எமது மதத்தின் பாரம்பரியத்தை அழிக்க முனைபவர்களுக்கு எதிராக நாம் சாத்வீக ரீதியில் போராட வேண்டும். சீ.யோகேஸ்வரன்.
நாம் ஒன்றுபட்டு இன உணர்வோடு செயற்பட வேண்டும். இதனூடாக நாம் எமது மதத்திற்காக குரல் கொடுக்க வேண்டும். எமது மதத்தின் பாரம்பரியத்தை அழிக்க முனைபவர்களுக்கு எதிராக நாம் சாத்வீக ரீதியில் போராடுபவர்களாக இருக்க வேண்டும் இல்லாவிடில் நாம் ஏமாற்றப்பட்ட சமுதாயமாக மாறிவிடுவோம் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு பாலமீன்மடு, திராய்மடு இந்து சமய அபிவிருத்தி மன்றத்தின் 18 ஆவது ஆண்டு நிறைவு விழாவும், பரிசளிப்பு விழாவும் பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. அதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தலைவர் ந.ஜெகதீசன் தலைமையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார், இரா.துரைரெட்ணம், மட்டக்களப்பு மாநரசபை ஆணையாளர் மா.உதயகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
எமது இந்து மதம் உலகத்திலே நான்காவது இடத்தில் இருக்கின்றது. இங்கு எங்கெளுக்கென்று ஒரு நிலையான தலைமைத்துவம் இல்லாமையால் நாங்கள் இன்று சிதறடிக்கப்பட்ட நிலைமையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
எங்காவது ஒரு இந்து துன்பப்படும் போது நமக்கு அவ்வுணர்வு மின் அலை போல தூண்டப்படவேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் கூறியிருக்கின்றார். கடந்த காலத்திலே இலங்கை மண்ணிலே யுத்தத்தால் கொல்லப்பட்டவர்களுள் பெரும்பாலானவர்கள் இந்துக்கள். இதனால் எத்தனை இந்துக்களின் மனங்கள் கொதித்தெழுந்தன. யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் என்றுதான் நாம் குரல் கொடுக்கின்றோம் ஆனாலும் அதிலும் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் இந்துக்கள் என்று உரத்து குரல் கொடுப்பதற்கு நாம் தவறிவிட்டோம்.
அதனால்தான் இந்தியாவின் தமிழ் நாட்டில் மாத்திரம்தான் இலங்கைத் தமிழர்களுக்கு இன்னல்கள் இழைக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு நீதி வேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கின்றார்கள். ஏனைய மாநிலங்களில் அவை உரைக்கப்படுவதில்லை. காரணம் தமிழர் என்ற கோதாவில் மாத்திரம் நாம் செல்வதனால்.
ஆனால் நியாயமான முறையில் பெரும்பாலான இந்துக்கள் இந்த துன்பியலை அனுபவித்தனர் என்று கூறியிருந்தால் இன்று இந்தியா முழுவதும் எமக்காக குரல் கொடுத்திருக்கும். அதனை நாங்கள் தவறிவிட்டுவிட்டோம்.
எமது இந்து மதம் என்பது பெருங்கடல். இலங்கைத் தீவு ஒரு இந்துத் தீவு இதனை நாம் பல இடத்தில் குறிப்பிட்டிருக்கின்றோம் ஆனால் இந்த தீவில் நாங்கள் இந்து சமயம் சம்மந்தமான பாரம்பரியத்தை வரலாற்றை பூர்வீகத்தை இழக்கின்ற ஒரு சமுகமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
அந்தவகையில் இந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் கூட இந்துக்களாகிய தமிழ்மக்களின் வாழிடத்தைப் பறிக்கின்ற பல முயற்சிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அண்மையில் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் வெருகல் ஆற்றின் அருகில் ஒரு தீவுப்பகுதி எமது இனம் சாராத அரசியல்வாதியினால் எமது மக்களிடம் இருந்து கொள்வனவு செய்து எடுக்கப்பட்டிருக்கின்றது.
ஆனால் அந்த அரசியல்வாதி தற்போது அவர் வாங்கிய அந்த தீவிற்கு பாலம் போடுவதற்காக 1000 பாலங்கள் திட்டத்தின் கீழ் உட்படுத்தி அறிக்கை செய்திருக்கின்றார். அரசாங்கத்தால் கொண்டுவரப்படும் திட்டங்கள் அரசியல்வாதிகளின் இடங்களுக்காக பயன்படுகின்றது. இந்த நிலைமை தான் இங்கு இருக்கின்றது.
அந்த காணிகள் யாரால் விற்கப்படுகின்றது என்றால் அது எமது மக்களால் என்பது மிகவும் மனவருத்தத்திற்குரியது. இந்த நிலைமைகளில் மட்டக்களப்பு மாவட்டம் பெரும் ஆபத்தை எதிர் நோக்கிக் கொண்டிருக்கின்றது.
முன்பு நம் உரல் போல் ஒரு பக்கத்தால் அடிவாங்கிக் கொண்டிருந்தோம் ஆனால் இன்று தவில் போல் இரு பக்கமும் அடிவாங்கிக் கொண்டிருக்கின்றோம். எனவே இந்த நிலையில் நாம் சிந்திக்க வேண்டியவர்களாகவும் எமது காணி பூமிகளை பாதுகாக்க வேண்டியவர்களாகவும் இருக்கின்றோம். எங்களது காணிகள் பாதுகாக்கப்பட்டதால் தான் எமது இன மத அடையாளங்களைத் தக்க வைக்க முடியும். சமயம் என்றால் அங்கு தமிழ் பற்றி கதைக்க கூடாது என்று ஒன்றில்லை. சமயம் என்றால் தமிழ், தமிழ் என்றால் அது சமயம்.
நாம் எமது சமய பாரம்பரியங்களையும் பண்பாடுகளையும் கட்டிக்காக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். இந்த நாட்டில் கடந்த காலத்தில் நிலவிய முரண்பாடு மறைக்கப்பட்டு மத ரீதியாக இந்த செயற்பாடுகள் கொண்டுவரப்பட்டிருப்பதை எல்லோரும் உணர்வீர்கள்.
எமது மதத்தின் பாரம்பரியத்தை அழிக்க முனைபவர்களுக்கு எதிராக நாம் சாத்வீக ரீதியில் போராட வேண்டும். சீ.யோகேஸ்வரன்.
Reviewed by NEWMANNAR
on
March 27, 2014
Rating:

No comments:
Post a Comment