வடக்கில் வீடுகள் இடிப்பு: நிறுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு; சம்பந்தனிடம் லலித் வீரதுங்க தெரிவிப்பு
வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள தமிழ் மக்களின் வீடுகள் இடித்தழிக்கப்பட்டு வருவதை உடன் நிறுத்துமாறு யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரும் இரா. சம்பந்தன் நேற்று மாலை தெரிவித்தார்.
தனக்கும் ஜனாதிபதிக்கும் வியாழனன்று தொலைபேசி ஊடாக நடைபெற்ற பேச்சையடுத்தே ஜனாதிபதி மேற்படி உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது: வலிகாமம் வடக்கில் தமிழ் மக்களின் வீடுகள் கடந்த ஒரு வாரமாக இடித்தழிக்கப்பட்டு வருவது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் நேற்று (நேற்று முன்தினம்) நான் தொலைபேசியூடாக பேச்சு நடத்தினேன்.
உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ள தமிழ் மக்களின் பெரும்பாலான காணிகளையும் வீடுகளையும் இராணுவத்தினர் ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளனர். இதனால் அந்த இடங்களுக்கு சொந்தமான மக்கள் தொடர்ந்தும் அகதி முகாம்களில் வாழவேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. இராணுவத்தின் இந்தச் செயலுக்கு எதிராக மக்கள் உயர்நீதிமன்றில் வழக்குத் தாக்கலும் செய்துள்ளனர். இந்நிலையில் இராணுவம் அங்கு வீடுகளை இடித்தழிக்கின்றது. இந்தச் செயலை ஒருபோதும் ஏற்கமுடியாது. இதைத் தடுத்து நிறுத்தி உரிய தீர்வை காண வேண்டும் என இந்த பேச்சின்போது ஜனாதிபதியிடம் நான் கோரிக்கை விடுத்தேன்.
இந்த உரையாடலையடுத்து, சில நிமிடங்களுக்குப் பின்னர் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தொலைபேசி ஊடாக என்னைத் தொடர்புகொண்டார். "வீடுகள் இடிக்கப்படுவதாக நீங்கள் கூறிய விடயம் குறித்து ஜனாதிபதி யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியுடன் கலந்துரையாடினார்.
குறித்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறும் பணிப்புரை விடுத்துள்ளார். இதன் பின்னரும் வீடுகள் இடிக்கப்பட்டால் ஜனாதிபதியிடம் நீங்கள் முறையிடலாம்'' என்று லலித் வீரதுங்க என்னிடம் தெரிவித்தார். இதேவேளை, ஜனாதிபதியை நான் நேரில் சந்தித்து பல விடயங்கள் சம்பந்தமாக பேச்சு நடத்த வேண்டியுள்ளது. எனினும், வியாழனன்று நடைபெற்ற தொலைபேசி உரையாடலின்போது அதற்கான நேரத்தை நான் கோரவில்லை'' என்றும் சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார்.
வடக்கில் வீடுகள் இடிப்பு: நிறுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு; சம்பந்தனிடம் லலித் வீரதுங்க தெரிவிப்பு
Reviewed by Admin
on
November 02, 2013
Rating:
Reviewed by Admin
on
November 02, 2013
Rating:


No comments:
Post a Comment