அண்மைய செய்திகள்

recent
-

வவுனியா நகரசபையின் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற மறைந்த நெல்சன் மண்டேலா அவர்களின் மறைவு தொடர்பான கவலை, மற்றும் கருத்துப்பகிர்வு நிகழ்வு

வாழ்வின் அதியுச்ச மகிமை என்றமே வீழ்ச்சி காணாதிருப்பதிலல்ல. மாறாக எம் ஒவ்வொருவரும் வீழ்ச்சியின் பின்னும் மீண்டு எழுவதிலாகும்“  -நெல்சன் மண்டேலா
“அடக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல அடக்கியவர்களும் கூட சிறையிடப்;பட்டவர்கள்தான்” இந்த தத்துவத்தை நன்கு விளங்கியிருந்ததனால் மறைந்த மாமனிதன் நெல்சன் மண்டேலாவினால் கறுப்பு இனத்தை அடக்கி ஆண்ட வெள்ளை இனத்தவரை மனதார மன்னிக்க முடிந்தது. வெற்றியின் மீது பழிவாங்காது அவர்களையும் அரவணைத்து ஆட்சியை நடாத்த முடிந்தது.
மேற்கண்டவாறு அருட் தந்தை செல்வரட்ணம் அடிகளார் மறைந்த நெல்சன் மண்டேலா  அவர்களின்  மறைவு தொடர்பான கவலை, மற்றும் கருத்துப்பகிர்வு நிகழ்வில் கூறியுள்ளார். மேற்படி நிகழ்வானது 14.12.2013 சனிக்கிழமை அன்று காலை 9.30 தொடக்கம் பிற்பகல் 12..30 வரை வவுனியா நகரசபையின் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. நெல்சன் மண்டேலா நினைவு நிகழ்வு ஏற்பாட்டுக்குழுவினர் இக்கூட்டத்தினை ஒழுங்கு செய்திருந்தனர்.
திட்டமிட்டபடி காலை 9.30 மணிக்கு ஆரம்பித்த கவலை மற்றும் கருத்துப்பகிர்வு நிகழ்வில், நிகழ்வு ஏற்பாட்டுக்குழுவின் சார்பில் திரு பொ. ந. சிங்கம் அவர்களால் நிகழ்வின் நோக்கம் பற்றியும் நிகழ்ச்சி நிரல் பற்றியும் தொடக்க உரை முன்வைக்கப்பட்டது. உலக அடிமைத்தனத்தின் விடுதலைக்காக பாடுபட்டு  உழைத்த மாமனிதன் மண்டேலாவிடம் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களை மீட்டுப்பார்த்துக்கொள்வதற்கும், அப்பாடங்களை கற்றுத்தந்த அன்னாரின் பங்களிப்பிற்கு நன்றி செலுத்தவுமே இப்பகிர்வுக்கூட்டம் கூட்டப்பட்டது. ஆனாலும்  உண்மையில் இது நினைவுப்பகிர்வுக்கூட்டம் என்பதைவிட நினைவுப்பதிவுக்கூட்டம் என்பதே சாலவும் பொருந்தும் எனவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
அதனைத்தொடர்ந்து மேடையில் வைக்கப்பட்டிருந்த நெல்சன் மண்டேலாவின் உருவப்படங்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மிக உருக்கமாக ஆரம்பமானது.  திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதியினர் மேடையின் ஒரு பக்கத்தே அமைக்கப்பட்டிருந்த அன்னாரின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்திய அதே வேளை மற்றொரு சாரார் மேடையின் மறு புறத்தில் அன்னாரின் உருவப்படத்திற்கு மெழுகுவர்த்திகளை ஏற்றி தீபாஞ்சலி செலுத்தினர். மண்டபம் முழுவதும் நிறையத்தக்கதாக 600 பேரிற்கும் மேற்பட்டளவில் ஆர்வலர்கள் இவ்வஞ்சலியில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இவர்களுள் ஆன்மீகத்தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், சமூகத்தலைவர்கள், கல்விமான்கள், பொதுமக்கள் மற்றும் அரச, அரச சார்பற்ற நிறுவன அலுவலர்கள் மாணவர்கள் என பலதரப்பட்டவர்களும் காணப்பட்டனர். அதிக அளவில் பெண்கள் கூடிவந்திருந்தமை ஒரு சிறப்பம்சமாக இருந்ததோடு பல பெற்றோர்கள் தமது பிள்ளைகளையும் அழைத்து வந்திருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.

அஞ்சலியைத்தொடர்ந்து திரு பொ. ந சிங்கம் அவர்கள் தனது தலைமையுரையில் நெல்சன் மண்டேலாவிடம் இருந்து உலகம் கற்றுக்கொண்ட பாடங்களை விளக்கமாக எடுத்து கூறியதோடு அடுத்து வரும் 5 பேச்சாளர்களும், 3 கவிஞர்களும் நெல்சன் மண்டேலாவின் ஒவ்வொரு பரிமாணங்களைப்பற்றிய கருத்துக்களை முன்வைப்பார்கள் எனக்கூறினார்.
அந்த வகையில் முதல் நிகழ்வாக கால்முளைத்த தன்னம்பிக்கை என்ற தலைப்பில் கவிதை படைத்த திரு செந்தில் குமரன் மண்டேலாவின் சவாலான வெள்ளை இனத்திற்கும் கறுப்பு இனத்திற்கும் இடையிலான நல்லிணக்கத்தினை எவரஸ்ட்; சிகரத்திற்கும் மரியானா ஆழிக்கும் நேர்கோடு வரையும் ஒருமுயற்சிக்கு ஒப்பிட்டு கவிபாடினார். அதனைத்தொடர்ந்து முதல் உரை ஆற்றிய அருட்தந்தை செல்வரட்ணம் அவர்கள் மண்டேலாவின் அரசியல் வாழ்க்கையின் ஆன்மீக பரிமாணத்தைப்பற்றி சொற்பொழிவாற்றினார். இதில் குறிப்பாக மண்டேலாவின் வாழ்க்கையினையும் தனிமனித அகவிடுதலையினையும் தொடர்புபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதனைத்தொடர்ந்து செல்வி. காயத்திரி அவர்கள் மண்டேலாவின் அரசியல் பரிமாணத்தில் பெண்கள் தொடர்பான தூரதரிசனத்தை தனது உரையில் விரிவாக எடுத்துரைத்தார். அடுத்து திரு. வெ சுப்பிரமணியம் அவர்களால் கவிதை ஒன்று முன்வைக்கப்பட்டது. எதிரியையும் மன்னித்து மதிப்பதே சமூக நல்லிணக்கம் ஏற்பட வழிவகுக்கும் எனவும் அதுவே மண்டேலா உலகுக்கு வழங்கிய சமாதான கீதை எனவும் அவரது கவிதை எடுத்து கூறியது. மூன்றாவதாக  இலங்கையின் சார்பில் தென்னாபிரிக்காவில் பல்வேறு சமாதான அனுபவங்களை கற்றவரும் மண்டேலாவை நேர்முகமாக சந்தித்தவருமாகிய அரசியல் விமர்சகரும் மனிதஉரிமை ஆர்வலருமாகிய திரு. பாலகிருஸ்ணன் அவர்கள் உரையாற்றினார். மண்டேலாவுடன் உரையாடிய அனுபவங்களையும் தென்னாபிரிக்காவில் கண்ட சமாதான மூலோபாயங்களையும் அவரது உரையில் இருந்து தெளிவாக விளங்கிக்கொள்ள முடிந்தது.
இறுதிக்கவிதையாக சமூக ஆர்வலர் பாபு அவர்களின் கவிதை இடம் பெற்றது. மண்டேலாவின் பிறப்பு முதல் இறப்பு வரையான வரலாற்று நிகழ்வுகளை தொட்டுச்சென்ற வரலாற்று கண்ணோட்டமாக அது அமைந்தது. உரைகளின் வரிசையில் நான்காவதாக இடம்பெற்ற சமூக ஆர்வலர் மு. சிவலிங்கம் அவர்களால் நெல்சன் மண்டேலாவின் சமூக வாழ்க்கைப்பண்பின் பரிமாணங்கள் மிக சுருக்கமாக முன்வைக்கப்பட்டன. அதனை தொடர்ந்து அருட்தந்தை பரிமளச்செல்வன் அவர்கள் பேசினார். அவர் தனது உரையில் நெல்சன் மண்டேலாவின் அரசியல் சமூகபொருளாதார வாழ்வில் காணப்பட்ட பலசம்பவங்களை நாம் எமது வாழ்விற்கு எவ்வாறு உதாரணங்களாக எடுத்துக்கொள்ளலாம் என்பதோடு சுருக்க விபரணத்தையும் கோடிட்டு காட்டினார்.
கவலை மற்றும் கருத்துப்பகிர்வு நிகழ்வு திரு. வெ சுப்பிரமணியம் அவர்களின் நன்றி உரையுடன் நிறைவிற்கு வந்தது.
இந்நிகழ்வை ஒட்டி வவுனியா நகரில் பதாதைகள் கட்டப்பட்டிருந்தமையும் 2000 துண்டுப்பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்டு பொது மக்களிடையே விநியோகிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.  

வவுனியா நகரசபையின் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற மறைந்த நெல்சன் மண்டேலா அவர்களின் மறைவு தொடர்பான கவலை, மற்றும் கருத்துப்பகிர்வு நிகழ்வு Reviewed by Author on December 16, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.