காணாமல் போனோர் தொடர்பில் 2,301 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன - மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு
வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் இருந்தும் காணாமல் போனோர் தொடர்பில் 2,301 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு தெரிவித்துள்ளது.
காணாமல் போனோர் சம்பந்தமான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு மேற்படி பிரஜைகள் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெளிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் யாழ். மாவட்டத்தில் 904 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 610 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 468 பேரும், வவுனியா மாவட்டத்தில் 181 பேரும், மன்னார் மாவட்டத்தில் 138 பேருமாக 2301 பேர் முறைப்பாடுகைள பதிவு செய்துள்ளனர்.
இதேவேளை எதிர்வரும் 30ஆம் திகதி வரை முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கான திகதியை நீடிப்பு செய்தமைக்காக காணாமல் போனோர் சம்பந்தமான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு நன்றியை தெரிவித்துள்ள மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவானது தாம் தொடர்ந்தும் பதிவுகை மேற்கொண்ட வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளர்.
இதேவேளை இந்நோக்கம் காரணமாக பெருமதிப்புக்குரிய தங்களது ஆணைக்குழு மிகமுக்கிய தேவையாக காணாமல் போனவர்கள் உயிருடன் இருக்கின்றனரா? இல்லையா? என்பதனை ஒவ்வொரு விண்ணப்;பம் சார்பிலும், முதலில் உறுதிப்படுத்தும் பணியை மேற்கொள்வீர்கள் என உளப்பூர்வமாகவும், ஆழமாகவும் நம்புகிறோம்.
இவ்வகையில் ஒருவர் உயிரோடிருந்தால் கீழ்வருவன பற்றி அறிக்கையிடுவது மிகவும் அத்தியவசியமானதாகும் என ஆணைக்குழுவிறகு பரிந்துரை செய்துள்ளதுடன் கீழ்வரும் பரிந்துரைகளையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அவையாவன,
உயிரோடிருந்தால் கீழ்வரும் கேள்விகள் மிக அவசியமாக எழும்.
1) தற்சமயம் அவர் அல்லது அவள் எங்கிருக்கிறார்?
2) உறவினர் அவரை அல்லது அவளை தாமதமின்றி காண முடியுமா?
3) அடுத்த செயற்பாடு என்ன?
உயிரோடு இல்லையெனில் கீழ்வரும் கேள்விகளுக்கான பதில்கள் அவசியம்
1) அவருக்கு அல்லது அவளுக்கு என்ன நடந்தது?
2) எப்படி? எப்போது? யாரால் அது நடந்தது?
3) அடுத்த செயற்பாடு என்ன?
இக்கேள்விகளுக்கான விடைகள் காணப்படாவிட்டால் இவ்விசாரணைக் குழுவின் நோக்கம் கேள்விக்குறியாகும் என்பது வெளிப்படை. எனவே நாங்கள் இக்குழுவின் பணியின் முடிவில் உபயோகமான அடைவுகள் எட்டப்படும் என மனப்பூர்வமாக நம்புகின்றோம்.
எமது ஏனைய அவதானிப்புக்கள்
வெள்ளைவான்களால் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களையிட்டு ஆணைக்குழு விசாரிக்காது என தெரியவருகிறது.
ஆணைக்குழுவின் விசாரணைக்கு உட்படுத்தப்படும் காலப்பகுதி 1990 ஆனி 10க்கும் 2009 வைகாசி 19ற்கும் இடைப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட பிரதேசம் வடக்குகிழக்கு மாகாணங்கள் மட்டுமே எனவும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தெரிகிறது.
யுத்தத்திற்கு பிந்திய காலத்திலும், பல எண்ணிக்கையிலானவர்கள் கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். மேலும் காணாமல் ஆக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சம்பவங்கள் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்காலத்திலும், தெற்கில் நடைபெற்றுள்ளன.
மேதகு ஜனாதிபதி அவர்கள் எதிர்க்கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் இப்பிரச்சினையை ஐக்கிய நாடுகள் சபை வரை எடுத்துச் சென்று அறிக்கையிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இன்னமும் இவர்களைத் தேடிக்கொண்டிருப்பதுடன் இதன் இறுதி முடிவை காணும் பொருட்டு கவலையில் ஆழ்ந்துள்ளார்கள். இவ்விடயமும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும்.
உள்நாட்டு, வெளிநாட்டு மனித உரிமை அமைப்புக்கள் தங்கள் முறைப்பாடுகளை ஆணைக்குழுவிடம் முன்வைப்பதற்கு சாதகமான எவ்வித வாய்ப்புக்களும் இருப்பதற்கான அறிகுறிகள் காணப்படவில்லை. இதனால் ஆணைக்குழுவின் நம்பகத்தன்மை கேள்விக்குறிக்குள்ளாகியுள்ளது.
முறைப்பாட்டுக்காரர்களும், சாட்சிகளதும், தனிப்பட்ட பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவில்லை. எஸ்.எல்.ஆர்.சீ. ஆணைக்குழுவுக்கு சாட்சியமளித்தவர்களுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்களையும் ஏனைய துன்பங்களையும் உணர்ந்த அதிகமானோர் முறைப்பாடுகளை சமர்ப்பிக்கவம் சாட்சியமளிக்க முன்வரவும், தயங்குகின்றனர்.
பாதிக்கப்பட்ட அனைத்து மக்களிடமுமிருந்து விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்வதற்கு வசதியான பொருத்தமான பொறிமுறை ஏற்படுத்தப்படவில்லை. இத்தகவல் அனைத்து பாதிக்கப்பட்டவர்களையும், சென்றடையாமையால் கணிசமான விண்ணப்பங்கள் அனுப்பபடாமைக்கான சாத்தியம் அதிகமாகவுள்ளது.
எனவே விளம்பரங்கள் செய்து விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ள சமூக அடிமட்டத்தில் ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுதல் பொருத்தமானது. கிராமசேவையாளர்கள் மூலம் விளம்பரங்கள் மேற்கொள்ளப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு பிரதேச செயலாளர் மூலம் ஆற்றுப்படுத்தப்படும் பொறிமுறை சிபாரிசு செய்யப்படுகிறது என அவர்கள் கையளித்துள்ள அறிக்கையில் தொவித்துள்ளனர்.
காணாமல் போனோர் தொடர்பில் 2,301 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன - மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு
Reviewed by NEWMANNAR
on
November 07, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment