தெற்கு இந்திய பெருங்கடலில் மிதந்த காணாமல் போன விமான பாகங்கள் கடலில் மூழ்கின?
தெற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் மிதந்ததாக கூறப்படும், காணாமல்போன மலேசிய விமானத்தின் பாகங்கள் கடலில் மூழ்கியிருக்கும் என்று கருதப்படுகிறது. மலேசியாவில் இருந்து கடந்த 8ம் தேதி, சீனாவுக்கு புறப்பட்டு சென்ற போயிங் விமானம், கிளம்பிய ஒரு மணி நேரத்தில் காணாமல்போனது.
அந்த விமானத்தை தேடும் பணியில் 26 நாடுகள் ஈடுபட்டுள்ளன. 5 போர்க் கப்பல்கள் மற்றும் சீனா, ஜப்பான், அமெரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போர் விமானங்கள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் 2 மர்மமான பொருட்கள் மிதப்பதை ஆஸ்திரேலிய கடல் பாதுகாப்பு ஆணையம் செயற்கைக்கோள் புகைப்படம் மூலம் கண்டுபிடித்தது. அதில் ஒன்று 24 மீட்டர் அளவுக்கு நீளமானதாக இருந்தது.
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து தென்மேற்கு பகுதியில் 2,500 கிமீ தொலைவில் கடலில் இது மிதந்து கொண்டிருந்தது. ஆனால், அப்புகைப்படம் செயற்கைக்கோளால் 5 நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது. அதைப்பற்றி கவலைப்படாமல் உடனடியாக போர் விமானங்களை யும், கப்பல் ஒன்றையும் அப்பகுதிக்கு ஆஸ்திரேலியா அனுப்பி வைத்தது. கடலில் மிதந்த பொருட்கள், காணாமல்போன விமானத்தின் பாகங்களா என்று ஆராயும் பணியில் போர் விமானங்கள் அப்பகுதிக்கு சென்றது.
ஆனால், நேற்று முழுவதும் அப்பகுதியில் தேடியும் எந்த பாகமும் கிடைக்கவில்லை. இதனால் ஆஸ்திரேலிய போர் விமானங்கள் ஏமாற்றத்துடன் தளத்துக்கு திரும்பின. பப்புவா நியூகினியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் கூறுகையில், பக்கத்தில் நாடுகளே இல்லாத மிகப்பெரிய கடல்பகுதி அது. அங்கு வானிலை மோசமாக இருந்த நிலையில், 5 நாட்களுக்கு முன்பு கடலில் மிதந்த பாகத்தை தேடும் பணியில் எங்கள் ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டன.
மிதந்து கொண்டிருந்த பொருட்கள் கடலில் மூழ்கியிருக்க வேண்டும் அல்லது காற்று மற்றும் அலையின் வேகத்தில் அவை வேறு பகுதிக்கு அடித்து செல்லப்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். தொடர்ந்து விமானத்தை தேடும் பணியில் நாங்கள் ஈடுபடுவோம் என்றார். இதற்கிடையே, தெற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் மலேசிய விமானத்தை தேடும் பணியில் இந்தியா 2 நவீன போர் விமானங்களை ஈடுபடுத்தி உள்ளது.
தெற்கு இந்திய பெருங்கடலில் மிதந்த காணாமல் போன விமான பாகங்கள் கடலில் மூழ்கின?
Reviewed by NEWMANNAR
on
March 22, 2014
Rating:

No comments:
Post a Comment