அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் ஆயர் உட்பட 204 கிறிஸ்தவ மதகுருமார் ஐ.நாவிற்கு கடிதம்

இலங்கையின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரி மன்னார் ஆயர் வணக்கத்திற்குரிய ராயப்பு ஜோசப் ஆண்டகை உட்பட வடக்கு கிழக்கை சேர்ந்த 205 கிறிஸ்தவ மதகுருமார் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் 25 வது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் ஒரு வலுவான மற்றும் செயற்பாட்டு ரீதியான தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று திகதியிடப்பட்டுள்ள அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் வடக்கு கிழக்கில் திருப்பணியில் ஈடுபட்டுள்ள கிறிஸ்தவ மதகுருமார் இதற்கு முன்னர் மனித உரிமை ஆணைக்குழுவின் 19 மற்றும் 22 வது கூட்டத் தொடரில் இலங்கையின் போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் கோரிக்கை விடுத்திருந்தோம்.

இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நேரடியான மற்றும் கேட்டறிந்த அனுபவங்கள் எமக்குள்ளது. எமது சொந்த அனுவங்களையும் நாம் கண்டறிந்த விடயங்களையும் நாங்கள் ஐ.நா நிபுணர்கள் குழு, ஐ.நா மனித உரிமை ஆணையாளர், நன்கு அறியப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மனித உரிமை அமைப்புகளில் பரிந்துரைத்துள்ளோம்.

நாங்கள் உட்பட பல நாடுகளும், அமைப்புகளும், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்பனவும் இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணைகளை நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரி வந்த போதும் கடந்த 5 வருடங்கள் உள்நாட்டு கட்டமைப்பின் ஊடாக உண்மை மற்றும் நீதியான விசாரணைகள் எதுவும் நடத்தப்படவில்லை.

மறுபுறம் உள்நாட்டு வழிமுறையில் ஈடுபடுமாறு வலியுறுத்தும் நாங்கள் உட்பட ஏனையோர் மிரட்டல்களுக்கும் அச்சுறுத்தல்களும் உள்ளாக்கப்பட்டு வருகின்றோம்.

வரையறுக்கப்பட்ட பரிந்துரைகளை செய்துள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளும் அமுல்படுத்தப்படவில்லை.

குறைந்த பட்சமாக இரண்டு மொழிகளில் தேசிய கீதம் பாடப்பட வேண்டும், இறந்தவர்களுக்கான பொதுவான நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரைகள் கூட இதுவரை அமுல்படுத்தப்படவில்லை.

காணாமல் போதல், பாலியல் துஷ்பிரயோகங்கள், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழான கைதுகள், தடுத்து வைத்தல், சித்திரவதைகள், ஒன்று கூடும் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் தொடர்ந்தும் மீறப்பட்டு வருகின்றன. அத்துடன் மதச் சுதந்திரமும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள், அதன் கொள்கைகளுக்கு சவால் விடுப்பவர்கள், மனித உரிமைகளை ஊக்குவிப்போர் அது சம்பந்தமாக சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்றுவோர் பயங்கரவாத ஆதரவாளர்கள் அல்லது தேசத்துரோகிகள் என முத்திரை குத்தப்படுகின்றனர்.

இவர்கள் அரசாங்க பாதுகாப்பு படையினரின் அச்சுறுத்தல்களுக்கு இடையூறுகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதனை காரணமாக வைத்து எங்களில் சிலரும் இலக்கு வைக்கப்படுகின்றனர் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் ஆயர் உட்பட 204 கிறிஸ்தவ மதகுருமார் ஐ.நாவிற்கு கடிதம் Reviewed by NEWMANNAR on March 03, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.