மாகாணம் ஓர் முன்னுதாரணமாக இயங்கும் என்ற நம்பிக்கை சகலரிடமும் உள்ளது.
இந் நிலையில் சகல தரப்புக்களும் இம் மாகாண சபையில் உச்சபட்ட பயன்மிக்கதாக வழிமுறைகளையே கையாளவேண்டும். மக்களின் ஆணையினை ஏற்று சிறந்த ஆட்சியை வடமாகாண சபை செய்ய வேண்டும் என்பதே எமது அபிலாசை.
ஒவ்வொரு அமைச்சர்களும் ஒரு துறைசார் சிந்தனைக் குழாமை உருவாக்குவது காலத்தில் கட்டாயம்: பேராசிரியர் இரா.சிவச்சந்திரன்
Reviewed by Admin
on
October 27, 2013
Rating:

No comments:
Post a Comment